'மாயையின் மயக்கம்' : பகுதி: 04-சிறு கதை


ஆகஸ்ட் 18 தங்க ரத்தத்தில் வேல்விமானம் திருவிழா. அவன் அவளுக்காக பின் வீதியில் காத்து நின்றான். இதைக் கவனித்த ஆரணியின் தோழி ஒருவள்,  "அருண், நீங்க கோவிலுக்குள் செல்வதை நிறுத்தி விட்டீர்கள்" என்று கிண்டல் செய்தாள். அருண் சிரித்தபடி தோள்களைக் குலுக்கினான். "இப்போது எனக்கு என் சொந்த இறைவி இருக்கிறாள்." என்றான்.

உண்மையிலேயே, அவளை ஒரு தெய்வீகப் பெண் போல அவன் வணங்கினான். ஒவ்வொரு மாலையும், அவள் கை அவன் கையைத் தொட்டபோது, ​​அவளுடைய சிரிப்பு அவனுக்காக ஒலித்தபோது, ​​அவன் ஒரு வெற்றியாளரைப் போல உணர்ந்தான். ஆனாலும் ஒவ்வொரு பரிசும் அவனுடைய பணப்பையை வடிகட்டியது, ஒவ்வொரு புன்னகையும் அவன் கொடுத்தவற்றுடன் பிணைந்ததாகத் தோன்றியது. ஆனால் அவள் கச்சிதமாக நடந்து கொண்டதால், அவன் அதை உணரவில்லை. ஆனாலும், அவனை பொறுத்தவரையில், அன்பு மதிப்புக்குரியது. பரிசுகள் சிறிய தியாகங்கள் மட்டுமே.

அன்று ஆரணி எனோ இன்னும் வரவில்லை. அவளின் இன்னும் ஒரு தோழி, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, " அருண் நீங்க கொஞ்சம் கவனமாக ஆரணியுடன் பழகுங்கள், இதைவிட நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை"  என்ற சொல்லவும் ஆரணி வரவும் சரியாக இருந்தது. அவன் முதல் முதலாக கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான்.

அவன் அன்று ஒன்றும் வாங்கவும் இல்லை, சாப்பிட போகவும் இல்லை. ஆரணி சிணுங்கினாள். அவள் கண்கள் அருகிலுள்ள நகைக் கடையை நோக்கிச் சென்றன. ஆனால் அவன் கண்டும் காணாதவனாக இருந்து விட்டான். தங்க ரத்தத்தில் அலங்கார வேலன் வரும் காட்சியை அவன் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அவனின் கையை பிடித்து, விரல்களால் அழுத்தியபடி, " என்ன நடந்தது அருண் உனக்கு?, நான் பக்கத்தில் இருப்பது தெரியவில்லையா?" என்று கொஞ்சம் கெஞ்சலாக கேட்டாள், பின் "வாங்க, எங்கேயாவது சாப்பிட்டுக் கொண்டு தனியாக கதைப்போம்" என்றாள். ஆனால், அவன் பேசாமல் அமைதியாக நின்றான்.

அப்பொழுது தெருக்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தன, "வேல்! வேல்!" என்று கோஷமிட்டன. அவன், அவள் கைகளை பிடித்து, நீ என்னவள், நான் கொண்டு வந்த என் பணப்பை  குறைந்து கொண்டு போகிறது. இனி நான் கட்டுப்பாடுடன், தேவைக்கு அளவாகத் தான் செலவழிக்க முடியும். அதுதான் என்று இழுத்தான். பின் ரியோவில் போய் இருவரும் ஐஸ்கிரீமும் மரக்கறி ரோலும் சாப்பிட்டனர். ஆனால் முதல் முதலாக எந்த பரிசும் வாங்கிக் கொடுக்கவில்லை. அவளின் தோழி சொன்னதின் அர்த்தத்தை ஆரணியிடம் தேடிக் கொண்டு இருந்தான், ஆனால் அவளுக்கு அதைக் காட்டாமல் !   

ஆகஸ்ட் 20, சப்பரம் திருவிழா. அவன் வேண்டும் என்றே, அன்று பணப்பை கொண்டுவரவில்லை. அவன் அவளை சோதிக்க விரும்பினான். ஆரணி தன்னை இன்னும் கூடுதலாக அலங்காரப் படுத்திக் கொண்டு வந்தாள். அவளின் அந்த கவர்ச்சி அழகு, அவள் மேல் ஆசையைக் கூடினாலும், அவன் எளிமையாக, ஒரு பக்தன் போல், ஆனால் அவளின் கையை பிடித்தபடி ஆலயத்துக்குள் புகுந்தான். என்றாலும் அவனின் உடலும் உள்ளமும் அவளை ரசித்துக் கொண்டே இருந்தன.

'காமரம் முரலும் பாடல், கள், எனக்

     கனிந்த இன் சொல்;

தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும்

     அணங்கு ஆம்" என்னத்

தாமரை இருந்த தையல், சேடி

     ஆம் தரமும் அல்லள்;

யாம் உரை வழங்கும் என்பது

     ஏழைமைப்பாலது அன்றோ?'

 

மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய பேச்சும், இனிய மலர்கள் சூடப் பெற்ற அவளின் கூந்தலும்; தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம் என்று சொல்லும்படி; தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் அவளின் தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள் என்று கூறும் அளவுக்கு ஆரணி அழகை அள்ளி அள்ளி அருணுக்கு வீசிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவன் முன் போல் அதை வெளியில் அவளுக்கு காட்டிக் கொள்ள வில்லை. பரிசு மட்டும் அல்ல சாப்பிடக்கூட கூப்பிடவில்லை. ஆக கோவில் தீர்த்தமும் சாதகமும் மட்டுமே அவனும் பருகி, அவளுக்கும் தன் கையால் ஊட்டினான். அதில் ஆசை, காமம் இருக்கவில்லை. அன்பும் பாசமும் இருந்தன. ஆனால் ஆரணிக்கு அது எரிச்சலாகவே இருந்தது. அவள் புன்னகை தடுமாறியது.

அவள் கொஞ்சம் கடும் கோபத்துடன், " பெண்ணை, காதலியை ரசிக்கத் தெரியாத, அவளை திருப்தி படுத்தாத, அவளுக்கு, இந்த விழாக் காலத்தில் ஒன்றுமே கொடுக்காத நட்பு , அது என்ன நட்பு?" என்று கேட்டாள். அவன் அமைதியாக இருந்தான். அவனுக்கு 'நான் இவ்வளவு நாளும் கொடுத்தேனே, ரசித்தேனே, இன்று ஒரு நாள் பொறுக்க முடியாதா? அப்படி எனறால் இது உண்மையான அன்பா ? பாசமா?' என்று கேட்கத் தோன்றியது, ஆனால் கேட்கவில்லை , அதற்கு இனி தேவையும் இல்லை.

அவள், அவனின் கையை உதறி விட்டு, அங்கிருந்து அகன்று விட்டாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. தன் யாழ் அனுபவத்தை நினைத்து தனக்குள் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தான். ஆலயமணி அப்போது ஒலித்தது. பக்தர்களின் அரோகரா கோஷம் காதை பிளந்தது. என்றாலும் அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடன் அங்கு கொஞ்ச நேரம் நின்றான். ஆனால் அவள் வரவில்லை.

பார்க்கப் போனால், மனித வாழ்க்கை எவ்வளவு அதிசயமானது? சில சமயம் மிகச் சிறிய சம்பவம் கூட நமது வாழ்க்கையை எவ்வளவு பெரிய அளவில் பாதித்து விடுகிறது? அருணின்  வாழ்க்கையிலே, நல்லூர் ஆலயத்துக்குள் காத்திருந்த அந்த இருபது முப்பது நிமிஷங்களில் ஒரு பெரிய நாடகமே நடந்து முடிந்து விட்டது! சில சமயம் ஓடும் ரெயிலில் தற்செயலாக ஏற்படும் ஒரு சந்திப்பு, திருவிழாக் கூட்டத்தில் ஏற்படும் ஒரு பரிச்சயம், வதீியில் இரண்டு விநாடியில் நடந்து முடிந்து விடும் ஒரு சம்பவம், சில பேரினது வாழ்க்கையின் போக்கையே புதிய திசையில் திருப்பி விட்டு விடுகிறது. உலகப் பெரியார் என்று போற்றப்படும் காந்தி அடிகளின் வாழ்க்கையில், அவர் தென்னாபிரிக்காவில் ஒரு ரெயில் பெட்டிக்குள் புகும் போது  ஒரு வெள்ளை வெறியனால் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட சில நிமிஷ நேர நிகழ்ச்சி அவருக்கு ஏகாதிபத்தியத்தின் தன்மையை நன்குணர்த்தி, அவர் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய தோடு, ஒரு தேசத்தின், ஏன் ஒரு கண்டத்தின், அரசியல் போக்கையே முற்றாக மாற்றிவிட வில்லையா? ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இருக்கும் தாரதம்மியத்தை அந்த ரெயில் பெட்டியில் அவர் அன்று அனுபவ ரீதியில் கண்டதுதான், அவரை ஆசியாவின் சார்பிலே சுதந்திர முழக்கம் செய்யும்படி ஊக்கியது! சில நிமிஷ நேரங்களில் நடந்து முடிந்துவிட்ட ஒரு சிறிய சம்பவம் -- ஆனால் அதன் பலனோ மிகப் பெரியது.

 

இன்று அருணின் அனுபவமும் அப்படியே!

 

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 05 தொடரும் 

0 comments:

Post a Comment