வாழ்வு தந்த பொன்னாடு! , 'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' & "முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ?'



வாழ்வு தந்த பொன்னாடு!

காப்புத் தந்த கருணை தேசம்

போரினில் வீடிழந்து புண்பட்டு நாமுமங்கு

புலம்பெயர்ந்து வாடி நின்றே,

காரிருள் சூழ்ந்தநாளில் கரம்நீட்டி நம்மையே

காவலாய் ஏற்ற நாடு!

பேரின மக்கள்யாரும் பேதங்கள் இன்றிவாழும்

பெருமையுறு சமத்துவமாய்,

சீரிய கனடாதேசம் செழித்தோங்கி வாழவேதான்

சிரம்தாழ்த்தி வாழ்த்துவமே!

 

சுதந்திரமும் பண்பாடும்

எம்முடை மொழியுடனே எழிலான பண்பாடும்

எந்நாளும் போற்றிடவே,

தம்முடை நெஞ்சாரத் தடையின்றி உரிமைகளைத்

தந்துமே வாழ வைத்தாய்!

செம்மையாய் யாவருக்கும் சுதந்திரக் காற்றினையே

சேர்த்தளித்த புண்ணியமே,

அம்மையாய் எமையணைத்த அன்பான கனடாவே

அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்!

- செ.மனுவேந்தன்

'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா'

 

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா

கலந்து பேசி முடிவு எடுக்கலாமா?

மனங்கள் இணைந்தால் அதுவே பொருத்தம்

மறந்து என்றும் விண்மீனைக் கேட்காதே?

நேரம் தீர்மானிக்குமா ஒருவரின் வாழ்வை

இதயம் சொன்னால் அதுவே போதும்!

அன்பு நிலைத்தால் நாள் இனிது

புரிதல் இருந்தால் தடைகள் இல்லை!

கண்கள் சந்தித்து உள்ளங்கள் இணைந்து

காதல் மலர்ந்தால் அதுவே திருமணம் ! 

 

"முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ?'

 

 

முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ

விழிநீரைத் துடைத்து பேரின்பம் பொழியாயோ

தனிமையின் துயரம் போக்கிட வாராயோ

கனவினில் ஏனோ கவலைகள் தந்தாயோ

பிரிவினில் வாடும் நெஞ்சினைப் பாராயோ

அருகினில் வந்து ஆறுதல் சொல்லாயோ

இதயத்தின் கதவைத் திறந்து காட்டாயோ 

காதலின் மொழியை கனிவுடன் சொல்லாயோ

வாழ்நாள் முழுதும் என்னுடன் வாழாயோ

நிழலெனத் தொடர்ந்து துணையாய் இருப்பாயோ

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment