"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்......]
அன்பு வாசகர்களுக்கு,

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"

ஏதாவது ஒரு விடுதலை மாதிரி அல்லது ஒரு மத அனுசரிப்பு மாதிரி, “ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172) என்றும்  “புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69) என்றும் “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப், புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்'' (சீவக.சிந்.1821) என்றும், சங்க காலம் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு ஊடாக, பரம்பரை பரம்பரையாக பெருமைப்பட்ட 'தை பொங்கல்', எமக்கு பல்வேறுபட்ட கலாச்சார மற்றும் பாரம்பரியங்களை கொண்டுவருகிறது. முற்றத்தில் கோலம் போட்டு தோரணம் கட்டி குடும்பமாக பொங்குவதோ, ஏறுதழுவல் நிகழ்ச்சிச்சியோ அல்லது மாட்டுவண்டில் சவாரியோ அல்லது இவை போன்ற மகிழ்ச்சியான மற்றும் நீடித்த நினைவுகளை எங்களிடம் உண்டாக்கி, நாம் வயதாகும் பொழுது, அந்த நினைவுகள் எம் வாழ்வில் ஒரு தனித்துவமான இடத்தை பிடிக்கிறது. என்றாலும், நாம் அத்தகைய மரபுகளை வரவேற்கவும் மதிக்கவும் முனையும் பொழுது, இன்றைய நவீன,அவசர உலகில், இவை எமது கொண்டாட்ட சூழலில் இருந்து வலுவிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே எமக்கு பாரம்பரியம் எதை தருகிறது ?, என்ன நன்மை செய்கிறது? என்பது தெளிவாக ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும். அதே போல நாம் ஒன்றை புது வழியில், சிறந்த வழியில் செய்ய முடியும் என்றால், அல்லது இன்றைய கால ஓட்டத்துடன் ஒவ்வாதவைகளாக இருந்தால், சூழ்நிலைக்கு அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப விட்டுக்கொடுப்புகளுடன் அவ்வற்றை மாற்றி அமைக்க முயலுவதுடன் ஏன் முன்பு சிந்தித்ததோ அல்லது செய்ததோ அகற்றப்பட வேண்டும் என்பதையும் விளங்கப் படுத்த வேண்டும். இது எம்மை பார்த்து, என்னை பெறுங்கள், என்னை  செம்மைப் படுத்துங்கள், என்னை மனிதத்தன்மையூட்டுங்கள் என்கிறது. ஆகவே இது தன் வளர்ச்சியை, மாற்றத்தை நிறுத்து அல்லது  கேள்வி கேட்க வேண்டாம் என்று ஒரு பொழுதும் சொல்லவில்லை. இது எமது குடும்பம், எமது சமுதாயம் ஆகியவற்றின் அத்திவாரம் மட்டும் இன்றி அதனை கட்டி எழுப்பும் கட்டுமானமாகவும் உள்ளன. இது எமது கடந்த காலத்தை வரையறைக்கும் வரலாற்றின் ஒரு பகுதி நாம் என்பதை, எமக்கு ஞாபகம் ஊட்டுகிறது. அது மட்டும் அல்ல, நாம் இன்று யார் என்பதையும், நாளை எப்படி நாம் இருப்போம் என்பதையும் வடிவமைக்கிறது. 


இன்றைய இளைய தலைமுறை ஏதாவது ஒன்றை பின்பற்ற முன் அல்லது செய்ய முன் அதைப்பற்றி கேள்வி கேட்டு, காரணம் அறிந்து, புரிந்து கொள்ள முனைகிறார்கள். எனவே நாம் கண்மூடித்தனமாக அதை அவர்களுக்கு புகுத்தாமல் அதன் உண்மை நிலையை காரண காரியங்களுடன் விளக்க வேண்டும். அது அவர்களுக்கு ஒரு துடிப்பையும் மகிழ்வையும் கொடுத்து அந்த பாரம்பரியத்தின் உண்மை நோக்கத்தை மேலும் அறிய அவர்களுக்கு ஒரு ஆவலையும் தூண்டும். எனவே இவைகளை மனதில் கொண்டும், இவைகளின் மேல் கொண்ட ஆவலும் அதனால் ஏற்பட்ட உந்தலும் "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" என்ற கட்டுரையை எழுதத் தூண்டியது. இது ஒன்றும் புது முயற்சி அல்ல, பலர் சென்ற வழிதான். ஆனால் கட்டாயம் ஒரு தனித்துவம் இங்கு இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். இது முப்பது பகுதிகளை கொண்டதாக வடிவமைக்கப் பட்டு மிக விரைவில் வாரத்திற்கு ஒரு பகுதியாக, எனது முன்னைய கட்டுரைகள் போல், தீபம்.கொம் ஆசிரியரின் ஆதரவுடனும் உதவியுடனும் வெளியிடப்படும். இது வரை நீங்கள் தந்த ஆதரவிற்கும், இனி தரும் ஆதரவிற்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவன், என்றாலும் இக்கட்டுரை உட்பட எனது கட்டுரைகள் எல்லாவற்றையும் பற்றிய உங்கள் அறிவுரைகள், ஆலோசனைகள், ஐயங்கள், கருத்துக்கள், மற்றும் தாங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது எமது அடுத்த அடுத்த கட்டுரைகளை மேலும் சிறப்பிக்க வழிவகுக்கும்,

பகுதி[01]- வியாழன் மலரும்....

நன்றி, அன்புடன் உங்கள்
கந்தையா தில்லைவிநாயகலிங்கம் 
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk

பகுதி 01 இனை படிக்க கீழே உள்ள தலைப்பினை அழுத்துங்கள்.↴

0 comments:

Post a Comment