நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்


"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் 
தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் 
வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள்      
கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!"     

"மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் 
மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் 
அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள் 
நஞ்சு கலந்து காதல் வீசினாள்!"   

"கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள்  
வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள் 
நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள் 
வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!"    

"நஞ்சு தந்த போதை மயக்கத்திலும் 
காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன்
செஞ்ச தெல்லாம்  செய்தது போதும்  
கொஞ்சம் தனியாய் விடு என்றேன்!" 

"துஞ்சிய கண்கள் அகல விரிந்தன 
பஞ்சாய் மிதந்து மறைந்து விடடாள் 
வஞ்சியென நஞ்சமென வந்த கள்ளியை  
எஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன்!" 

-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

இயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்??




வள்ளுவனும்,அவ்வையும் ..

திருவள்ளுவர்:
திருவள்ளுவர் எந்தச் சமயத்தினர் என்பது தெரியாது. அவர் சைவமாய் இருக்கலாம் என்பது ஒரு ஊகமே.
இவர் வாழ்ந்த காலம் கி.மு. 200 - கி.பி. 800 இடையில் இருக்கலாம். இவர் படங்களில் தீட்டப்பட்டுள்ள திருநீறு நம்மவரின் சேர்க்கையே.
* புத்தரைக் குறிக்கும் எண்குண வழி, தாமரைக் கண், மறுபிறப்பு என்று கதைத்தாலும், அவர் போதனைகளில் ஒன்றான மனிதனே கடவுள், வேறு ஒரு உயரிய கடவுளே இல்லை என்ற கொள்கைகளுக்கு மாறாகப் பல கடவுளர், சாதி வேறுபாடு பற்றிப் பேசுவதால் அவர் பௌத்தர் அல்ல.
* இவர் கூறும் அகிம்சை, தவம், வீடுபேறு என்பன சமண-பௌத்த மதக் கொள்கைகள். அக்காலத்தில், சைவ சமயத்தினை விட இந்த மதங்களே செழித்தோங்கி இருந்தன. இவர் காலத்தில் இயற்றப்பட்ட ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் சமண, பௌத்த புலவர்களாலேயே இயற்றப்பட்டன. ஆதலால் இவர் சமணராய் இருக்கலாம்.
*சாதி,மறுபிறப்பு, மோட்சம் என்று கதைத்திருப்பதால் சீக்கிய, வைணவ, சைவ சமயியாய் இருக்காலம். ஆனால், அக்காலத்தில் சீக்கிய மதம் தென் பகுதியில் பரவி இருக்கவில்லை. ஆதலால் சீக்கியரும் அல்ல.
*வேதங்களில்  வரும் கடவுளர் பற்றிய விடயங்களை நேரடியாக எடுத்துக் கையாண்டு இருக்கிறார். வேதம் போல இவரும் தாய் தந்தையரை வாழ்த்தித் தொடங்குவதாலும், இலக்குமி  பற்றிக் கூறியபடியாலும் வைணவர் தானோ தெரியாது.
* சைவ நாயன்மார்கள் உபயோகித்த கடவுள் பெயர்கள் பலவற்றை இவரும் சேர்த்திருக்கிறார். உதாரணமாகத் திருமூலரின் அறவாழி அந்தணன் என்னும் சிவனைக் குறிக்கும் வார்த்தை இவர் குறளிலும் உண்டு. ஆதலால் சைவராய்  இருக்குமோ?
* எந்தச் சமயத்தினரும் அவரவர் ஆலயங்களில் இவருக்கு ஒரு சிலைதானும் வைத்தார் இல்லை.  இவர் தான் என்ன சமயத்தினர் என்று ஒருபோதும் காட்டிக்கொள்ளவே இல்லையே!
* அவர் என்ன சமயத்தினராக இருந்தாலும் அவர் கூறிய பல அறிவுரைகள் எல்லாச் சமயத்தினருக்கும் ஏற்புடையதாக இருக்கின்றன.
ஔவையார்:
ஔவையார் என்றால், ஒருவர் மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். பல ஔவையார்களின் சேர்க்கைதான் நமது ஔவையார். அதில் முக்கியமாக மூவரைக் குறிப்பிடலாம்.
-1 :கி.பி. 100 - 200 களில்  தமிழ் சங்கப்  பாரி, பரணர், கபிலர், திருவள்ளுவர் காலத்தில், கடுந்தமிழில் புறநானூறின் ஒருபகுதியை எழுதியவர். அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றவரும் இவரே.
-2 :கி.பி. 900 - 1000 களில்,இலகு தமிழில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன்,மூதுரை,நல்வழி முதலியவற்றை  எழுதியவர்.
My Photo-3 :கி.பி. 1200 - 1300  களில்,சோழ இராட்சியத்தில்,கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் விநாயகர் அகவல் முதல் பல தத்துவ, சமய, யோகக் கலைகள் பற்றிப் பாடல்கள்,பழமொழிகள் எழுதியவர்.
அத்தோடு,எல்லா ஔவையார்களும்,கே.பி.சுந்தராம்பாள் போல மூதாட்டி என்று நினைக்க வேண்டாம்!
                                     ஆக்கம்:-செல்லத்துரை,சந்திரகாசன்   

அ.தி.மு.கழகம் பிளவுபடுமா?

இந்திய அரசியல் வாதிகளிற்கு ஒத்துப் போகாதவர்கள் விடுதலைப் புலிகள் என்பதால் வழக்கம்போல்  அவர்களுக்கு [இராவணனுக்கு அரக்கன்] பயங்கரவாதி முத்திரையிட்டு அழித்தனர்.
தங்கள்அரசியலுக்கு ஒத்துபோகாத அரசியல் வாதிகள் அழிப்பதற்கு உளவு நிறுவனங்களை உபயோகிப்பதுவும், அரசியலற்ற  அமைப்புகள் எனில் பயங்கரவாத பட்டம் சூட்டி அழிப்பதுவுதும் தான் இன்றைய அரசியல்.
ஆதாரங்கள் மக்கள் மத்தியில் வெளிப்படடாலும் அதன் வெளிப்படுத்துவோர் தேடி எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.கடத்தப்படுகின்றனர் 
ஜெயலலிதா இருக்கும்வரையில் வேறு  எந்த ஒரு அரசியல் கட்சியும் தமிழ் நாட்டில் தலையெடுக்க முடியாது  என்பது உண்மை. எனவே அக்கடசியினை பலவீனப் படுத்த .....சசிகலாவா? மோடியா? இல்லை மறைந்திருக்கும் அந்த மர்ம நபர் யார்? என்பதே தற்போதைய தமிழ்மக்களின் கேள்வியாக இருக்கின்றது.
ஒரு அரசியல் தலைவர் இறந்தால் கட்சியினை உடைத்துக் கொண்டு வேறு கட்சி உருவாக்குவது வழமை.அவ்வேளையில் ஒருவரை ஒருவர் தாக்கும்போது முதலமைச்சர் மறைவின் மர்ம முடிச்சுகள் அவிழலாம். ஆனால் அப்படியான நிலை வராமல் தடுப்பதில் மோடி அரசு முயற்சி செய்வதாக செய்திகள் கூறுகின்றன. அங்கே சந்தேகம் மேலும் வலுவாகிறது.
அரசியல் வாசிகளுக்கு பேராசை அதிகம்.அடுத்த தேர்தல் நெருங்க கடைசி நேரத்தில் ஆவது உடைத்துக்கொண்டு வருவார்கள்.புதியகட்சி தோன்றும்.

கழகம்உடைவதில்எமக்கொன்றும் சந்தோஷமுமில்லை. துக்கமுமில்லை. ஆனால்,சுவாதி கொலை வழக்கில் பல நாட்களை எடுத்துக்கொண்டு மர்மமாக முடிந்த வழக்குப்போல முதலமைச்சரின் மரணமும் முடியாமல் இருக்க தமிழ்மக்கள் விழித்துக்கொள்வதே பொருத்தமானதாகும். இல்லாவிடில் இன்னும் பல  தலைவர்கள் இலகுவாக அழிக்கப்படலாம், என அரசியல் விமர்சகர்கள் அச்சம்  தெரிவித்துவருகின்றனர்.
-விழித்தெழு தமிழகமே [சண்டியன் -சரவணை ]

"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!"

"கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி,
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!-
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" [நற்றிணை 174]
ஆண்பறவை ஒன்று தன் பெண்பறவையை கூவி அழைக்கின்றது.அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும்படி முழக்கமிடுகிறது. அப்படியான கோடைக்காற்று வீசுகின்ற கடினமான வீதியால் சென்ற உன் காதலர் மீண்டு வந்து உன்னை கட்டிப்பிடித்து இனிதாக நீங்களிருவரும் ஓரிடத்தே ஒன்றாக பிரிக்க முடியாதவாறு இருந்தீர்கள்.ஏன் இப்ப நீ பெரிதும் வருந்துகின்றாய்? என தோழி கேட்டாள். அதற்கு அவள் உண்மையை அறியாதவர்க்கு அத்தன்மை யாகவேதான் காணப்படும்;என் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டை யுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை கொடுத்து விட்டான்,இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு,கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? இது காதல் கனிவு இல்லாத புணர்ச்சி அல்லவா? எப்படி அவனை நான் உண்மையாக காதலிக்க முடியும்?நான் மனைவி மட்டுமே ..காதலி அல்ல .. என்கிறாள்.
அப்படி என்றால்,யாரை,எப்படிப் பட்டவரை,அவள் உண்மையாக காதலிக்க முடியும் என்கிறாள்?அதற்கும் சங்க பாடல்,அகநானூறு விடை கூறுகிறது.இப்பாடல்கள் எல்லாம் கி.மு. காலத்துப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது.இனி அகநானூறு 268 பார்ப்போம்.

"அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய 
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
..............................................................."
இங்கு தலைவி தோழியை பார்த்து சொல்கிறாள்: "தோழி! நீ அறியாமல் பேசுகிறாய்.யானையும் புலியும் சண்டையிட்டுக்கொண்ட களத்தில் ஒடும் இரத்தம் புலால் நாற்றம் ஆடிக்கும்.அங்குப் பூக்கும் வேங்கை (Pterocarpus marsupium), குளவி (Patchouli) ஆகிய பூக்கள் அந்தப் புலால் நாற்றத்தைப் போக்கும்.அப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்.அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது.அதனை நீ தேடித் தருவதென்றால் அவனிடம் செல்லும்படிக் கூறு."வெறும் காமம் என்றால்,தயவு செய்து வேண்டாம் என்கிறாள்.அதாவது,காதல் மிகுந்த காமக் கூட்டம் ( புணர்ச்சி ) உளதாயின் அது மிக நன்றாகும் என்கிறாள்.
இன்னும் ஒரு தலைவி,அகநானூறு 332 இல், திருமணத்திற்குப் பின்னர் தோழியிடம் கூறுகிறாள் :

"...........................................................
நின் புரை தக்க சாயலன் என, நீ 
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! "
தோழி! “நாடன்[மன்னன்,தலைவன்] உன் புரைமைக்குத் [உயர்ச்சி, பெருமை] தக்க சாயலை உடையவன்” என்று நான் அடங்குமாறு நீ அன்போடு கூறிய இன்சொல் உண்மையாகவே வாய்க்கப் பெற்றுள்ளேன். விரும்பியவர்க்கு அமிழ்தம் கிடைத்தது போல, திருமண மாலையுடன் கூடிய மார்பினை வண்டொலியும் இடையில் புகமுடியாதபடி அவன் என்னைத் தழுவினான்.களவுக் காலத்தில் முதல்நாள் துய்த்த இன்பம் போல இன்றும் சிறந்து நிற்கின்றன." என்கிறாள்.
மற்றும் ஒரு சங்கத் தலைவி,அகநானூறு 361 இல்,
"வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்
கவவுப் புலந்து உறையும் கழிபெரும் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் ...",
அதாவது,"நெஞ்சே ! தலைவியின் மார்பில் தோய்ந்து முயங்கும் [தழுவுதல்; புணர்தல்] முயக்கத்தினை ஒரு நூல் இடையே தடுப்பினும் அதனை வெறுத்து உறையும் மிகப் பெரிய காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் [அனுபவம்] காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை என்று அடித்து சொல்கிறாள்.
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

ஜெயலலிதாவின்அரசியல் ஆளுமைத்திறன்



,

திசை மாறும் தமிழர்

கலாச்சார சம்பிரதாயங்கள்.

நம் ஈழத்து தமிழர்கள் எங்குதான் வாழ்ந்தாலும், அவர்கள் இதுதான் எமது கலாச்சார சம்பிரதாயங்கள், வழக்கங்கள் என்று கூறிக்கொண்டு பலவிதமான புதுப்புது கொண்டாட்டங்களை மும்முரமாக, கோலாகலமாக, பெரும் சிறப்பாக நடத்திக்கொள்வது நாளாந்தம் காணக்கூடியதாக இருக்கின்றது.

கை நிறையப் பணத்தை வைத்துக்கொண்டு,அல்லது அடுத்தவரிடம் கடன் எடுத்தாவது [அது திருப்பி வழங்கத்தேவையில்லை] அதை எந்தவிதமாகவோ  செலவு செய்து  கொண்டாட  ஏதாவது ஒரு புதிய விழாவைக் கண்டு பிடிப்பார்கள். எவ்வளவுக்கு பெரிதாகச் செலவு செய்கிறார்களோ, அவ்வளவுக்கு அவர்களது அந்தஸ்து சமூகத்தில் உயர்வடையும் என்று நினைக்கின்றார்கள். அதற்காக, அவர்கள் வீட்டுப் பக்கமே வந்திருக்காத பல பேர்களையும் அழைத்து, வருவோரின் எண்ணிக்கையைக் கூட்டி, விழா நடத்துவார்கள். சில குடும்பத்தோடு செய்ய வேண்டியவற்றையும் பெரிது படுத்தி அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

பிள்ளை ஒன்று பிறக்க முன்பிருந்து, கிழவராகி இறந்த பின் வரை பலவிதமான காரணங்களுக்கு விழா எடுப்பார்கள். எடுக்கும்போது, நாம் செய்துவந்த சில சம்பிரதாய விழாக்களை விட, மேலதிகமாக  தமிழ் நாடு, வட இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா என்று அயல் நாட்டு முறைகளையும், நம் வழக்கம் என்று சொல்லிக்கொண்டு  செய்து கொள்வார்கள்.  

சிலர், வித்தியாசமாகச் செய்ய எண்ணி, பல்லக்கு, லிமோசின், ஹெலிஹாப்டர் , ஊர்வலம் என்றும, அப்பாலும் போவார்கள். 

திருமணம் அமைய, குழந்தை வரம் கிடட நேர்த்திக்கடன் வைக்கவும், கிடைத்ததால் கழிக்கவும் ஸ்தல யாத்திரைகள்; பின்னர் பேபி ஷவர், ஜெண்டர் ரிவீல், வளைகாப்பு, பிள்ளை பிறந்ததும் துடக்கு கழிக்க, பெயர் வைக்க, தொட்டிலில் இட,  பல் முளைக்க , முடி இறக்க  என்று எல்லாவற்றுக்கும்  விழாக்கள் தான்.  பின்பு ஒவ்வொரு வருடமும் பிள்ளையின் பிறந்த பெரு விழா, அம்மா அப்பாவின் பிறந்த நாள்கள், திருமண  நாள் விழா, பேரன்மார்களின் பிறந்த நாள் விழாக்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். 

பின்னர், பிள்ளைகள் வளர்ந்ததும் சாமத்திய சடங்கு, அரங்கேற்றம், பல நாள் தொடர் திருமண சடங்குகள், கை வர்ணம் பூசுதல்,, முக அலங்கார வழிமுறைகள், அவுட் டோர் - இன்டோர்  ஷூட்டிங்க்,  பாச்சுலர் பார்ட்டி, ஹென்ஸ் நைட்,  ஹனி மூன் என்று பலவும் இருக்கும்.

இறந்ததும், மரணச் சடங்கு, மரண ஊர்வலம், எட்டு, எட் டாம் எட்டு, அந்தியட்டி, மாசியம், ஆட்டத்திரி, அன்ன தானம், நினைவு தூபி, மோட்ஷ அருச்சனை, அபிஷேகம்  என்று தொடர் கதையாகப் போய்க்கொண்டிருக்கும்.

இவற்றில் அதிகமான விழாக்களிலும் சிறிதாகவோ, பெரிதாகவோ கேக் வெட்டி (கேக்குக்கு தமிழ் வார்த்தையே தெரியாது) மாறி, மாறி ஊட்டுவது இருக்கும். உடுப்பும் கோலாகலமாக இருக்கும். ஆண்கள் என்றால் கடடாயம் வெள்ளைக்காரன் போல கோர்ட், சூட், ரை இருக்கும். 

இந்தக் கோர்ட் விவகாரம் கலியாண வீட்டில் மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு பெற்றோர் தம் மகன் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை மணம் செய்வதை, தமது கலாச்சாரப்படி சைவக் கோவில் (கோவிலிலும்!) ஒன்றில் வைத்தால், மணப்பெண், ஆண், மற்றும் பெரும்பாலான வெள்ளைகள் எல்லோரும் நமது (தற்போதைய) கலாச்சார உடை அணிந்து வந்து ஓடி, ஆடித் திரிவார்கள். ஆனால், கோவிலுக்கு வழக்கமாக வரும் நம்மவர்களைப் பார்த்தால் வெள்ளைக்காரன் போல சூட் உடுத்துக்கொண்டு படு டீசன்ட்டாக (கோவிலில்) உட்க்கார்ந்து இருப்பார்கள். 

அதிலும் பெரும் கொசுத் தொல்லை என்னவென்றால், ஒரு கோர்ட் காரர், எதிரில் உள்ளவரின் ரையைப் பிடித்துச் சரிபண்ணி  உதவி செய்து, தான் இந்த உடுப்பு உடுப்பதில் எக்ஸ்பெர்ட் என்பதை நிறுவி நிலை நாட்டித் தன் லெவலை உயர்த்திக் கொள்வார்.

இப்படி உடுப்பதற்கு அவர்கள் சொல்லும் நியாயம், 'ஊரோடு ஒத்தோடு' என்பதே! இன்னும் சில காலத்தில் இதுதான் எங்கள் உடுப்பு என்று சொன்னாலும் சொல்ல்லாம். இவ்வாறு உடுக்காத வெள்ளைகளைப்  பார்த்து சிரித்தாலும் சிரிக்கலாம். அன்று, வெறும் மேலுடன் திரிந்த எங்களுக்கு மேலுடுப்பும் போடுங்கள் என்று சொல்லித்தந்த வெள்ளைக்காரர், சின்னதாக ஒரு அரை குறை உடையுடன் ஓரிருவர் வீதியில் போனால் நாம் பார்த்து முகம் சுழிப்பதில்லையா?

ஊரோடு ஒத்தோடுவதற்காக  வெள்ளைக் கிறிஸ்தவர்கள் கூடி செய்யாமல் இருக்கும் சேர்ச் போவது, முகடு  முட்ட  கிறிஸ்மஸ் லைட் போடுவது என்று எல்லாமே செய்வார்கள். அன்று ஊரில் வாழ்ந்தபோது  வெசாக் கொண்டாடியும் இருப்பார்களோ?? ஊரோடு ஒத்தோட!

ஊரோடு ஒத்தோடுவதற்காக, பிள்ளையார் /சிவன்/முருகனுக்குச் செய்யும் அபிஷேகத்தில் பால், தயிர், இளநீர், பழங்களுக்குப் பதிலாய் ஷாம்ப்பூ, கொண்டிஷனர், ஜெல், டியோடரண்ட்  என்றும், வேஷ்ட்டி, சால்வைக்குப் பதிலாக ஒரு 3 பீஸ் சூட்டும், பிரசாதங்களாக கேக் பிஸ்ஸா, பெர்கர், சிப்ஸும் வைத்து வழிபடும் காலம் நெடும் தூரத்தில் இல்லை எனலாம்!

இது எனது பணம்; நான் என்னமாதிரியும் செலவு செய்வேன்; நீ யார் அதைப்பற்றி பேச என்பது கேட்கின்றது!

நான் காணும் மாறிவரும் சம்பிரதாயம் பற்றி மட்டும்தான் எழுதினேன்!
சரியோ பிழையோ; செய்யுங்கோ, செய்யாதேங்கோ என்று ஓரிடமும் கூறவே இல்லையே!

நாம் என்ன தமிழரின் தொல்காப்பிய காலத்து கலாச்சாரத்தையா பின்பற்றிக்கொண்டு இருக்கின்றோம்? எவ்வளவு மாறிவிட்டோம்!

நேற்று எங்களுடையது என்று இருந்த சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள்  இன்று எங்களுக்கு இல்லை; இன்று நமக்கென்று  இருப்பது நாளை எவருடையது ஆகுமோ யாரறிவார்!
---செல்வதுரை,சந்திரகாசன் 

விதியை நீங்களே தீர்மானியுங்கள்:

     
 உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசியல்வாதிகள் மட்டுமல்ல.... ஜோசியர்களும், சாமியார்களும் கூட ஆசைப்படுகிறார்கள்.
       ங்கள் அன்பினால் உங்களைக் கவராமல், உங்களுக்கு ஒரு பயத்தையும், குற்றஉணர்ச்சியையும் உண்டு பண்ண, பாவம்‍‍‍‍‍‍‍‍‍ - புண்ணியம், நல்லது - கெட்டது என்றெல்லாம் சொல்லி குழப்புகிறார்கள்.
       உங்கள் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிப்பது உங்கள் தலையெழுத்து தான்! என்று அடித்துச் சொல்லி, உங்களை நம்பவைதிருக்கிறார்கள்.
       விரும்பியது கிடைக்கவில்லை என்றால். முழுக்காரணம் நீங்கள் தான். வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் கவனமில்லாமல் தீர்மானித்திருக்கிறீர்கள். ஆசைப்பட்டதற்க்கு உரியவராக நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. அது உங்கள் த்வறு தானே தவிர விதியின் விளையாட்டல்ல.
       தன் கம்பியூட்டர் முன் அமர்ந்து உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டுக் கொண்டிருப்பதைத் தவிர கடவுளுக்கு வேறு வேலையே இல்லையா? இல்லை இந்தக்கதைகளை எல்லாம் நம்ப இன்னும் நீங்கள் குழந்தைகளா?
பிறப்பின் காரணமாக, வளர்ப்பின் மூலமாக, சில அடிப்படைக் குணங்களை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ பெற்று விட்டீர்கள். அந்த குணாதிசியங்கள் தான் உங்கள் பாதையை தீர்மானிக்கின்றன. அது கூட ஒரளவுக்குத் தான். மற்றபடி தலையெழுத்து என்று ஒன்று இருந்தால், மிககவனத்தோடு செயல்பட்டால் அதை உங்கள் விருப்பப்படி திருத்தி எழுதிக்கொள்ள முடியும்.
       தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லிக்கொண்ட ஓர் அறிவு ஜீவியிடம் சங்கரன்பிள்ளை வந்திருந்தார்.
       "எனக்கு அழகான மகள் இருக்கிறாள். எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறாள். ஆனால் அவளுக்கு ஒரு பிரச்சனை. தினமும் காலையில் எழுந்ததும் மந்தமாக இருக்கிறாள். சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடித்து விடுகிறாள். இதற்கு காரணம் என்ன?" என்று கேட்டார் சங்கரன்பிள்ளை.
       அறிவுஜீவி சற்று நேரம் கண்மூடி யோசித்துவிட்டு கேட்டார்..." உன் மகள் பால் குடிப்பதுண்டா?"
       "உண்டு, சிறந்த பசுவிடமிருந்து சுத்தமாக கறந்த பாலை மட்டும் தான் அவளுக்கு கொடுக்கிறோம்" என்றார்.
       "அங்கே தான் பிரச்சனை" என்றார் அறிவுஜீவி.
       "வயிற்றுக்குள் போனதும் பால் தயிராகிவிடும், இரவு படுக்கையில் உன்மகள் புரளும் போது அந்ததயிர் கடையப்பட்டு வெண்ணெய் திரளும், உடம்பு சூட்டில் அந்த வெண்ணெய் உருகி நெய்யாகி விடும். அந்த நெய் ரசாயன மாற்றத்தால் சக்கரையாகி விடும். அந்த சக்கரை ரத்தத்தில் கலக்கும் போது ஒரு போதை பிறக்கும். காலையில் அந்த போதை தெளிவதற்குள் எழுந்திருப்பதால் தான், உன் மகளுக்கு அந்த பிரச்சனை!"
       புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளுக்கெல்லாம் விதியின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்வதும், இந்த அறிவுஜீவி சொன்ன காரணத்தைப் போல் அர்த்தமில்லாதது தான்.
எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று சில பெரியவர்கள் சொல்வதை நம்பி உங்கள் பார்வையை குறுக்கிக்கொள்வீர்களா? உங்கள் உறிதியை மழுங்கடித்துக் கொள்வீர்களா?
       யாருக்கும் வெளிச்சூழ் நிலைகள் அவர்கள் விரும்பியபடி நூறு சதவிகிதம் அமைந்து விடுவது இல்லை. மாற்ற முடியாத சூழ்நிலைகளை எதிர்த்து நின்றால் உங்கள் அமைதி காணாமல் போகும். மூளை ஸ்தம்பித்து நிற்கும்....
       மாறாக அதை உள்ளபடி ஏற்றுக்கொண்டுவிட்டால், அடுத்து என்ன செய்வது என்று புத்திசாலித்தனமாக யோசிக்க முடியும். இதற்காகத்தான் விதி என்று சொல்லி வைத்தார்கள்.
       ஆனால் விதி என்றால் எதையும் சகித்து செயலற்று இருப்பது என்று தவறாகபுரிந்து கொண்டுவிட்டீர்கள். எந்த சூழ்நிலைகளையும் சகித்து கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சகித்துக் கொள்வது விருப்பத்தோடு செய்வதல்ல. கட்டாயத்தால் செய்வது.
       எனவே அதைவிடுத்து, எதையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு, அந்த விதியை உங்களுக்கேற்ப்ப மாற்றிக்கொள்வதெப்படி என்று யோசித்துச் செயலாற்றுங்கள்.
       நீங்கள் வளர வேண்டுமானால் விதி பற்றிய பயத்திலிருந்து முதலில் வெளியே வரவேண்டும்.
       'கடவுளே வந்து சொன்னாலும் என்விதியை நான் தான் தீர்மானிப்பேன்' என்ற உறுதி உங்களூக்கு வரவில்லையென்றால், உங்கள் வாழ்க்கை அதன் போக்கில் தான் நடக்கும்.
விரும்பியதை அடையவேண்டும் என்ற வேட்கை உங்களுக்கு இருந்தால், அந்த விதியை கடவுளிடமிருந்து பறித்து நீங்களே அதைக் கையாள ஆரம்பித்தால், நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆனந்ததை ருசிப்பீர்கள். உங்கள் வாழ்வே ஆனந்தமயமாகிவிடும்....

வாழ்க வளமுடன்!
                                                                                                                           நன்றி:ஆனந்தம்