'பாரம் துறந்தால் பாரினில் அமைதி' & ‘விடுபடா விடுதலை'



'பாரம் துறந்தால் பாரினில் அமைதி'

நேற்றுமுடிந் ததுமுடிந்தது; நாளை நடப்பது

நிச்சய மற்றதோர் விந்தையடா!

ஆற்றொழுக் காய்வரும் வாழ்வினை ஏற்பாய்!

அடுத்தநாள்க் கவலைகள் வீணதியா!

ஏற்றிடும் நெஞ்சின் சுமையினை இறக்கின்

இரவினில் தூக்கமது தானாய்வரும்!

மாற்றிட ஏலா உலகியல் விதிகளை

மனிதனின் கரங்களால் வெல்லுமோடா? (1)

 

பிடிவாத மாய்எல்லாச் சூழலையும் நமக்கேற்ற

பெற்றிட நினைப்பது பேராசை!

விட்டிட வேண்டியதை விட்டிடப் பழகின்

விளைந்திடும் மனதினில் பேரமைதி!

விட்டு விடுதலையாய் ஆகுமவ் வுள்ளத்தில்

வேதனைக் காரிருள் ஓடியடா,

மட்டிலா அமைதியெனும் சோலையிலே நல்ல

மலர் உறக்க மென்பதும் மலருமடா! (2)

-செ.மனுவேந்தன்

‘விடுபடா விடுதலை'

 

விண்ணைத் தொடத் துடிக்கும் சிறகுகள் இருந்தும்,

விதி எனும் கூண்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள்!

விடியலைத் தேடும் அவள் விழிகளில் இன்று,

விடை தெரியாக் கேள்விகளே விரிந்து நிற்கின்றன!

 

வியப்பூட்டும் இந்த உலகப் போராட்டத்தின் நடுவே,

விழுமியங்கள் ஒன்றையே துணையாகக் கொண்டு நிற்கிறாள்!

விடுக்கப்படும் தூற்றல்கள் அவள் மீது வீசப்பட்டாலும்,

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பெனத் துணிந்து செல்கிறாள்!

விலங்குகள் பூட்டியே அவளைக் கட்டி வைத்தாலும்,

விழிப்புணர்வு எனும் நெருப்பால் அவற்றைச் சுட்டெரிக்கிறாள்!

விண்ணில் மிளிரும் விண்மீன்களைப் போலத் தனிமை அவளுக்குப் பிடிக்கவில்லை,

விண்மீன்களையே மிஞ்சும் ஒளியாய் மிளிரவே நினைக்கிறாள்!

 

விடம் போன்ற சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்து விட்டு,

வியக்கத்தக்க வலிமையுடன் தன் பாதையைச் செதுக்குகிறாள்!

விபத்துகள் ஆயிரம் எதிரே நின்றாலும் அஞ்சமாட்டாள்,

விலகி நின்று தன் விடுதலையை அவள் வென்றெடுப்பாள்!

 🚤🚤🚤🚤🚤🚤

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment