இருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…

 

ஆஸ்ட்ராசெனீகா, ஃபைசர் - 'இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன்

கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப்பூசி டோஸ்களை செலுத்திக் கொண்டால் கொரோனா வைரசுக்கு எதிராக அதிக பாதுகாப்பு கிடைப்பதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

 

மாறுபட்ட தடுப்பூசி டோஸ்களை பயன்படுத்துவது குறித்து ஆராயும் காம்-கோவ் பரிசோதனையில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.ஃபைசர் தடுப்பூசியின் இரு டோஸ் அல்லது ஆஸ்ட்ராசெனீகாவின் இரண்டு டோஸ் அல்லது இரு தடுப்பூசியையும் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்திக் கொண்டால் வைரஸை எதிர்கொள்ளும் செயல்திறன் எப்படி அதிகரிக்கிறது என ஆராயப்பட்டது.

 

எல்லா இணைகளும் சிறப்பாக பணியாற்றின, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தின.

 

இந்த ஆராய்ச்சசியில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள், உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சில தளர்வுகளை வழங்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

இரு டோஸ் ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பிறகு, வேறொரு தடுப்பூசியை பூஸ்டராக செலுத்திக் கொண்டால் அவர்களுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உருவாகலாம் எனவும் சோதனை முடிவில் தெரிய வந்திருக்கிறது.

 

பிரிட்டனில் ஒரே மருந்து செலுத்துவதை மாற்ற எந்த வித காரணங்களும் இல்லை, கொடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு விநியோகத்தில் இருக்கின்றன, அவை உயிர்களைப் பாதுகாக்கின்றன என்று தற்போது பிரிட்டனின் துணை முதன்மை மருத்துவ அதிகாரியாக இருக்கும் பேராசிரியர் ஜோனதன் வன்-டம் கூறினார்.

 

எதிர்காலத்துக்கு நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். "இரு வேறு மருந்து டோஸ்களை செலுத்துவது என்பது, பூஸ்டர்களைச் செலுத்தும் திட்டத்தில் பெரிய அளவில் தளர்வுகளைக் கொடுக்கும். மேலும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருக்கும் நாடுகளுக்கும் உதவியாக இருக்கும். அதோடு தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்படுவதில் சிரமம் ஏற்படுபவர்களுக்கும் வசதியாக இருக்கும்" என்கிறார்.

 

ஏற்கனவே சில நாடுகள் இரு வேறுபட்ட கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துகின்றன. ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் முதல் டோஸாக ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட இளைஞர்களுக்கு ஃபைசர் அல்லது மாடர்னாவின் தடுப்பூசி டோசை இரண்டாவது டோசாக வழங்கி வருகின்றன. ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி செலுத்துவதால் ரத்தக் கட்டு ஏற்படுவதை கவனத்தில் கொண்டு இப்படி மாறுபட்ட இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அவர்கள் வழங்கத் தொடங்கினார்கள்.

 

கொரோனா வைரசை கொல்வதற்கும், உடலில் போதுமான ஆன்டிபாடிக்கள் உருவாவதற்கும், டி செல்கள் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்தவும், இரு டோஸ் கொரோனா தடுப்பூசிகள் அவசியம்.

 

காம்-கோவ் பரிசோதனையில், 50 வயதுக்கு மேற்பட்ட 850 தன்னார்வலர்களுக்கு நான்கு வார இடைவெளியில் செலுத்திய போது கீழ்கண்ட விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

1. ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசிக்குப் பிறகு ஃபைசர் தடுப்பூசி டோஸ் செலுத்தப்படுவதை விட, ஃபைசர் தடுப்பூசிக்குப் பிறகு ஆஸ்ட்ராசெனீகா செலுத்துவது, அதிக அளவில் ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பான்கள் மற்றும் டி செல்களை உருவாக்குகிறது.

 

2. இரு டோஸ் ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் கிடைக்கும் பாதுகாப்பை விட, இந்த இரு கலவைகளும் அதிக அளவில் எதிர்ப்பான்களை உருவாக்குகின்றன.

 

3. இரு டோஸ் ஃபைசருக்குப் பிறகு, ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது அதிக அளவில் டி செல் எதிர்வினைகளை உண்டாக்குகிறது.

 

மக்களுக்கு ஒரே தடுப்பூசியை இரு டோஸ்களிலும் செலுத்தும் பிரிட்டனின் கொள்கையை இவ்வாராய்ச்சி குறைத்து மதிப்பிடவில்லை என இவ்வாராய்ச்சியின் தலைமை ஆய்வாளர் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேத்திவ் ஸ்னாப் கூறினார்.

 

"இரு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை 8 - 12 வார கால இடைவெளியில் செலுத்திக் கொள்வது, கடுமையான கொரோனா பரவல் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக சிறப்பாக செயல்படுவதை நாம் அறிவோம். இது டெல்டா திரிபு வைரஸ்களை எதிர்கொள்கிறது"

 

தடுப்பூசிகளை கலவையாக செலுத்திக் கொள்வதும் நல்ல பலன்களைக் கொடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

 

இவ்வாராய்ச்சியில் நான்கு வார இடைவெளியில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது பிரிட்டனில் பொதுவாக கடைபிடிக்கப்படும் 8 - 12 வார இடைவெளியை விட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

 

"இரு டோஸ் தடுப்பூசிக்கு மத்தியில் நீண்ட இடைவெளி கொடுப்பது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்" என கூறினார்.

 

12 வார இடைவெளியுடன் இரு வேறுபட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் சோதனை முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்

 

பூஸ்டர் டோஸ்கள்

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை வெளியான மற்றொரு ஆய்வில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்கும் பிறகு ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், செலுத்தப்படுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 

இந்த ஆண்டு குளிர்காலத்திற்கு முன்னதாக மக்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்படுவது தேவைதானா என்பதை இப்போதே கூற முடியாது என்கின்றனர். காலப்போக்கில் எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

"இலையுதிர்காலத்தில் நமக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படுமா இல்லையா என்பதுதான் தற்போதுள்ள பெரிய கேள்வி. கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், அது சாத்தியமானதாக இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன். வயது காரணமாகவோ மருத்துவ ரீதியாகவோ பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பவர்களுக்கு பூஸ்டர்கள் வழங்கப்படலாம்"

 

ஆஸ்ட்ராசெனீகா செலுத்திக் கொண்டவர்களுக்கு மீண்டும் ஆஸ்ட்ராசெனீகா மருந்தைச் செலுத்துவதைக் காட்டிலும் ஃபைசர் தடுப்பூசியை ஒரு பூஸ்டராக வழங்கலாம் என அவர் பரிந்துரைத்தார், அதே சமயம் ஃபைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் தேவையில்லை, என காம்-கோவ் பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன.

 

ஏற்கனவே இரு டோஸ் ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்வதை 90 சதவீதத்துக்கும் அதிகமாக குறைக்கும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

எனவே ஆஸ்ட்ராசெனீகா மருந்து நல்ல செயல்திறன் கொண்டது என்பதை நாம் அறிவோம். இரு டோஸ் வழங்கப்படும் இடைவெளிக் காலத்தை அதிகரித்தால் ஆஸ்ட்ராசெனீகா மெதுவாக, நீண்ட காலத்துக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தற்போது 12 வார கால இடைவெளியுடன் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

 

முதல் இரு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, மூன்றாவது பூஸ்டர் டோஸ் வேறு நிறுவன மருந்து கொடுக்கப்படலாம். அப்படி மாற்றி கொடுக்கும் போது குறுகிய காலத்தில் தலைவலி, தசை வலி போல நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நன்றி :மிஷெல் ராபர்ட்ஸ் -சுகாதார ஆசிரியர், பிபிசி

 

0 comments:

Post a Comment