பிரான்சு
பிரான்சு அல்லது
பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது
பெருநிலப் பரப்பையும் மற்றைய
கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும்.
உலகின் இரண்டாவது
பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது. பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும்
குடியரசு.
உலகின் மிக
வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் செல்வம் மிகுந்த
நாடும், உலகில் நான்காவது பணக்கார நாடும் ஆகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட
பிரான்சு, உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது. உலக சுகாதார
அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும்
நாடாகப் பிரான்சு உள்ளது.
பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப்
பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்
வருகிறார்கள்.
பிரான்ஸ் என்ற
பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில்
குடியேறிய யேர்மனிய பிராங்க் இன மக்கள் தொடர்பில் ஏற்பட்டது.
நாட்டின்
தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக்கடற் காலநிலை நிலவுகிறது. மேற்கில், கடும்
மழைவீழ்ச்சியுடனும், மிதமான மாரி, குளிர் முதல் மிதமான வெப்பம் கொண்ட கோடையுடனும்
கூடிய பெருங்கடற் காலநிலை காணப்படுகின்றது. உட்பகுதிகளில், கொந்தளிப்பான
வெப்பத்துடன் கூடிய கோடையையும், குறைவான மழையுடன் கூடிய குளிரான மாரி காலத்தையும்
கொண்ட கண்டக் காலநிலை உள்ளது. ஆல்ப்சுப் பகுதியிலும் பிற மலைப் பகுதிகளிலும்
பெரும்பாலும் ஆல்ப்சுக் காலநிலை நிலவுகின்றது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு 150
நாட்களுக்கும் மேல் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே காணப்படுவதுடன், ஆறு மாதங்கள்
வரை இப்பகுதிகளைப் பனிமூடி இருக்கும்.
பிரான்சின்
எல்லைகள் பண்டைய கவுல் இராச்சியத்தின் எல்லைகளோடு அண்ணளவாக ஒத்துப்போகிறது. கவுல்
இராச்சியமானது ஜூலியஸ் சீசரினால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது.
கவுலியர்கள் காலப்போக்கில் தமது மொழியான கவூலிய மொழியை விட்டு உரோமன் பேச்சையும்
(இலத்தீன், இதுவே பின்னர் பிரெஞ்சு மொழியாக மாறியது) கலாச்சாரத்தையும்
தழுவிக்கொண்டனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம்
இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே
நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. புனித ஜெரோம் தமது கட்டுரையொன்றில் தூய
கிறிஸ்தவம் கவுலில் மட்டுமே காணப்படுகிறது என எழுதினார். ஐரோப்பிய மத்திய
காலங்களில் பிரான்சின் ஆட்சியாளர்கள் இதனைப் பயன்படுத்தி தமது நாட்டை "அதி
கிறிஸ்தவ இராச்சியம் பிரான்ஸ்" என அழைத்தனர்.
0 comments:
Post a Comment