தொடர் கதை - பாகம் 02 "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன்

  "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை

 [தொடர்கிறது...]


", கந்தையா தில்லை! நீங்கள் உங்கள் குட்டிப் பேரன் இசையுடன் வந்திருக்கிறீர்கள்," என்று சிவன் கூறினார். "வா, வா - காலை உணவு தயாராக உள்ளது", என அன்பாக வரவேற்றார்.

பின் சிவா, 'இசை'யை பார்த்து என்னை ஒருவன் பதினாறு அகவையில், 'பித்தா பிறைசூடி பெருமானே' என்று பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே என்று திட்டினான், நியோ அவனின் வர்க்கமூல அகவையில் தாளம் காட்டும் நடையுடன் புகழ்ந்து வருகிறாய்' என்று மெச்சினார். 

நாம் இருவரும் ஒரு தெய்வீக கொற்றக் குடையின் கீழ் அமர்ந்தோம். தட்டுகள் தங்க நிறத்தில் இருந்தன, உணவு வானளாவியதாக இருந்தது - மேகங்களைப் போல மென்மையான இட்லிகள், நெய் சொட்டும் பொங்கல், பூமியில் உள்ளதை விட இனிமையான தெய்வீக மாம்பழங்கள் அங்கு எமக்கு இருந்தன. தியானத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்த புத்தர் எமக்கு மல்லிகை தேநீர் வழங்கினார். பார்வதி இசைக்கு ஒரு பிரகாசமான இனிப்பு லட்டுவை வழங்கினார். அது 'இசை'யை மகிழ்ச்சியுடன் சிரிக்க வைத்தது.

காலை உணவுக்குப் பிறகு, நான் , "சுவாமி, நாங்கள் சில முக்கிய கேள்விகளுடன் வந்துள்ளோம். எங்கள் அன்பான நிலமான இலங்கையில் என்ன நடக்கிறது?" என்று ஆரம்பித்தேன்.

சிவன் பெருமூச்சு விட்டார், அவரது மூன்றாவது கண் மெதுவாக மினுமினுத்தது. "கந்தையா தில்லை, மண் நினைவால் அழுகிறது. போரின் வலி, அதிகார பேராசை, உண்மையின் மௌனம் - அது இன்னும் எதிரொலிக்கிறது." சுருக்கமாக கூறினார்! ஆனால் எனக்கு, அந்த விளக்கம் சற்றும் திருப்தி அளிக்கவில்லை, என் வாய் 'வாடா வாடா, சுடலை மாடா, அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காம எங்கிட்டும் நிற்காம, என் கவலை தீர்க்க உடனே நீ ஓடி வாடா' என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தது.

சிவனுக்கு அது கேட்டிருக்க வேண்டும். சிவன் தொடர்ந்தார் 'செம்மணியில் செய்யப்பட்டது வெறும் கொலை அல்ல - அது வாழ்க்கையை, தர்மத்தையே அவமதிப்பதாகும். பெண்கள், குழந்தைகள், மண்ணின் மைந்தர்கள் பாதுகாப்பதாக சத்தியம் செய்தவர்களால் சாம்பலாக மாற்றப்பட்டனர். ஆனாலும் நிலம் நினைவில் கொள்கிறது - சாட்சியமளிக்க மண் இன்று செம்மணியில் எழுகிறது.' என்றார்!

'யாழ்ப்பாண நூலகத்தைப் பற்றியும் நான் கூறவேண்டும். சரஸ்வதி வீணையுடன் முன்னுக்கு இருந்தாள், ஆனால் கண்மூடி இருந்துவிட்டாளே?' ஒரு பெருமூச்சு விட்டார். 'அறிவுக் கோயில் எரிமலையாக மாறியது - காலத்தால் அல்ல, வெறுப்பால். அந்த நெருப்பு புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் எரித்தது. புத்தகங்களை எரிப்பவர்கள் நாகரிகங்களை எரிக்கிறார்கள்.' என்று கோபத்துடன் கூறினார்.


வானரத்தின் வழிவந்த வன்முறையாளர்

வளந்தரு நூலகத்தை தீமூட்டி எரித்தார்!

கானகத்தின் அமைதியில் தியானித்தவன்

கருத்தபுகையில் சத்தியம் இழந்தான்!

போதிமரமும் கொதித்து எழ, புத்தனும்  

போதனையைக் கைவிட்டு சிலையானான்!


என்னை ஏறிட்டு பார்த்தார். பின் இசையை கட்டித் தழுவியபடி, 

'தமிழ் கண்ணீரில் நனைந்த நிலத்தில் என் சகோதரன் புத்தரின் சிலையை வலுக்கட்டாயமாக எழுப்புவது வழிபாடு அல்ல - அது அவமானம். சிவன் என்ற நான், மதம் என்ற போர்வையில் வெற்றியை ஆசீர்வதிப்பதில்லை. கீழே புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்து நீதி முளைக்கும் வரை, இரத்தம் தோய்ந்த மண்ணில் தர்மம் மலர முடியாது. அதுவரை, இந்த நிலம் தூங்காது.' என்று அமைதியாக கூறினார்.

பின் 'லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை உண்மை கூற விரைவில் அனுப்புவார் என் நண்பர் புத்தர்' என்றார்.

பார்வதி கருணையுடன் கூறினார், "ஆனால் நம்பிக்கை சிறிய இதயங்களில் வாழ்கிறது. இசை போன்ற குழந்தைகள் இரக்கத்தின் ஜோதியை சுமப்பார்கள்." என்றார்.

பக்கத்தில் இந்திரன் [Sakka, king of gods], விஸ்ணு [Upulvan / උපුල්වන් දෙවියෝ] சூழ நின்ற புத்தர் புன்னகைத்தார், "துன்பம் இருக்கிறது, ஆனால் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாதையும் இருக்கிறது. இப்போதும் கூட, சாம்பலுக்கு மத்தியில், கருணையின் விதைகள் வளர்ந்து வருகின்றன." புத்தர் தொடர்ந்தார்,

"நான் அஹிம்சையைக் கற்றுக் கொடுத்தேன் - வெறும் செயலில் அல்ல, சிந்தனையிலும். செம்மணியில், இறந்தவர்களின் மௌனம், பேச்சை விட சத்தமாக அழுகிறது. அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்படும்போது, தேசம் பூமியை மட்டுமல்ல, அதன் சொந்த மனசாட்சியையும் தோண்டி எடுக்கிறது." என்று ஒரு பெருமூச்சு விட்டார்.

"என்னை சிலையாகி எங்கும் திணிக்கிறார்களே தவிர, வேறு ஒன்றையும் நான் காணவில்லை?" ஏக்கத்துடன் என்னைப் பார்த்தார். 'இசை'யை வாரி எடுத்து கொஞ்சினார். 'யாழ்ப்பாண நூலகத்தின் அழிவு வெறும் புத்தகங்களின் இழப்பு அல்ல - அது ஞானம், கலாச்சாரம், நினைவாற்றல் ஆகியவற்றின் மீதான தாக்குதல். தீயை மூட்டியது மாறன் ( Mara / இவன் ஒரு அசுரன், தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் ஆவான். ) அல்ல, மாறாக வெறுப்பால் மேகமூட்டப்பட்ட கொடிய மனிதர்கள்!'.

'அன்பு அல்லது சம்மதம் இல்லாமல் தமிழ் நிலங்களில் எனது உருவத்தை வலுக்கட்டாயமாக வைப்பது தம்மம் அல்ல - அது ஒரு துறவியின் உடையில் அரசியல் நாடகம். அடக்குமுறையின் மூலம் பிறந்த ஒரு கோயில், அமைதிக்கான இடம் அல்ல, மாறாக பாசாங்குத்தனத்தின் நினைவுச்சின்னம். நான் உண்மையிலேயே அந்த சிலைகளில் இருந்தால், நான் கட்டாயம் அழுவேன்.' என்றார்

"ஒன்றை நினைவில் வையுங்கள் 'என்னைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு: ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். எலும்புகள் மற்றும் முள்வேலி மீது நான் எப்போதாவது அமைதியைக் கட்டினேனா??" புத்தர் துக்கம் தாளாமல் அழுதார்.

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே

கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே

செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே  

காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே

பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே

புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே

அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே

விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே

விளக்கம் இல்லாத மதபோதனை எனோ

களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!  

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே  

இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே 

பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே

சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!  

பாகம் 03 தொடரும்...

⏺அடுத்த பகுதி வாசிக்க... அழுத்துக...

ஆரம்பத்திலிருந்து வாசிக்க,,, அழுத்துக...

🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment