உங்கள் நண்பரைக் கண்டுபிடியுங்கள்………………

உண்மையான நண்பன் யார்?

எம் இனிய இளையோரே! உலகத்தில் உத்தமராக வாழத் துடித்துக் கொண்டிருக்கும் இளம் இதயங்களே!

உங்கள் உண்மை நட்புக்குரியவன் யார் என்று அறிந்து கொண்டீர்களா? அல்லது, உங்களுடன் பழகும் எல்லோரையுமே நண்பர்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றீர்களா? ஒருகணம் ஆராய்ந்து பாருங்கள்!

சகோதர சகோதரிகளே! நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம்கூட உங்கள் குணத்தைக் காட்டிவிடும்; நீங்கள் வாழ்விற்காகத் தேர்ந்தெடுக்கும் பாதைகூட உங்கள் நண்பரின் குணத்தைக் காட்டிவிடும். எனவே, உங்கள் நண்பர்களை நீங்கள் எப்படித் தேர்வு செய்திருக்கிறீர்கள் என்பதை ஒருமுறை அலசிப் பாருங்கள்.

நாம் பள்ளியில் படிக்கும்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் எம்முடன் படிக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் எமது நண்பர்களா? எம்முடன் திரைப்படம் பார்க்க வருகிறார்களே, அவர்கள் நண்பர்களா? வீதிகளில் சந்திக்கும்போது புன்னகைத்து சில நிமிடங்கள் பேசுகிறார்களே, அவர்கள் நண்பர்களா? விளையாட்டு மைதானத்தில் எம்முடன் இணைந்து சந்தோஷமாக விளையாடுபவர்கள் எல்லோரும் நண்பர்களா? அல்லது தொலைபேசியில் மணி கணக்கில் நேரம் போவது தெரியாமல் அரட்டை அடிக்கிறார்களே, அவர்கள் நண்பர்களா?

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

கூடவே இருந்து கூழ் குடிக்கும்போது "உயிர் நண்பன்" என்று கூறியவனே, நாளை நம் வாழ்வுக்குக் குழிபறிக்கக் கூடும். உற்றவனாக நடித்து உதவி பெற்றவன், தன் தேவை முடிந்ததும் நம் இதயத்தில் உதைக்கக் கூடும். முகத்திற்கு நேரே சிரித்துப் பேசி நல்லவனாக நடித்தவனே, நாளை பிறரிடம் நம்மைப் பரிகசிக்க வைக்கக் கூடும். நமக்காக அழுது நடிப்பவனே, நம் சந்தோஷத்தை அழித்து நம்மை உண்மையிலேயே அழ வைக்கக் கூடும்!

இருவருக்கு இடையே நட்பு உருவாவதற்கு நீண்ட காலத் தொடர்போ பழக்கமோ இருக்க வேண்டும் என்பதில்லை; இருவருக்கும் இடையே காணப்படும் ஒத்த மன உணர்வே போதுமானது. நேரில் காணும்போது முகத்தில் புன்னகையைக் காட்டுவது மட்டும் நட்பின் அடையாளம் அல்ல; இதயப்பூர்வமாக நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

வள்ளுவன் நட்புக்கு இலக்கணம் வகுக்கும்போது அழகாகச் சொல்கிறான்:

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு."

அதாவது, ஆடை நழுவும்போது நமது கை எவரது உத்தரவுக்கும் காத்திருக்காமல் உடனடியாகச் சென்று ஆடையைச் சரிசெய்வது போல, நண்பனுக்கு ஒரு துன்பம் வரும்போது துடித்துப் போய் உடனடியாக ஓடிச்சென்று உதவுவதே உண்மையான நட்பாகும்.

பழகும் இருவரிடையே வளரும் இதயப்பூர்வமான அன்பினால் கிடைக்கும் இன்பமே உண்மையான நட்பு. நற்பண்பு இல்லாதவர்கள் அன்பு செலுத்துவது போல நடித்தாலும், அவர்களது சேர்க்கை நம்மைத் தீய வழிகளுக்கே இட்டுச்செல்லும். தீய காரியங்களுக்குக் கூட்டுச் சேர்வதையெல்லாம் "நட்பு" என்று சொல்லிவிட முடியாது.

யாரை உண்மையான நண்பனாகக் கருத முடியாது?

  • தன் சுயநலனுக்காக இணைந்திருந்து, தேவை முடிந்ததும் பிரிந்து செல்பவர்.
  • ஆபத்து வேளைகளில் நம்மைத் தனியே தவித்துவிட்டு ஓடுபவர்.
  • பொழுதுபோக்கிற்காகவும், சிரித்துப் பேசுவதற்காகவும் மட்டுமே எம்மைப் பயன்படுத்துபவர்.
  • நாம் செய்யக்கூடிய நியாயமான நற்செயல்களைச் செய்யவிடாமல் நம்மைத் தடுப்பவர்.
  • சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் வாழ்பவர்.
  • தனிமையில் பேசும்போது இனிமையாகப் பேசி விஷயங்களைப் பெற்றுக்கொண்டு, பொது இடங்களில் அதையே வைத்து நம்மைப் பழித்துப் பேசுபவர்.

இத்தகையோரின் தொடர்பை உண்மையான நட்பாக ஏற்​க முடியாது. அதேநேரம், அவர்களிடம் பகைமை கொள்ளாமல் தகுந்த இடைவெளியில் விலகி இருப்பதே நல்லது.

ஔவையாரும் தனது மூதுரையில் இதையே குறிப்பிடுகிறார்:

"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு."

குளத்தில் நீர் வற்றியவுடன் வேறு இடம் நோக்கிப் பறந்து செல்லும் பறவைகளைப் போல, நமக்குத் துன்பம் வந்தவுடன் விலகிச் செல்பவர்கள் உண்மையான உறவோ நண்பனோ அல்லர். மாறாக, நீர் வற்றியபோதும் அதே குளத்திலேயே காய்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, எமது இன்பத்திலும் துன்பத்திலும் கடைசிவரை உறுதுணையாக நிற்பவர்களே உண்மையான நண்பர்கள்.

எனவே என் இளம் நெஞ்சங்களே! உங்கள் போலி நண்பர்களையும், உண்மை நண்பர்களையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தூய நட்பைப் போற்றி, நலமாக வாழப் பழகுங்கள்!


                                            
                                            --------------செ.மனுவேந்தன்.

1 comments:

  1. vinothiny pathmanathan dkSaturday, August 20, 2011

    நட்பின் தகுதி பற்றி மிக ஆழமாக சிந்தித்து யதார்த்தத்தினை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு நன்றிகள். நம்பிக்கையான நட்பு என்பது இன்றைய
    காலகட்டத்தில் ஒரு கேள்விக்குறி தான். தோழன் என்பவன் சிரித்துப் பேசுவதற்கு மட்டும் அல்ல ,துவண்டு போகும் போது தோள் கொடுக்கவும் தான் என்று மிகவும் சிறப்பாக இந்த தொகுப்பினை வழங்கியிருக்கின்றீர்கள் .பாராட்டுக்கள் வேந்தன் அண்ணா !

    ReplyDelete