வாழ்வியல் சிந்தனைகள் - பகுதி:05

  

தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

-ஆ. அந்தோணிசாமி

(கட்டுரையாளர்,

பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

அரசு கலைக்கல்லூரி,

சேலம் – 07)

 


அரசியல் விழிப்புணர்வு

     மக்கள் வாழ்வு மேம்பட நல்ல தொலைநோக்குள்ள நல்ல தலைவா்கள் உருவாக வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டி தோ்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் இன்று சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் பந்து எரியும் போட்டியைப் போன்று செருப்பு வீசும் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ”கோயில் செய்குவோம்” என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் கவிஞா் வைரமுத்து இதனை நகையாடுகிறார்.

 

     இன்னும் கொஞ்சம் நாளில்

     அத்தனை சட்டக்கலைகளும்

     ஆலயங்கள் ஆகலாம்

     அங்கும்

     செருப்போடு நுழைவது

     தடை செய்யப்படலாம்”.   

 (இன்னொரு தேசியகீதம்)

 

தோ்தல் முறை மாறினாலும் ஜனநாயகம் மட்டும் மாறாமலே இருக்கிறது. அதனால் தான் அரசியல்வாதிகள் கட்சி மாறிகளாக மாறிவிட்டனா்.

 

     எங்கள் ஊா் எம்.எல்.ஏ

     ஏழு மாதத்தில்

     எட்டுதடவை

     கட்சி மாறினார்”   (மீரா.ஊசிகள்)

 

என்ற மீராவின் வரிகள் மக்கள் சிந்தனைக்கு விடப்பட்டதாக அமைகின்றன. அரசியல் விழிப்புணா்வு இன்றைய தமிழ் இலக்கியம் சுட்டிகாட்டுகிறது.

 

அறிவியல் விழிப்புணா்வு

     இன்றைய வாழ்வில் அறிவியலில் வளா்ந்த நாடுகளே வளா்ந்த நாடுகளாக அறியப்படுகின்றன. அறிவியல் விழிப்புணா்வு இன்றைய வாழ்வில் அடிப்படையான ஒன்றாக உள்ளது. மேலைநாடுகளில் அறிவியல் வளா்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நம் மக்கள் அறிவியல் என்ற சொல்லையே இப்போதுதான் கண்டறிந்திருக்கிறார்கள்.

 

     முடங்கி கிடக்காதே! விரைவில் முன்னேற

     வழிபார்! முயன்றால் முன்னேற முடியும்.

     மூச்சு விட்டுக்கொண்டிருந்தவன் எல்லாம்

     மனிதன் இல்லை

     முயற்சி செய்து கொண்டிருப்பவன்

     மட்டுந்தான் மனிதன்    

   (பா.விஜய் சிந்தனைச் சிறகுகள்.) என்பார் பா.விஜய்

  

பொதுவுடமை

     இயற்கையின் மூலம் பொதுவுடமைச் சிந்தனைகளைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகிறார் கவிஞர் வைரமுத்து ”வானம்” பற்றி கவிதையில்

 

குனிந்து குனிந்து  கூன் விழுந்த மனிதா!

வான் பார்க்கநிமிர் வானம் முழுக்க உனக்கு

நீ ஏன் வரப்புக்குப் போராடுகிறாய்?”

 

என்ற வரிகள் தொழிலாளர்களின் நிலையைச் சுட்டி, அவர்களுக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவது போல் அமைகிறது. இன்றைய வாழ்வில் அடிமைத்தனத்தை நீக்கி, சுய சிந்தனையோடு வாழவேண்டும் என்பதைநினைவூட்டுகிறது. குனிந்தே பழக்கப்பட்டவனுக்குத் திடீரென நிமிர முடியவில்லை. அதனால் குனிந்து கொண்டே செல்லாதே, உன் வாழ்கைத் தரத்தை உயர்த்தப்பார், இந்த வானம், பூ, எல்லாம் உனக்கு பிறகு எதற்குப் போராடுகிறாய் என்று கேள்விக்கேட்டு அவனைச் சிந்திக்க வைக்கிறார்.


முடிவுரை

     நாம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க விரும்புகின்றோம். உயர்ந்த இலட்சியமுறை மனிதர்களை உருவாக்குவதன் மூலமாகத்தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்; மனிதர்களை உருவாக்குவதற்குப் பெருமளவு தமிழ் இலக்கிங்களில் உள்ள வாழ்வியல் சிந்தனைகள் உதவும். பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஊட்டி மனிதம் காக்கப் பயன்படுகிறது இலக்கியங்கள்.

 

     தமிழ் இலக்கியங்களில் குவிந்துகிடக்கின்ற மனித வாழ்வியல் கருத்துகளான, அறம், தனிமனித ஒழுக்கம், இல்லறம், பிறனில் விழைதல், விருந்தோம்பல், ஈகை, கல்வி, மது பற்றிய விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, அறிவியல் நம் வாழ்க்கை பயணங்களில் கையாண்டால் நமது வாழ்வு ஒளிபெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

 

     இக்கட்டுரையானது தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகளை அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. நம் இலக்கியங்களைப் பயின்றுவிட்டால் வாழ்க்கையைப் பயின்றுவிட்டதாகப் பொருளாகும், வாழ்வியல் சிந்தனைகளைக் கற்போம். இப்புவியில் இன்பமான வாழ்க்கையை வாழ்வோம்.

-முடிவுற்றது-

 


0 comments:

Post a Comment