'வாழ்வின் இருபக்கங்கள்'
1. வாய்ப்பும் உயர்வும்!
ஏற்றமிகு நல்வாய்ப்பு வாச லென்றால்
ஏங்குவதேன்? தயங்குவதேன்? எழுக முன்னே!
காற்றினிலே சிறகடித்து வானி லேறிப்
கழுகினைப்போல் உயரப்பற வாழ்க்கை யாகும்!
தோற்றத்தைப் பாராமல் திறமை நம்பித்
துணிச்சலுடன் முன்னேகும் பயண மன்றோ!
மாற்றமில்லா வெற்றியெனும் சிகர நன்னாள்
மகுடமாய் உனைச்சேரும் உண்மை யாமே!
2. துன்பமும் தாங்குதலும்!
காய்க்கின்ற மரத்தின்மேல் கல்லெ றிந்தே
கனியதனை வீழ்த்திடும் உலக மிங்கே!
சாய்க்கின்ற துன்பங்கள் சூழ்ந்த போதும்
சலிப்பின்றிப் பொறுப்புடனே தாங்கல் வேண்டும்!
வேய்க்கின்ற மூங்கில்போல் வளைந்தே நின்று
வேதனையை இன்னிசையாய் மாற்ற வேண்டும்!
தேய்கின்ற பிறையென்றே துயரங் கண்டால்
தேடிவரும் முழுநிலவின் வெளிச்ச மன்றோ!
3. கடமையும் நெறியும்!
இடியோடு புயல்வந்து சோதித் தாலும்
இமையமலை அசைவதில்லை உறுதியாலே!
கொடியதொரு சோதனைகள் நேரும் போது
குலைந்துவிடா மனவளமே வாழ்க்கை யாகும்!
மிடியோடு கடமைகளைத் தோளில் ஏந்தி
மீண்டுவரும் நெஞ்சமே வீர நெஞ்சம்!
அடியோடு நொறுங்காமல் பொறுமை காத்தால்
அகிலத்தில் உன்பெயரும் நிலைக்கு மன்றே!
-செ .மனுவேந்தன்
'நீலக் கடல் அலைகள் சூழ'
[துருக்கி / கோடை 2025]
நீலக் கடல் அலைகள் சூழ
பசுமை மலைகள் எழில் பூக்க
பருவக் காற்றும் மெல்ல வருட
இன்பம் உள்ளம் நிறைந்து நின்றேன்!
துருக்கி நாட்டின் சிகரங்கள் யாவும்
முகிலைத் தொட்டு வியப்பளிக்க
வண்ணப் பூக்களின் வாசம் அங்கே
சுவாசக் காற்றாய் எனை வருடுதே!
நாவில் மணக்கும் அறுசுவை உணவு
கண்களைக் கவரும் பொன்னிறக் கடற்கரை
இயற்கை அன்னை தந்த பரிசில்
புத்துயிர் பெற்று மகிழ்ந்து நின்றேன்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment