சித்தர் சிந்திய முத்துகள் .......3/34

 

சிவவாக்கியம்-205 

பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.

பட்டத்தைபோன்று உயிர் பறந்து கொண்டும், யிற்றினைப் போல் உடம்பு இருந்து கொண்டும் அதனை இயக்கும் ஈசனால் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. பட்டம் அந்தரத்தில் பறப்பது போல உன் அரங்கத்தில் உயிர் பறந்து கொண்டு இருக்கிறது. அதில் மூச்சானது நூல் கயிற்றைப் போல ஓடிக்கொண்டிருக்கின்றது.  ஈசனை உன் பார்வையால் பார்த்து மூச்சுக் காற்றை கும்பகத்தால் நிறுத்தி படுமுடுச்சு போட வேண்டும். யோக ஞான சாதகத்தால் பூராக, கும்ப, ரேசகம் செய்து வாசியைப் பிடிக்கத் தெரியாமல் யாரையும் மனம் நோக வையாதீர்கள். சீவனாகிய உயிரையும், உடம்பையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தியானத்தைக் கடைப்பிடித்து உயிரின் உண்மையை உணர்ந்து அதில் உறையும் இறைவனை சிக்கெனப் பிடித்து அனைத்தையும் அறிந்த உள்ளங்கவர்ந்த கள்வனான ஈசனை அன்பினால் கட்டுங்கள்.  

******************************************* 

சிவவாக்கியம்-207


ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கைய்ரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ராசா கந்தமும்
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே!!!

பத்து மாத காலங்கள் தாயின் கருவறையில் அடங்கி நின்ற தீட்டினால் உயிர் வளர்ந்து, கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள் இரண்டு ஆகி மெய்யாகிய உடம்பு திரண்டு உருவானது. அதில் சத்தம் கேட்கும் காதுகளும் ரசமாகிய சுவை உணர வாயும், கந்தமாகிய நாற்றம் உணர மூக்கும் தோன்றி சுத்தமான உடம்பு ஆனதும்  உலகோர் சொல்லும் தீண்டத்தகாத தீட்டினால் உருவானதே என்பதே உண்மை.
******************************************* 

சிவவாக்கியம்-210


ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும்
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே!!! 
 
காலந்தோறும் சொல்லிவந்த மந்திரங்கள் அமைந்துள்ள ஆகம நெறிகளை கடைப்பிடித்து வாழ்ந்து வரும் போது மனைவி, மக்கள், உறவுகள், நட்புக்கள் என அனைத்தையும் மறக்கும் படியாக ஒரு நொடியில் மயக்க வந்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது? உடலில் உலாவிய உயிர் எங்கு போனது? ஆன்மா உடலிலேயே ஒளிந்து கொன்டதா? அல்லது அதுவே எங்குமான ஆகாயத்தில் போய் நின்றதா? ஆன்மாவில் சோதியாக துலங்கிய ஈசன் உடம்பை விட்டு எங்கு சென்று ஒளிந்து கொண்டான்? சோதி அப்போது இருக்கும் இடம் எங்கு என்பதை யாவும் சுவாமியாக வருபவர்கள் சொல்லி இறவா நிலை பெற உபதேசிக்க வேண்டும்.

******************************** .அன்புடன் கே எம் தர்மா.

 


0 comments:

Post a Comment