உன் நிலை மாறாதே!
யாரோ ஒருவற்காய் உனது - கொள்கை
. . . ஏதும் மாற்றிக் கொள்ளாதே!
நேராய் நின்ற மெய்நெறியை - என்றும்
. . . நெஞ்சில் ஏந்தி நீநிற்பாய்!
மாறிப் போகும் மனங்கள்இங்கே - கோடி
. . . உண்டு இவ் வுலகினிலே;
கூறும் அளவுகோல் ஒவ்வொன்றும் - காலக்
. . . கோலத் தால்மாறிப் போகுமே!
நின்ற நிலையில் உறுதிகொண்டால் - நீயே
. . . வாழ்வில் உயர்வடைவாய்!
சென்ற காலப் பெருமைகளை - உனக்குத்
. . . துணையாய்க் கொண்டு காத்திடுவாய்!
ஒன்றுக்கு மாறின் பலவுக்கும் - மாறும்
. . . பழக்கம் உனக்கு வந்திடுமே!
நன்று அன்று இம்மாற்றம் - உனது
. . . நலத்தை அழித்து விடுமே!
உன்னை நீயே உறுதியுடன் - காக்கும்
. . . பண்பே உனது பெருமையாம்!
மண்ணில் வாழும் உயிரெல்லாம் - மதிக்கும்
. . . சிறந்த நெறியும் அதுவேயாம்!
தன்னை மறந்த மாற்றங்கள் - உனது
. . . தகைமை தன்னை வீழ்த்திடும்;
நின்னிலை நழுவச் செய்திடும் - என்பது
. . . திண்ணம் என்று உணர்வாயே!
🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺
'காவலாய் நிற்கும் மரங்கள்'
காவலாய் நிற்கும் மரங்கள் எங்கே
காற்றாய் மறைந்து போனது எனோ?
காடுகள் அழித்து நகரம் வந்ததோ
கால மாற்றத்தால் வெள்ளம் புகுந்ததோ?
கோலம் மாறும் மனித சமூகம்
ஆல மரத்தின் நிழல் அறியாதோ?
உலகம் தேடும் வானிலை மாற்றம்
நலமாக இனி எமக்கு அமையாதோ?
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
தனிமையும் தியானமும்
புறத்து அழகின் மாயை அறிந்து,
அகத்தின் அமைதி தேடுகிறேன்...
தவறான ஈர்ப்பின் பிடியில் இருந்து,
தனிமை கொண்டு மீளுகிறேன்!
அலைபாயும் இந்த மனதை அடக்க,
தியானம் ஒன்றே வழி என்பேன்...
கண்ணில் தெரியும் பொய்யை விலக்கி,
உண்மை ஒளியைக் காண்கின்றேன்!
வெறும் உணர்வில் என்னை இழக்காமல்,
உயிரைத் தேடிப் பயணிக்கிறேன்...
உள்ளம் தௌிந்து, அமைதி கொண்டு,
தனிமையில் என்னை உணர்கிறேன்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment