"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 10

செவ்வாய் கிரகம் [Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்கமே இருக்கிறது. என்றாலும் இந்த வேறுபாடு எந்தவித சோதிட விளைவுகளையும் அல்லது வேறுபாடுகளையும் ஏற்படுத்தவில்லை. எனவே, தூரங்கள், சோதிடத்திற்கு முக்கியம் இல்லை என்றால், விண்மீன் திரள்கள் [நட்சத்திர மண்டலம் / galaxies], குவாசார் [quasars எனப்படுவது பாரிய கருந்துளையை மையத்தில் கொண்டுள்ள பிரமாண்டமான விண்மீன் பேரடைகளாகும்], நெபுலா [சூரியக் குடும்பதிற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகிலே நெபுலா (Nebula) ஆகும்] மற்றும் கருங்குழி அல்லது கருந்துளை (Black Hole என்பது, இவற்றின் எல்லைக்குள்  செல்லும், ஒளி உள்பட  எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்) போன்றவற்றை ஏன் சோதிடத்தில் சேர்க்கவில்லை. ஏன் பிறந்த தருணம், கருத்தரித்தல் தருணத்தை விட [moment of birth, rather than conception] சோதிடத்தில் ஒருவரின் பலனை தீர்மானிக்கிறது ? உண்மையில் கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். எனவே உயிர் ஆரம்பிக்கு நேரம் தான் கருத்தரித்தல் என்றாகிறது. பின் கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறும் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம். எனவே, ஏற்கனவே வளர்ச்சி அடைந்த குழந்தை வெளியே வரும் தருணம் தான் பிறந்த தருணம் ஆகிறது என்பது குறிப்பிடத் தக்கது. எனவே கோள்களின் தாக்கம் ஒரு மனிதனில் இருக்க வேண்டும் என்றால், அவன் உயிர் பெரும் தருணத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் சோதிடம் பிறப்பு தருணத்தையே எடுக்கிறது, அது தான் சோதிடத்தின் சூழ்ச்சி, ஏன் என்றால் ஒருவருக்கும் கருத்தரிப்பு தருணம் சரியாக தெரியாது. ஆகவே தெரிந்த ஒன்றை கேட்டு தானே, தன் ஏமாற்று வித்தையை தொடங்கலாம் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்,  மற்றது சமயத்தையும் புராணத்தையும் தனக்கு சார்பாக புத்திசாலித்தனமாக அங்கு புகுத்தி தன் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டான்.

 

பயனில்லாத எதையும் மக்கள் தொடர்ந்து வைத்து கொள்வதில்லை. பயனற்ற பொருட்கள் வீட்டில் இருக்குமானால் அவற்றை அழித்து விடுகிறோம். பயனில்லாமல் சேர்ந்து விடுகிற குப்பை கூளங்களை தினமும் கூட்டி அப்புறப்படுத்தி விடுகிறோம். பயனற்ற எதையுமே போற்றி பாதுகாக்கிற பழக்கம் மனித இனத்திற்கு இல்லை. ஆனால் இந்த விடயத்தில் அப்படித் தோன்றவில்லை. அதற்கு முக்கிய காரணம், இது எவ்வளவு பொய்யாகவும் ஏமாற்று வித்தையாகவும்  இருந்தாலும், சாதகம் ''மருத்துப்போலித் தாக்கம்" ['placebo effect'] எனப்படும் உளவியல் விளைவால் மனிதனை நன்றாக திருப்திப்படுத்துவதாகும். இது முழுக்க முழுக்க அதன் மேல் உள்ள நம்பிக்கையே ஒழிய அதன் செயல் முறையல்ல. அந்த நம்பிக்கையே உங்களில் முன்னேற்றத்தையும் கொடுக்கிறது. இதை நீங்கள் புரியவேண்டும்! 

 

சோதிடம் எவ்வளவு பொய் என்பதற்கு ஒரு பழைய கதை உண்டு. ஒரு நாள், ஒரு சோதிடர் அரசரிடம் வந்து "இன்னும் ஆறு மாத்தில் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும், என் கணக்கு என்றும் பொய்யாகாது" என்று சொன்னார். இந்த மரண பயத்திலேயே அரசருக்குப் பாதி உயிர் போய்விடும் போலிருந்தது.  இது பொறுக்க முடியாத அறிவாளி அமைச்சர் சோதிடரைக் கூப்பிட்டு  "தங்கள் கணக்குப் படி, தங்களின் ஆயுட்காலம் எவ்வளவோ?" என்று கேட்டார். "பன்னிரண்டு வருடத்திற்கு எனக்கு ஒரு கண்டமும் கிடையாது. இது நிச்சயம்" என்று சத்தியம் செய்தார் சோதிடர்.  அடுத்த கணம் அமைச்சர் வாளை உருவினார்.  சோதிடரின் தலை தரையில் கிடந்தது. "இந்தப் பொய்யன் சொன்னதை இன்னும் நம்புகிறீர்களா?" என்று அரசரைத் தெளிவித்தார் அமைச்சர் என்று அந்த கதை கூறுகிறது.  

 

ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்துடன் நாம் எழும்பொழுது அல்லது நிலா ஒளியில் பார்பிக்யூ [barbecues / திறந்த வெளியில், நெருப்பில் உணவை சுட்டு பெரும் விருந்து அளித்தால்] ஒன்றுக்கு திட்டம் போடும் பொழுது அல்லது பெரும் அலையில் [high tide] மீன்பிடிக்கும் பொழுது, நாம் வானத்து கோள்கள் எப்படி  நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்கிறோம். ஆனால், சோதிடர்கள் உரிமை கோரும் குறியீட்டு இணைப்பில் [symbolic connection claimed by astrologers] இருந்து இது வேறுபட்டது. எப்படி சூரிய ஒளி எம்மை உறக்கத்தில் இருந்து எழுப்புகிறது, எப்படி பௌர்ணமி ஏற்படுகிறது, அல்லது கடலில் பெரும் அலைகள் ஏற்படுகின்றன என்பனவற்றுக்கு அறிவியல் ரீதியாக கோள்களின் நடமாட்டத்துடன் தொடர்பு படுத்திய விளக்கங்கள் உண்டு. ஆனால் சோதிடர்கள் தமது கூற்றுகளின் உண்மைத் தன்மையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் அற்று இருப்பதுடன், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளுக்கு [propositions already accepted in advance] ஒரு சான்று தேடுவதிலேயே காலம் கடத்துகிறார்கள்.  இவர்களின் பசப்பு வார்த்தையில் ஏமாந்து போகிறவர்கள் அப்பாவி மக்கள் மட்டும் அல்ல, மெத்தப் படித்தவர்கள் கூட பேராசைக்கும் சோம்பலுக்கும் அச்சத்துக்கும் இரையாகி, ஏமாந்து போகிறார்கள். அதிலும் ஆண்களை விட பெண்களே கூடுதலாக இதில் விழுகிறார்கள் என ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன [According to research females are more inclined towards horoscope].  சோதிடர்களுக்கு வருவாய் பலன் சொல்வதால் மட்டும் வருவதில்லை. பரிகாரம் சொல்வதால்தான் கூடிய வருவாய் வருகிறது. சோதிடர்கள் தாங்களே பொதுவாக பரிகாரம் செய்கிறார்கள் அல்லது குறிப்பிட்ட கோயிலுக்குப் போய் பூசை, யாகம் செய்யச் சொல்கிறார்கள். இது நீங்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று.

 

"விதியை வெல்ல முடியாது என்று சொல்லும் சோதிடர்களே, அதை வெல்ல பரிகாரங்களையும் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாக இல்லையா ?"

 

ஒரு மனிதனது வாழ்க்கையை அவன் பிறந்த மண்ணும் அவனை சூழ்ந்துள்ள சூழலும் கட்டாயம் பாதிக்கும். உதாரணமாக அவன் மூச்சுவிடும் காற்று, அவன் குடிக்கும் தண்ணீர், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் உறைவிடம் மற்றும் தட்ப வெட்பம் அவனை வெகுவாகப் பாதிக்கின்றன. அத்துடன் ஈர்ப்பு சத்தியை பொறுத்த அளவில் மனிதனை பெரும் அளவில் தாக்கக்  கூடியது புவிஈர்ப்பே ஆகும். எனினும் சோதிடம் இந்தப் புவியை அறவே கைவிட்டு விட்டது. இப்படி பலவற்றை கவனத்தில் சோதிடம் எடுக்கவில்லை. அது மாத்திரம் அல்ல, இந்தியா சோதிடர்களிடம் இரண்டு பஞ்சாங்க [ஐந்திறன்] முறை கூட உண்டு. ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் மற்றது திருக்கணித பஞ்சாங்கம் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில், இன்றைய சூழலுக்கு திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் இருக்கிறது. அதேவேளை திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.

 

"என்னுடைய வாழ்க்கையில் எனது சாதகத்தில் சொன்னபடி, எனது கைரேகை சாத்திரம் சொன்னபடி எல்லாம் அப்படியே  நடக்கிறது" என்று சொல்லும் ஏமாளிகளும் கோமாளிகளும் நிறைய இருக்கு மட்டும் சோதிடர்கள் எதற்காகக் கவலைப் படவேண்டும்? எதைப்பற்றிக் கவலைப் படவேண்டும்? ஏன் ஆய்வு செய்ய வேண்டும் அல்லது எதிர்த்து வாதாட வேண்டும்?

 

"சோதிட சாத்திரத்துக்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. சோதிடத்துக்கு உள்ள ஒரே அடிப்படை மனத்தளவிலான வெறும் நம்பிக்கைதான்" அது சோதிடனுக்கு நன்றாகத் தெரியும். அது தான் அவன் தன் சாதகம் ஒரு நாளும் பார்ப்பதில்லை. பாரதிதாசனின் காப்பியங்களில் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ , அவரின்  முதல் காப்பியம் ஆகும். இது 1930 இல் வெளிவந்தது ஆகும். அதில் ஒரு இடத்தில், இந்தியாவில் எல்லா வளங்களும் இருந்தாலும்,  இவற்றுடன் மூடப்பழக்கமும் இருக்கின்றதே! இந்த மூடப்பழக்கம் ஒழிந்தால்தான் இந்தியா முன்னேறும் என்று

 

"நல்ல இமயம் நலம் கொழிக்கும் கங்கைநதி

வெல்லத் தமிழ் நாட்டின் மேன்மைப் பொதியமலை

செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்

தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன் மரங்கள்

இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்

முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?

செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?

மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்

ஓடுவது என்றோ? உயர்வது என்றோ?"

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 393-401)

 

என பாரதிதாசன் அழகாக பாடுகிறார். இன்று  91 ஆண்டுகள் கழிந்தும் நாம் அதை இன்னும் கைவிடவில்லை.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01: 

-முற்றிற்று-

2 comments:

  1. செ .மனுவேந்தன்Friday, July 02, 2021

    சாஸ்திரத்தின் ஆரம்ப காலத்திலிருந்தும் பல்வேறு இனங்களின் நம்பிக்கை, தமிழரின் நம்பிக்கை, சாஸ்திரத்தில் கவனிக்கப்படும் கிரகங்கள், அதில் உள்ள குளறுபடிகள் ,நம்பச்செய்யும் வகையிலான தந்திரமான சாஸ்திரிமாரின் குறிப்புகள் என பல்வேறு கோணங்களிலுமிருந்து அலசி பயனுள்ள பல தகவல்களடங்கிய இக்கட்டுரை பகுதி பத்துடன் சிறந்த விளக்கத்துடன் முடிவடைகிறது. இதற்கு ஆழ்ந்து,அவதானித்து பல்வேறு தேடல் மூலம் சிறப்பாக தொகுத்து வழங்கிய தொகுப்பாளருக்கு நன்றியும் பாராட்டுகளும்

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்

    ReplyDelete