கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'
பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை
முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார்.
ஆகஸ்ட் 11, 2025 அன்று, மூன்று சிறிய ஆய்வாளர்கள், தாத்தா கந்தையா தில்லையின் பேரப்பிள்ளைகள் - ஜெயா, கலை, மற்றும் இசை - கனடாவின் ஒட்டாவாவில் இருந்து விமானத்தில் தங்கள் தாத்தாவுடன், ஜெர்மனியின் ஊடாக, பறந்து சென்று, இலங்கையில் தரையிறங்கினர்.
“ஆஹா, இங்கே மிகவும் சூடாக இருக்கிறது, தாத்தா!” அவர்கள் பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஜெயா முகத்தை விசிறிக் கொண்டாள். “ஏனென்றால் இது வெப்ப மண்டலப் பகுதி, என் அன்பே. கனடாவை விட இங்கு சூரிய ஒளி சற்று குறும்புத்தனமானது,” தாத்தா சிரித்தார்.
உலகில் கண்களைக் கவரும் இடங்களில் கடற்கரையும் ஒன்று எனலாம். கடற்கரையைப் பற்றி அறியாதவர் யாவரும் இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்கு செல்வ தென்றால் மிகவும் பிடிக்கும். எனவே, ஒரு வாடகை வேனில் [Van] ஒரு நட்பு ஓட்டுநருடன், முதலில் கடற்கரை நகரமும் மற்றும் தலைநகரமான கொழும்புக்கு சென்று இருநாள் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். எனவே பிரித்தானிய ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு [ Governor of British Ceylon, Sir
Henry George Ward (1797–1860)] என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவான காலிமுகத் திடலுக்கு (Galle Face Green) முன்னால் அமைந்த ஹோட்டல் ஒன்றில் தங்க முடிவு செய்தனர்.
சில்லென்ற கடல் நீர், இதமான தென்றல் காற்று, கடல் அலையின் ஓசை, கொஞ்சி விளையாடும் பறவைகள் என யாவும் தமக்கு மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும், பயணக் களைப்பையும் போக்கும் என்பதாலும் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக களிக்கலாம்
என்பதாலும், தாத்தா அந்த ஹோட்டலை தெரிந்து எடுத்தார்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அதே வாடகை வேனில் தம்புள்ளை [Dambulla] வழியாகச் யாழ் நகரை நோக்கிச் செல்லும் போது, தங்கச் சிலைகளால் மின்னும் குகைக் கோயில்களைப் பார்த்து வியந்தது, "இது ஒரு கதைப்புத்தகக் குகை போல நான் உணர்கிறேன்!" என்று கலை மூச்சுத் திணறினான். தம்புள்ளையை தாண்டும் பொழுது தாத்தாவின் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைக் கவனித்த ஜெயா, தாத்தாவைத் தட்டி என்ன நடந்தது என்றாள்? யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அன்று பல ஆண்டுகளாக அமைந்து இருந்த ஒரேயொரு தமிழ் இந்து ஆலயமான தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில், புத்த பிக்குவின் தலைமையில் பல முறைதாக்குதல் நடத்தப்பட்டு, இறுதியாக அக்டோபர் 28, 2013-ம் நாள் ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது எதையம்மா காட்டுகிறது ?. ஆனால், இந்த முன்னைய
தம்புள்ளை பொற்கோவிலில் தெய்வங்களுக்குரிய 4 சிலைகள்
காணப்படுகின்றன. இதில் இரண்டு இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் விநாயகர் சிலைகளாகும் என்பது வரலாற்று உண்மையாகும் என்று தாத்தா ஜெயாவுக்கு ஒரு சரித்திரமே கூறினார். அவள் அதைக் கவனமாகக் கேட்டாள். இது ஆரம்பகாலத்தில் தம்பலை என அழைக்கப்பட்டது. இராச இராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் 10ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டார்கள் என தன் உரையாடலை முடித்தார். அன்று இரவு, அவர்கள் இறுதியாக தாத்தாவின் குழந்தை மற்றும் வாலிப பருவத்தின் வாழ்விடமான கரையோர நகரமான யாழ்ப்பாணத்தை அடைந்தனர். அங்கே, தாத்தாவின் பிறப்பு இடமான அத்தியடிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில், ஒரு சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். அந்த ஹோட்டலை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் அமைந்திருந்தது. அந்த யாழ் ரயில் நிலையத்தின் பின்பக்கம் தான் தாத்தா, தாத்தாவின் அம்மா, சகோதரங்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்த பெருமைமிக்க அத்தியடி அமைந்துள்ளது.
"நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும்
யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே,
யாழ் தேவி ரெயில் ஏறுவோம்,
எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்"
என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய
பாடல் வரிகளை நினைவூட்டியது. ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே அன்று இல்லை.
"ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், ஹோட்டலில் இருந்து, அரை மையிலுக்கும் குறைவான தூரத்தில், தாத்தா குடும்பத்தாரின் முன்னைய வீட்டின் பின்பக்கத்தில் தான் அமைந்திருந்தது. அங்கு தான் தாத்தா இளம் வயதில் பந்தடித்து விளையாடினார்.
பொதுவாக யாழ்ப்பாண நகர், யாழ் கோட்டை , சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown."எனவும் கூறலாம். யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள், உயர்ந்த கட்டிடங்கள் மத்தியிலும் ஆங்ககாங்கே இருந்தது. ஜெயாவும் கலையும், முதல் முதல், அந்த முன் இரவிலும் யாழ் நகரைப் பார்த்து ரசித்து ஆச்சரியப்பட்டனர். இசை தாத்தாவின் மடியில் தூங்கிவிட்டான்.
ஜெயாவையும் கலையையும் தன் அருகில் அழைத்த தாத்தா, 'பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும், நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது. அது வளைவதை விட, வளையாமல் உடைவதையே விரும்புவது. இன்னல், துன்பம் வரும் போது, யாழ்ப்பான மக்கள், பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து, தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம் மற்றும் துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக் குணத்தை கொண்டிருந்தனர்' என ஒரு பெரும் விளக்கம் கூறினார்.
மஞ்சள் வெயில் பூத்த வானமும்
பனை மரங்களின் இனிய தாலாட்டும்
பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும்
யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும்
எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும்
அன்பும் பண்பும் துளிர் விடும்!
வீட்டை விட்டு எட்டி நடந்தால்
வானம் பாடிகளின் ஆட்டமும்
வீதியோர பசுக்களின் கூட்டமும்
காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும்
வானுயர நிமிர்ந்த பனைமரமும்
மனதைத் தொடும் நினைவுகளே!
*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக..
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 02 தொடரும்
I boarded near railway station. Stanley road near Srithar theatre. Dumpulla temple is make me feel sad. I just visited Buddha temple in mountain. I learned from you sir. Thanks for sharing this information. Please continue to share your knowledge and insights. It’s a history. Hmm Thanks again Sir.
ReplyDelete