''கல்வியே உயிர்வழி!....''. “செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”


"கல்வியே உயிர்வழி!"

வைத்தியமும் பொறியியலும் வழக்கறிஞர் படிப்பினையே

மெய்த்தவமாய் எண்ணியொரு காலமதில் பெருமைகண்டார்;

பக்தியோடு கற்றாரப் படிப்புகளைப் பார்போற்ற!

இக்காலம் மாறியதே ஏற்றிடவே புதுத்துறைகள்!

 

கணினியோடு செயற்கை நுண்ணறிவும் விண்வெளியும்

அணிவகுக்கும் தொழில்நுட்பத் துறைகளாய்த் துளிர்த்தனவால்;

திணிகின்ற வாய்ப்புகளோ தேசமெங்கும் கொட்டிக்கிடக்கக்

கணினியுகப் படிப்புகளால் காலடிக்குள் உலகமுமே!

 

பொன்னும் பொருளுமது போய்விடுமே காலத்தால்!

மின்னும் பதவியுமே வீழ்ந்துவிடும் ஒருநாளில்!

மன்னவனும் மதிக்கின்ற மாண்புடைய கற்றோர்க்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்புண்டு பாரினிலே!

 

அறியாமை இருளகற்றி அறிவொளியைத் தந்திடுமே!

நெறியான வாழ்வமைத்து நேர்மையினை ஊட்டிடுமே!

உயரியதோர் வாழ்க்கைதனை உவப்போடு பெற்றிடவே

செயிரிலா நற்கல்விச் சீரொன்றே துணையாமே!

 

வறுமைச் சூழ்நிலையும் வாராத தோல்விகளும்

உறுதி குலைக்கின்ற உற்றபல இன்னல்களும்

நெறிதடுமா றச்செய்ய நேர்ந்துமே வந்தாலும்

மறந்தும் படிப்பினைக் கைவிடாதே தம்பிநீ!

 

:-செ . மனுவேந்தன்


“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

 

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே

கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே

செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே  

காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

 

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே

பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே

புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே

அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

 

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே

விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே

விளக்கம் இல்லாத மதபோதனை எனோ

களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!  

 

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே  

இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே 

பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே

சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment