உலகில் எட்டாவது கண்டமா?

கடலுக்கு அடியில் மூழ்கிக்கிடக்கும் ஸீலாண்டியா... உலகின் எட்டாவது கண்டமா?

உலகின் கண்டங்கள் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்த வேண்டும் என நியுஸிலாந்து ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.


ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா என, உலகில் மொத்தம் ஏழு கண்டங்கள் இருக்கின்றன. ஸீலாண்டியா என்ற எட்டாவது கண்டமும் உலகில் இருப்பதாகச் சொல்கிறார்கள் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். ஸீலாண்டியாவின் ஒரு துளிதான் நியூஸிலாந்து தீவுகள் என்பது அவர்களது வாதம். ஸீலாண்டியா கண்டம் தென் பசிபிக் கடலின் அடியில், ஏறத்தாழ 4.9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அளவில் ஆஸ்திரேலியாவைவிட மூன்று மடங்கு பெரியது ஸீலாண்டியா.  மொத்த அளவில் 94% கடலில் மூழ்கியிருக்கிறது. மீதியிருக்கும் 6% தான் நியூஸிலாந்து தீவுகள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவிட்டுதான் இந்த முடிவுக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

 

மார்டிமர் என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் இயங்கும் எட்டு பேர் கொண்ட குழு, இது பற்றிய அறிக்கையை ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா(GSA) என்ற அமைப்பு வெளியிடும் இதழில் பதிவிட்டிருக்கிறது.

 

இவர்களின் ஆராய்ச்சியின்படி ஸீலாண்டியா தான் உலகின் இளமையான கண்டம் போலவே, பேலியோ டயட் இருந்து சிறுத்தது போல குட்டியாகவும் இருக்கிறது. ஆனால் அதே சமயம், ஒரு நிலப்பரப்பை கண்டம் என வகைப்படுத்தத் தேவையான அனைத்து தகுதிகளையும் ஸீலாண்டியா கொண்டிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.

 

ஒரு நிலப்பரப்பை கண்டம் எனச் சொல்வதற்கு சில வரையரைகள் இருக்கின்றன. கடல்மட்டம், மண்பரப்பு எனப் பல விஷயங்களை வைத்துதான் கண்டம் என்ற அந்தஸ்து தரப்படுகிறது. ஸீலாண்டியாவையும் ஒரு கண்டம் என அறிவிக்க வேண்டும் எனக் கேட்கிறது நியூஸிலாந்து. இது, தனது நாட்டின் கெளரவம் என்கிற ரீதியில் பார்க்கப்படக் கூடாது. ஸீலாண்டியாவின் ஆரம்பகால மாற்றங்களை, அதன் வரலாற்றை ஆராய்ச்சிசெய்ய இந்த அங்கீகாரம் உதவும் என்கிறார் மார்டிமர்.

 

ஸீலாண்டியா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்:

1) ஸீலாண்டியா கண்டம் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேயாவின் நிலப்பரப்பில் இருந்து பிரிந்து, கடலில் மூழ்கியிருக்கிறது.

2) 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டது ஸீலாண்டியா. அதன் மிச்சங்கள் மட்டுமே  பசிபிக் பெருங்கடலில் இப்போது இருக்கின்றன.

3) கடலில் மூழ்கிய பகுதி, கிட்டத்தட்ட இந்தியாவின் அளவுக்கு இருந்திருக்கும்.

4) ஸீலாண்டியாவில் எரிமலைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்திருக்கிறது. அதனாலும் நிறைய பாதிப்புகளை அடைந்திருக்கிறது.

5) New Zealand, New Caledonia, Norfolk Island, Lord Howe Island Group, Elizabeth and Middleton Reefs ஆகிய தீவுகள்தான் இப்போது மிஞ்சியிருக்கும் ஸீலாண்டியாவில் உள்ள பகுதிகள்.

 

கிரகங்களைத் தாண்டி ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவருகிறோம். ஆனால், இன்னமும் பூமியையே நாம் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், இயற்கைக்கு முன்னால் மனிதன் சிறியவன்தான்.

- கார்க்கிபவா


0 comments:

Post a Comment