அறிவியல்=விஞ்ஞானம்
🤖ரோபோக்களுக்கு மனித வடிவ கைகள் தயார் !
வித்தியாசமான ரோபோ கரம் ஒன்றை உரு வாக்கியிருக்கிறது சீனாவின் வூஜி டெக். 'ஹ்யூமனாய்டு' எனப்படும் மனித வடிவ ரோபோக்களுக்கு பொருத்தக் கூடிய இயந்திரகண், காது, கை, கால், மூட்டுகள் போன்ற தனித்தனி பாகங்களை தயாரிக்க, இன்று சீன நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. வூஜி டெக்கின் ஐந்து விரல் ரோபோ கரம், மனித உருவ ரோபோக்கள் மற்றும் தொழிற்சாலை ரோபோக்களுக்கு பொருத்தக்கூடிய வகையில் உருவாக்கபட்டுள்ளது.
ரோபோக்களுக்கு, மனிதக் கைகளைப் போன்றே செயல்படும் கைகளை வடிவமைத்து தயாரிக்கும் பொறியியல் செலவைக் குறைப்பதன் வாயிலாக, மனிதனைப் போலவே நடமாடும் ரோபோக்களை நிஜ உலக வேலைகள் மற்றும் தொழிற்சாலைப் பணிகளுக்கு விரைவாகக் கொண்டுவர முடியும்.
🗢வைரஸுக்கு எமன் ஏலக்காய்
நீண்ட நெடுங்காலமாக நம்முடைய இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் ஏலக்காய் பயன்பட்டு வருகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று வைரஸ்களுக்கு எதிராக நம்முடைய உடலைத் தயார் செய்யும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு என்று கூறுகிறது.
ஜப்பான் நாட்டில் உள்ள ஷின்ஷு பல்கலை ஆய்வாளர்கள் வைரஸ் நோய்களுக்கு தாவரங்களில் உள்ள சேர்மங்கள் எப்படி தீர்வாக அமையும் என்பது குறித்து ஆராய்ந்து வந்தனர். அப்போது ஏலக்காயில் உள்ள 1, 8 - சினியால் எனும் சேர்மம் வைரஸ்களுக்கு எதிராக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் போராடுவதற்கு உதவும் என்று கண்டறிந்தனர். இதை நேரடியாக சோதிக்க வேண்டும் என்பதற்காக மனித நுரையீரலில் இருக்கும் A549 எனும் செல்களை தனியே பிரித்தனர். அதன் மீது 1, 8 - சினியாலைச் செலுத்தினர். பிறகு அதே செல்களுக்குள் வைரஸையும் செலுத்தினர்.
இந்த சினியால் செல்களில் இருக்கிற நியூக்ளியர் அமிலங்களை துாண்டிவிட்டது. இந்த அமிலங்கள் வைரஸின் டிஎன்ஏ, ஆர்ஏ மூலக்கூறுகளை புரிந்துகொண்டன. வெகு குறைந்த நேரத்தில் இந்த அமிலங்கள் சைட்டோகைன்ஸ் எனும் நோய் எதிர்ப்பு செல்களுக்கு சமிக்ஞை கொடுத்தன. இதனால் நம்முடைய உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் துாண்டப்பட்டு வைரஸை சுலபமாக அழித்தன.
எனவே வெளியில் இருந்து மருந்து கொடுக்காமல் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை துாண்டி வைரஸுக்கு எதிராக போராட வைக்கும் ஆற்றல் ஏலக்காயில் உள்ளது என்பது இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
⽪சருமத்திற்கு கேடு ஏற்படாமல்
தென் கொரிய விஞ்ஞானிகள் கண்ணாடி போன்ற புற ஊதாக் கதிர் உணர்வான்களை உருவாக்கியுள்ளனர். இதை ஆடை, அணி கருவிகளுடன் ஒட்டிக்கொள்ள முடியும். வெயில் அபாய அளவை எட்டும் முன், இந்த உணர்வான் ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கை அனுப்பும். இதன் வாயிலாக சருமத்திற்கு கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
💡இதயத்துக்கு எமனாகும் இரவு வெளிச்சம்
இரவுப் பணி காரணமாக, செயற்கையான மின்விளக்கு வெளிச்சத்தில் அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. இதனால், உடலில் உள்ள இயற்கைக் கடிகாரம் குழப்பமடைந்து பல வித நோய்கள் வரக் காரணமாகிறது.
இது குறித்து உலகில் இதுவரை செய்யப்பட்ட ஆய்விலேயே மிகப்பெரிய ஆய்வை ஆஸ்திரேலியாவின் ப்லிண்டர்ஸ் பல்கலை செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இது 9.5 ஆண்டுகள் 40 வயதுடைய 88,905 மக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் இரவு நேரம் விழித்திருந்து மின் விளக்கு வெளிச்சங்களில் வேலை செய்பவர்கள், பகலில் வேலை செய்பவர்கள் என்று இரு தரப்பினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. ஆய்வு முடிவில் இரவு 12.30 முதல் காலை 6 மணி வரை செயற்கை வெளிச்சத்தில் இருப்பவர் களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பிறரை விட 56
சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்தது.
வெளிச்சத்தின் அளவு 'லக்ஸ்' எனும் அலகில் அளக்கப்படுகிறது. இரவு வானத்தின் வெளிச்ச அளவு 0.01 லக்ஸ், இதுவே சிறிய இரவு விளக்கு பொருத்தப்பட்ட அறை என்றால் அதன் வெளிச்ச அளவு 5 லக்ஸ்.
105.3 லக்ஸ் வெளிச்ச அளவில் வேலை செய்பவர்களுக்கு மோசமான இதய பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
எனவே இரவில் துாங்கி, பகலில் சூரிய வெளிச் சத்தில் செய்வதே சிறந்தது என்பது அறிவியலாளர்கள் கருத்து.
📻இசையைக் கேட்பதால்
ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், தொடர்ந்து இசையைக் கேட்பதால் வயதான காலத்தில் மறதி ஏற்படும் வாய்ப்பு 39 சதவீதம் குறைவது தெரிய வந்துள்ளது.
🍐மலச்சிக்கல்
கிவி பழம், கேழ்வரகு, அதிக தாதுக்கள் நிறைந்த தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
🐜எறும்புக் கூட்டத்தில்
பெரிய கருப்பு எறும்புக் கூட்டத்தில் கிருமிகள் தொற்று ஏற்பட்டால், அவை தங்கள் கூட்டின் சுரங்கப்பாதைகளை அகலப்படுத்துகின்றன. வரிசையில் ஊரும்போது இடைவெளி விடுகின்றன. இது மனிதர்கள்பெருந்தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு இணையானது என்கின்றனர் (Nathalie Stroeymeyt என்ற entomologist PhD Biological Sciences, University of
Bristol / England) பூச்சியியல் ஆய்வாளர்கள்.
겶வேகம் கொண்ட 'பேண்டேஜ்'
தைவான் தேசிய பல்கலை ஆராய்ச்சி யாளர்கள், நானோ இழைகள், உணரிகள், ஸ்டெம்செல் போன்ற வற்றைக் கொண்ட 'பேண்டேஜ்'களை உருவாக்கி உள்ளனர். இவை தொற்று களைக் கட்டுப்படுத்தி, புதிய திசுக்களை மீண்டும் உருவாக்கி, காயங்களை ஆற்றுவதில், பழைய சிகிச்சை முறைகளை விட வேகமாகச் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது.
🛪ஒரு மணி நேரத்தில் உலகின் மறுபக்கம் போகலாம்!
ஒலியின் வேகத்தை மிஞ்சி விமானங்கள் பறப்பதற்குத் தடையாக, காற்றியக்கவியலில் ஒரு புதிர் இருக்கிறது. அந்தப் புதிரை அமெரிக்காவிலுள்ள ஸ்டீவன்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விடுவித்துள்ளனர். மாதிரி ஹைப்பர்சோனிக் விமானங்களை 'காற்றுச் சுரங்க' சோதனைகளை அவர்கள் செய்து பார்த்தனர். ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகமான 'மாக் 6' வேகத்தில் நடத்திய சோதனைகளில், காற்றின் படபடப்பு (turbulence) தாறுமாறாக இல்லாமல், மிகவும் கணிக்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது என்று ஸ்டீவன்ஸ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதிவேகமாக எதிர்வரும் காற்றும், குறைவான வேகத்தில் பயணிக்கும் விமானங்கள் எதிர்கொள்ளும் காற்றும், காற்றியக்கவியலின் அடிப்படை விதிகளையே பின்பற்றுகின்றன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்றுப் படபடப்பின் பின்னால் உள்ள இயற்பியலை மறுபடியும் ஆராய வேண்டியதில்லை என்றால், விமான வடிவமைப்பாளர்கள், பிற சவால்களில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக, உந்தும் காற்றழுத்தம், எகிறும் வெப்பம், உடையும் பொருட்கள் போன்ற, சூப்பர்சோனிக் விமான வடிவமைப்பில் உள்ள பிற சவால்களில் கவனம் செலுத்தலாம். இந்தச் சவால்கள் தீர்க்கப்பட்டால், விமானங்கள் ஒருநாள் 'மாக் 10' வேகத்தில் பயணிக்க முடியும். சிட்னியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலான பயணம் 15 மணி நேரத்திற்குப் பதிலாக ஒரு மணி நேரமாகக் குறையலாம்.
ஆக, காற்றியக்கவியலில் இருந்த ஒரு புதிர் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, சூப்பர் சோனிக் விமானப் பயணம், பூமியின் தாழ் சுற்றுப் பாதையில் பயணம் போன்றவற்றுக்கு திறவுகோலை வழங்கியிருக்கிறது.
தொகுப்பு: செ .மனுவேந்தன்
0 comments:
Post a Comment