அறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் செல்வங்கள் அழிவைத் தரும் போதைப் பொருளுக்கு அடிமையானது ஏனோ?

நாம் பிறந்த மண்ணில் தொழிற்சாலைகளோ அன்றி பெருந்தோட்டங்களோ இருக்கவில்லை. ஒரு பக்கம் இயற்கையின் கொடுமை. மறுபக்கம் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் கழுகுப் பார்வை. தரப்படுத்தல் என்னும் கொடிதான அளவீட்டு முறையை அமுல் செய்து கல்வியிலும் தொழில் வாய்ப்பிலும் ஏமாற்றப்பட்ட இனமாக வாழ்ந்தனர் எம் தமிழ் மக்கள். வரண்ட பிரதேசம். ஆறுகள் பாயாத அந்த மண் வளமின்றி குறுகி நின்றது. வானம் பார்த்து பூமியில் விதைகளைத் தூவிய எம் விவசாயப் பெருங்குடிகள் வியர்வை சிந்தி பயிர்களைக் காத்தார்கள்.

அத்தோடு தொலை நோக்குப் பார்வையில், பாடுபட்டு தம் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தை ஊட்டினார்கள்.
காலை எழுந்தவுடன் படிப்பு என்று எங்கள் முன்னோர்கள் எமக்கு புத்திமதி கூறினார்கள் ஆனால் எங்கள் ஊரின் மாணவச் செல்வங்கள் படுக்கைக்குச் செ ன்றால்தானே காலை எழுவதற்கு என்று, தொடர்ந்து கல்வியே கருத்தனம் என்று உறுதி பூண்டு படித்தார்கள். இதனால் எத்தனை தூரம் தரப்படுத்தல் என்னும் தவறான அளவீட்டினால் பாதிக்கப்பட்டாலும் பெறுபேறுகளில் உயர்ந்து நின்றார்கள். இதனால் இனவாத அடிப்படையில் எம் மாணவர்களை நசுக்க எண்ணிய பெரும்பான்மை அரசுகள் எம்மிடமே மண்டியிட்டன. இவ்வாறு எமது தமிழர் பிரதேசத்தின் மாணவச் செல்வங்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேற முயன்றார்கள். வெற்றிகளையும் ஈட்டினார்கள். தற்போது உலகெங்கும் விஞ்ஞானிகளாகவும் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் கல்வியாளர்களாகவும் பிரகாசிப்பவர்கள் தாயகத்தில் வசதியற்றவர்களாகவும் இருந்து படித்து முன்னேறியவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இவ்வாறு எமது தாயக மண்ணில் தங்களிடமிருந்த குறைந்த பட்ச வளங்களைப் பயன்படுத்தியும் தாமாகவே முயன்றும் கல்வியில் உயர்ந்தவர்கள் மத்தியில் அவர்களின் வாரிசுகளாக விளங்க வேண்டிய தற்போதைய தாயகத்து மாணவச் செல்வங்களின் திசை மாறிய போக்கு பற்றி செய்திகள் வாயிலாக நாம் அறிகின்றபோது, உள்ளம் வெதும்புகின்றது. உதடுகள் காய்கின்றன. உமிழ்நீர் ஊற்று மறுக்கப்பட்டு தொண்டை வரண்டுபோகின்றது.
ஆமாம் அன்புள்ளவர்களே! அறிவு தரும் கல்விக்;கு மதிப்புக் கொடுத்து அதன் மகத்துவத்தால் உயர்ந்த எமது மாணவ சமூகம் தற்போது போதை தரும் வேண்டாத பொருட்களை தங்கள்பொக்கிசங்களாகநினைத்துபொக்கட்டுக்களில்காவிச் செல்லும் கசப்பான செய்திகள் பற்றித் தான் நாம் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம். யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் ஒரு பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்ற நிலையில் நன்னடத்தை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் எமக்கு, எமது பிரதேசத்தின் வளமாகத் திகழும் கல்வி தொடர்பான கேள்விகளையே தந்து நிற்கின்றன. இது பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் ஆலோசனைகளும் எம் மக்கள் வாழ்கின்ற எல்லா நாடுகளிலிருந்தும் அந்த தாயக மண்ணுக்கு காவிச் செல்லப்பட வேண்டும் என்றே நாம் அறை கூவல் விடுக்கின்றோம்.
 நன்றி:உதயன் கதிரோட்டம் 


0 comments:

Post a Comment