தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part 06"B":

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.
Compiled by: KandiahThillaivinayagalingam]
நல்லநாள்‏

மனிதனுக்கு தான் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது.தான் தொட்டது அனைத்தும் துலங்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பதில் தவறில்லை.ஆனால் செய்யும் செயல்கள் தோல்வியாய்/பிழையாய் போய்விடுமோ என்ற ஐயம் அவனை பல விடயங்களில் அலைக்கழித்து வருகிறது.கால நேரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற எண்ணம் அவனிடத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.அதுவே இப்படியான நல்ல நாள்/நல்ல நேரம் நம்பிக்கைகளை வலுபடுத்துகிறது என நினைக்கிறேன்.எனவே கால நேரமும் அவனை வெகுவாக ஆட்டிப் படைக்கிறது.காலமும் நேரமும் தன்னைக் காப்பாற்றும் என அவன் நினைப்பது விசித்திரமாக இருக்கிறது!
அகநானூறு 86:
"கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்,
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்"
திங்களினை ஒத்த உரோகிணி கூடிய நன்னாளில் அதிகாலையில் திருமணம் நிகழ்ந்துள்ளதனை அறிய முடிகிறது.
அகநானூறு 136:
"புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,"
இப்பாடலடிகளிலும் திருமண உறவுக்கு நல்ல நாள் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. நல்ல நாளிலும், அதிகாலைப்பொழுதிலும் மணம் நடைபெற்றுள்ளது.

போர் செய்யப்போகும் மன்னன்  நல்ல நாளில் குடையையும் வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்து வைப்பான்.வாள்நாள் கோள்,குடநாள் கோள் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிடுகிறார்.நெடுநல்வாடை பாண்டிய மன்னனின் அரண்மனையைப் பற்றிக் கூறும்போது இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் அந்த அரண்மனைக்குக் கால்கோள்[foundation/தொடக்கம்] நடத்தினர் என்று கூறுகிறது.

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘

பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து (72 – 78)” 

அதாவது,"சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில்,இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில்,கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர்,நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து,திசைகளைத் தெரிந்து,அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு,பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை"என்கிறது நெடுநல்வாடை.

தலைவியை இரவுக்குறியிலோ பகற்குறியிலோ சந்திக்கச் செல்லும் தலைவன் ‘இன்றைக்கு என்ன நாள்? இப்பொழுது என்ன ஓரை?’என்று நாள்,கிழமை,சகுனம் பார்த்துப் போவதைத் தொல்காப்பியர் அழகாகச்சொல்வார். 

"மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவற்கு இல்லை" (133  களவியல்) 
["ஓரை"யை இக்காலத்தில் "முகூர்த்தம்" என்கிறோம்]

எனது வயது போன அயலவர் ஒருவர் எமது வீட்டிற்கு ஒரு வெள்ளி கிழமை அன்று வரும் போது,நான் இரண்டு நீண்ட தடிகளை இணைத்த கொக்கத்தடி ஒன்றினால்,சிலந்தி வலைகளையும் தூசுகளையும் சிலிங் அற்ற கூரையில் இருந்து அகற்றி கொண்டு இருந்தேன்.இன்று வெள்ளி.துப்பரவு செய்ய கூடாது.இது துடக்கு என்று என்னை நிறுத்த சொன்னார்.அது மட்டும் அல்ல பெரும்பான்மையான மக்கள் பணம் கொடுப்பனவோ அல்லது சொத்துகள் விற்பனைவோ அல்லது வீட்டை காலியோ செய்ய மாட்டார்கள்.அதுபோல வியாழக்கிழமை முதற் தரம் வரும் விருந்தாளிக்கு பொருத்தம் அற்றது என்பார்கள்.அது போல செவ்வாய் கிழமையும் ஆகும்.  

பண்டைய காலத்தில் ஒரு ஆசிரமம் (ashram)இருந்தது,அதில் ஒரு குருவும்,சில சீடர்களும் இருந்தார்கள்,தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம்,ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு கொடுத்தது,குரு சீடர்களிடம் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார்,பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடப்பட்டது,மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது,இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக,அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது,சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள்,இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா?அங்கே தான் இருக்கு ஒரு கதையே,ஒருநாள் அந்த பூனை செத்து விட்டது,விடுவார்களா சீடர்கள்,வேறு ஒரு பூனையை தேடி பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் என்றால் பாருங்களேன்! 

ஏன் செய்கிறோம்,எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால்,காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது,உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது,கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும் என்று கருதுகிறேன்.
   (பகுதி/Part 07:"கனவுகள்" அடுத்தவாரம்  தொடரும்) 

2 comments:

 1. மனுவேந்தன்Saturday, November 09, 2013

  என் நண்பன் சொல்கிறான்,,அவன் நாலு முறை வெளிநாடு வர முயற்சி பண்ணி இடையில் பல நாடுகளில் பிழைத்து திரும்பியவன் கொழும்பில் ஒரு கடையில் தொழில் புரிய ஆரம்பிக்கிறான்.அவ்வேளையில் அவர்களின் நீண்ட கால எதிரிகளாக இருந்த மாமன் வீடும் கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர்.பிற ஊர் என்ற ரீதியில் அவர்களுக்குள் உண்டான தொடர்பு நண்பன் மாமன் மகளின் காதலில் விழ கல்யாணத்தில் முடிவடைகிறது.பிறகென்ன பொண்ணு விடவா போறா!கொடுத்த தொல்லையில் நண்பன் நேரே கனடா வந்து சேருகிறான்.அவாளை தான் திருமணம் செய்யவேண்டும் என்ற விதியும் அதன் பின்னரே என் எண்ணம் நிறைவேறும் காலமும் இருந்திருக்கிறது என அவன் அடித்துக் ௯ருகிறானே!

  ReplyDelete
  Replies
  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, November 09, 2013

   எல்லோருடைய மனதிலும் இருக்கும் கேள்வி "எனக்கு நல்ல காலம் எப்போது வரும் ?"உதாரணமாக:

   படித்து முடித்து வேலை இல்லாமல் அல்லது வேலை தேடிக்கொண்டு இருப்பவனுக்கு நல்ல வேலை கிடைத்தால் -அதை உடனடியாக நல்ல காலம் என்பான்.இப்படி எத்தனையோ சொல்லலாம்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை:அப்படி ஒன்று நடந்த பின்பு தான் அப்படி கூறுகிறான்.அதற்கு முதல் அல்ல என்பது.

   பொதுவாக காலம் நேரம் பார்த்துச் செய்தால் வெற்றி எனக் கூறுவார்கள். அப்படியானால் காலம், நேரம் இரண்டும் ஒன்றா? வேறா? என்ற ஒரு கேள்வி எழும். இரண்டும் வேறு வேறு தான். காலம் என்பது சரியான தருணம் (Proper Period) என்று வினைச் சொல்லாகப் பொருள் தரும். நேரம் என்பது பெயர்ச் சொல்லாக (Noun) நேரம் (Time) என்று பொருள் தரும்.

   "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்" என்ற நம்பிக்கை தான் சரியான காலத்துக்காக நேரத்தை விரயமாக்கி காத்துக் கொண்டிருக்க செய்கிறது.ஒரு சிலருக்கு அப்படி ஒரு தருணம், சந்தர்ப்ப சூழ் நிலையால் கிடைத்து விடுகிறது.அல்லது அப்படியான ஒரு காலத்தை தாங்கள் கொண்ட நம்பிக்கையினால்/நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்ட முயற்சியினால் அடைந்து விடுகிறார்கள். அப்படியான ஒருவர் தான் உங்கள் நண்பன் என்று நம்புகிறேன்.

   "அவாளை தான் திருமணம் செய்யவேண்டும் என்ற விதியும் அதன் பின்னரே என் எண்ணம் நிறைவேறும் காலமும் இருந்திருக்கிறது என அவன் அடித்துக் ௯ருகிறானே!"

   இதை எப்ப கூறினார்?கனடா வந்த பின் கனடாவில் இருக்கும் உங்களுடன்.அதற்கு முதல் அல்ல என்பதை கவனிக்க.

   Delete