"இலங்கை எனும் அழகிய தீவே"
புயல் கடந்தாலும், புண்கள் மட்டும்
போய்விடாது மனதில் மீள,
இழந்த உறவின் நினைவுகள் இன்று
இரத்த கண்ணீராக ஊறும் காலம்…
அதிர்ந்த அண்டம் அடங்கியிருக்கலாம்…
ஆனால்
அதிர்ந்து நொறுங்கியது உங்கள் வீடுகள் மட்டும் அல்ல;
உங்கள் நெஞ்சங்களும்.
வெள்ளம் எடுத்துச் சென்றது
மண் மட்டும் அல்ல;
நீங்கள் நேசித்த முகங்களையும்
சிரிப்புகளையும்…
அவர்களின் குரல் இன்றும்
காற்றில் ஏங்குவது போல.
தாய்
கண்ணீரால் நனைந்த ஆடையின் ஓரம் நெஞ்சில் அழுத்திக் கொண்டு,
“என் குழந்தை எங்கே?” என
நிசப்தத்துக்குள் கூவுகிறாள்…
தந்தை
உடைந்த கதவின் முன் நிற்க,
கண்முன்னே அடித்துச் செல்லப்பட்ட
தன் இரத்தங்களை
“நான் காப்பாற்ற முடியவில்லையா?”
என்று தன் மனதைத் தகர்த்துக் கொள்கிறார்…
அன்று அவளுடன் விளையாடிய
அயல் குழந்தைகள்
பெற்றோருடன்
வாழ்ந்த வீட்டினோடு மண்ணுள் புதைந்ததும் புரியாமல்
மீண்டும் வருவார்கள்
என்ற நம்பிக்கை
அவள் கண்களில் மட்டும்
புதைந்து
தாங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால்…
இந்த உலகம் முழுவதும்
உங்கள் கண்ணீரின் வெப்பத்தை உணர்ந்துள்ளது.
தொலை தூரத்தில் வாழும் உங்கள் பிள்ளைகள்—
புலம்பெயர் இலங்கையர்கள்—
மனத்தை நசுக்கும் துயரத்தோடு
உதவி என்ற அன்பை
விடியற்கால ஒளிபோல் அனுப்புகிறார்கள்.
உன் நிலம் நொறுங்கியதே தவிர,
உன் நெஞ்சின் நம்பிக்கை நொறுங்கவில்லை;
அதனால் தான்…
புலம்பெயர் இலங்கையர் உள்ளம்
உதவியென்ற மழையாக பொழிகிறது.
உலக நாடுகள்
கைகளில் மருத்துவம்,
இதயத்தில் இரக்கம்,
உதவிகள்
உங்கள் வாழ்வில் ஒளி வீச
தாராள அன்புடன் நிற்கின்றன.
நீங்கள் மட்டும் அல்ல…
உலகமே இன்று உங்கள் அருகில்
மௌன பிரார்த்தனையாய்
தோள் கொடுத்து நிற்கிறது.
கண்ணீர் வேளைக்கு
காலம் கொஞ்சம் தேவைப்பட்டாலும்—
நம்பிக்கை மலர்வதற்கு
ஒரு மெய்ப்பிரியரும் போதும்.
நீங்கள் எழும்பீர்கள்.
எங்கள் தேசம் எழும்பும்.
உடைந்த கற்கள் மீள கட்டப்படலாம்…
உடைந்த இருதயங்கள் கூட
அன்பால் மீண்டும் உருவாகலாம்.
இலங்கை என்ற சொல்
ஒரு வரைபடம் அல்ல—
அது எங்களின் இதயம்.
அது இன்னும் துடிக்கிறது.
அது மீண்டும்
புதுப் பொலிவுடன் பிரகாசிக்கும்.
இன்று துயரம்…
நாளை எழுச்சி…
எல்லாக் காலமும்
நம்பிக்கை தான் முடிவாகும்.
இலங்கை எனும் அழகிய தீவே,
உன்னை மீட்டெடுக்க வரும் கரங்கள் பல;
நீ எழுந்திரு…
புதிய வெளிச்சங்கள் உன் வழிக்கு
விரிந்து தயாராகி விட்டன.
-மனுவேந்தன் செல்லத்துரை
"யாரொடு நோக"
[அந்தாதிக் கவிதை]
"யாரொடு
நோக என்னையே கேட்கிறேன்
கேட்கிறேன்
தினம் வானத்தைப் பார்த்து
பார்த்து
பார்த்து கண்ணும் கலங்கியது
கலங்கிய
மனதில் குண்டுகள் வெடிக்குது!
வெடித்து
சிதறிய உடல்களைக் காண்கிறேன்
காண்கிறேன்
என்றும் அவைகளின் கண்ணீரை
கண்ணீரால்
கழுவிய இரத்த உடல்களை
உடல்களைத்
தாண்டி ஓடும் மனிதர்களை!
மனிதர்களை
மதியா குண்டு விமானங்களை
விமானங்கள்
சத்தத்தில் பதுங்கும் குழந்தைகளை
குழந்தைகள்
பட்டினியில் படும் வேதனைகளை
வேதணையிலும்
தளராத மண்ணின் மைந்தர்களை!
மைந்தர்கள்
போற்றிய நீதி தேவதையை
தேவதைகள்
வாழ்ந்த எங்கள் மண்ணை
மண்ணோடு
மண்ணாய் மடிவதைப் பார்த்து
பார்த்து
கலங்குகிறேன் யாரொடு நோக!"
"வாசிப்பு"
[அந்தாதிக்
கவிதை]
"வாசிப்பு
உங்கள் அறிவை வளர்க்கட்டும்
வளர்க்கும்
அறிவு பண்பு கொடுக்கட்டும்
கொடுக்கும்
பண்பு மனிதம் நேசிக்கட்டும்
நேசிக்கும்
மனிதர்கள் தர்மம் காக்கட்டும்
காக்கும்
தலைவர்கள் நீதி நாட்டட்டும்
நாட்டும்
மரங்கள் இயற்கை பேணட்டும்
பேணும்
நேர்மை எதிலும் ஒலிக்கட்டும்
ஒலிக்கும்
குரலில் பாசம் ஓங்கட்டும்
ஓங்கும்
ஞானம் குடிகொள்ளட்டும் மனதில்
மனதுக்கு
பயிற்சி புத்தக வாசிப்பு!"
"என்றுமே
முதலாளி"
"என்றுமே
முதலாளி உழுதுண்டு வாழ்பவரே
எல்லோர்
நலமும் இவர்களின் கையிலேயே
எண்ணிப்
பாருங்கள் பெருமை தெரியுமே
எருதுகளை
ஏர்பூட்டி ஆழமாக உழுபவரே
எழுச்சி
கொண்ட உலகின் இறைவனே!"
"உழவர்
மகிழ்ச்சியால் ஆக்கும் ஓசையும்
உடைத்துப்
பாய்கின்ற ஆர்ப்பரிக்கும் சத்தமும்
உன்னைக்
காட்டும் பார் போற்றும்
உயிரின்
பெருமை அங்கு புரியும்
உவகை
பொங்கும் தலைவன் நீயே!"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி,
யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment