இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"
திடீரென்று, இசை ஆர்வமாக சிரித்தபடி புத்தர் இடம் கேட்டான். “சுவாமி, புத்தரே, நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் வந்தேறு குடியாக தஞ்சம் அடைந்த, சிங்க மிருகத்தின் வாரிசு, கெட்ட
விஜயனும், தந்தைக்கு பிறக்காத, இறந்த புத்த குருவின் மறுபிறப்பான துட்டகாமினியும், எப்படி
நேரடியாகச் சொர்க்கம் போனார்கள்?, ஆனால் அதற்கு முதல் புத்தர் மீண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாகி விட்டார். இசை கொஞ்சம் முணுமுணுத்தபடி, என்னை பார்த்து கேட்டான், 'தாத்தா, நரகம் மிகவும் பயங்கரமானதா, அங்கு போகாமல் தப்பிக்க, கொலைகள் கொள்ளைகள் செய்பவனும், தன் ஒரு பங்காக ஆலையங்கள் கட்டி அன்னதானம் செய்தால் போதுமா ?”
அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம்
பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்!
இன்பம் துன்பம் சமமாக மதித்து
கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோம்!
உரிமை உள்ள மனிதனாக
பெருமை கொள்ளும் இனமாக
வறுமை அற்ற குடியாக
சிறுமை போக்கி நகருவோம்!
ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும்
ஆக்கம் கொண்ட சமூகமும்
ஈவிரக்கம் காட்டும் அரசும்
தரமான உலகைத் தரும்!
பாசம் உலாவும் கண்களாய்
மோசம் செய்யா இதயமாய்
எங்களை நாங்கள் ஆக்கினால்
தேசம் ஓங்கிச் சிறக்கும்!
பக்கத்தில் இன்னும் நின்ற சிவன் சிரித்தார். அவர் கண்கள் மறுமொழி கொடுத்துக்கொண்டு இருந்தன. பின் “நீங்களே ஏன் போய் நேராக
பார்க்கக்கூடாது?” என்று கேட்டார். இசையும் நானும் சம்மதம் தெரிவிக்க, சிவனின் ஏற்பாட்டில், ஒரு கண் சிமிட்டலில், நாம்
பாதாள உலகத்திற்குள் இறங்கினோம். ஆனால் இது பண்டைய நூல்களில் இருந்தது போல் அல்லது கற்பனை செய்த பயங்கரமான இடம் அல்ல. இது உண்மையில் தண்டனை அல்ல, கற்றலின் ஒரு பகுதி போல் இருந்தது. அதன் இதயத்தில், மத்தியில் சத்ய சாய் பாபா
அமர்ந்திருந்தார், அவரைச் சுற்றி மரியாதைக்குரிய ஓஷோ (பகவான்
ரஜ்னீஷ் சந்திர மோகன்), ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி [நிர்மலா ஸ்ரீவஸ்தவா] அமர்ந்திருந்தனர் மற்றும்
சில இடங்கள் நித்யானந்தா, ஆசாரம் பாபு, குர்மீட் ராம் ரஹிம் சிங், ராதே மா போன்றோருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. - சிலர் மனிதர்களால் கடவுள்களாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர், சிலர் தாங்களே தங்களை தவறாக கடவுளாக காட்டியவர்கள், ஆனால் அனைவரும் பணிவுடன் இங்கு பிரகாசித்தனர்.
சாய்பாபா எங்களை வரவேற்றார். "கந்தையா தில்லை, இதோ, இங்கே மீண்டும் நரகலோகம் வந்த மக்களுக்கு அவர்களின் தவறுகளைக் சுட்டிக் காட்டி மீண்டும் எழுச்சி பெற வழிவகுக்கிறோம்." என்றார். இசை
'இவரின் படத்தை தானே, அம்மம்மா சாகும் பொழுது கையில் வைத்திருந்தார்? பாவம் அம்மம்மா, தப்பிவிட்டார்!' என எனக்கு காதில்
முணுமுணுத்தான்.
இங்கே மதிய உணவு அடக்கமாக இருந்தது - சப்பாத்தி, எலுமிச்சை சாதம், மசாலா பருப்பு, ஆனாலும் அது வெறும் சாப்பாடாக இல்லாமல், அந்த உணவில் அவர்களின் மன்னிப்பும் ஞானமும் கலந்து இருந்தது. அது மட்டும் அல்ல, இந்த உணவு ஆடம்பரமானதாகவோ அல்லது பிரமாண்டமாகவோ இல்லை என்றாலும், ஊட்டமளிக்கக் கூடியதாகவும் ஆறுதலளிக்கக் கூடியதாகவும் இருந்தது. பணிவு, சிக்கனம் மற்றும் விருந்தோம்பல் அங்கு தெரிந்தது.
இந்த கடவுள்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் பூமிக்குரிய காலங்கள், பாராட்டுகள் மற்றும் தவறுகள், அவர்கள் பெற்ற அன்பு மற்றும் அவர்களை சிக்க வைத்த சம்பவங்கள் பற்றி எங்களுடன் பேசினர். ஆனால், தாம் மீண்டும் அதே பாணியில் இங்கு வாழ்வதால், பிரச்சனை இல்லை என்று மகிழ்வாகக் கூறினர்.
இலங்கை பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, அரசியலால் திரிக்கப்பட்ட நம்பிக்கை எவ்வாறு அற்புதங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியது என்பதையும் மற்றும் அவர்களின் உரையாடலையும் இசை, விளங்குதோ விளங்கவில்லையா கண்களை விரித்து ஆச்சரியமாகக் கேட்டான், சாய்பாபா, எதோ கையை மேலே உயர்த்தினார். ஒரு தங்கச் சங்கிலி எடுத்து, 'இசை'யின் கழுத்தில் போட முயன்றார். ஆனால் இசை அதை தட்டி விட்டான். அவன் பார்த்த பார்வை, இன்னும் உங்க புத்தி மாறவில்லையா' என்று கேட்காமல் கேட்டது?
சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன், நானும்
இசையும் சொர்க்கத்திற்குத் மீண்டும் திரும்பினோம். உண்மையில் இங்கு இரவோ பகலோ கிடையாது. நான் என் ஆப்பிள் மணிக்கூடு சொல்லுவதை வைத்து கூறுகிறேன். இங்கே வானம் அந்தி நீல நிறங்கள் மற்றும் தங்கக் கோடுகளின் திரைச்சீலை போல் மாறியது. சந்தன மரத்தின் நறுமணம் காற்றில் எங்கும் பரவியது. அன்று முழுவதும் நான் காபி குடிக்கவில்லை, நா வறண்டது. மாலை காபியாவது குடிப்போம் என்று தேடினேன். அப்போது தேவலோகத்தில் ஒரு தேவர்களும் தேவதைகளும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. அப்பொழுது காமதேனுவை அங்கு கண்டேன். அது வந்து "ஐயனே, என்ன வேண்டும்?" என்று கேட்டது. ஒரு நல்லா ஸ்ட்ராங்கா காபி கொண்டுவா என்றேன். ஆனால் அதுவும் தன்னால் அது இயலாது என்று சொல்லிவிட்டது.
எதோ சப்தம் கேட்டு, திரும்பி பார்த்தேன். அங்கே தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். தங்க மோகம் இங்கு அதிகம் போல் எனக்குத் தெரிந்தது. அப்பத்தான் நல்லூர் ஞாபகம் வந்தது , அங்கே வாசலில் அலங்கார நல்லூரானின் பொருள் இப்ப விளங்கியது!
எங்கள் இருவரையும் ஒரு தெய்வீக மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு தெய்வீக நடனக் கலை பார்க்க அன்று இரவு ஏற்பாடு செய்தனர். இந்த மண்டபம் உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன் மயன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது என்று ஒரு விளக்கமும் தந்தனர். இசை அவர்கள் சொல்லி முடிப்பதுக்குள் மண்டபத்துக்குள் ஓடிவிட்டான். எமக்கு துணையாக நாரதரும் வந்தார். ஒரு மூலையில் யமன் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதைக்கண்டேன். நல்லவேளை இசை அந்த பக்கம் போகவில்லை!
சொர்க்கம் போக ஆசைப் பட்டேன்
சொர்ண சுந்தரியை அன்று மறந்தேன்
பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன்
வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !
சொர்க்கத்தில் இன்று இசையுடன் நான்
தூர்ந்த கனவை தூசு தட்டுகிறேன்
பார்த்து ரசித்து பூசை செய்கிறேன்
நேர்த்திக் கடனாய் காவடி ஆடுகிறேன் !"
"மர்ம சாமியார்கள் புடை சூழ
ஊர் வலம் சென்றேன் நரகத்தில்
நேர்மை பற்றி பிரசங்கம் செய்து
சர்ச்சை இல்லாமல் திரும்பி வந்தேன் !"
"ஊர்வசி திலோத்தமை ஆட்டம் காண
பார்வதி துணைவனுடன் சொந்தம் கொள்ள
சொர்க்க லோகத்தில் குடி கொள்ள
அர்த்த ராத்திரியிலும் பஜனை செய்கிறேன் !
[பாகம் 04 தொடரும்…]
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
0 comments:
Post a Comment