தமிழ்நாடு பிறந்தது எப்படி?/சங்கரலிங்கனார்கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். 75 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு ஊரைச் சார்ந்தவர்.

வாழ்க்கை
காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தையும் துவக்கிய இவருக்கு ராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் பொட்டி சிறீராமுலுவின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்தத் திட்டமிட்டார்.

உண்ணாவிரதம்
காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27ந்தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணா. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார்.

பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாகத் தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார். 76 நாட்கள்வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இதுகுறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.

மறைவு
அக்டோபர் 10ந் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறந்தபின் தன் உடலைப் பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைத்து இறுதிமரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறினார் , அதையொட்டி அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள். தியாகி சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக‍ அரசால் விருதுநகர் ராமமூர்தி சாலையில்-கல்லூரிசாலைப் பகுதியில் ரூ 1.6 கோடியில் மணிமண்டபம் கட்டும்பணிகள் நடைபெறுகின்றன. 

தமிழ்நாடு பெயர் மாற்றம்
சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னாளில் ஆட்சிக்கு வந்த பேரறிஞரின் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு 1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தோன்றிய தமிழ்நாடு அந்நிய  ஆக்கிரமிப்பு இன்றி ஒரு போராட் ட முமின்றி, தாய் மொழி விசுவாசமு மின்றி  ஆங்கில நாடாக விரைவாக மாறிக்கொண்டு வருவது வருந்தத் தக்கதே!
:தொகுப்பு-கயல்விழி,பரந்தாமன்.


0 comments:

Post a Comment