"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 25


பூப்புனித நீராட்டு விழா

மண்ணின் பூப்பை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைப் போல் பெண்ணின் பூப்பையும், அதாவது பெண்ணின் உடல் தாய்மைக்கு உரிய கன்னித் தன்மையை அடையும் நிகழ்வையும் கொண்டாடும் மரபு, பிறப்பு சடங்குகளை அடுத்து வருகிறது. கிராமப் புறங்களில் சடங்கு என்றாலே அது பூப்புச் சடங்கையே பொதுவாக குறிக்கும். 10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. எனவே பெரும்பாலும் மங்கை என்ற மகளிர் பருவத்தில் இந்த பருவ மாற்றம் நடை பெறுகிறது எனலாம், எனினும் சிலவேளை முன்பும்,அதாவது பெதும்பை பருவத்திலும் அல்லது பின்பும், அதாவது, மடந்தை பருவத்திலும் நடை பெறலாம். சுமங்கலிப் பெண்கள் கூடி மஞ்சள் கலந்த நீரால் பூப்படைந்த பெண்ணைக் குலவை இட்டுப் [வாயைத் திறந்து நாக்கை வாயின் பக்கவாட்டிலோ மேலும் கீழுமாகவோ அசைத்து மங்கள ஒளி எழுப்பி] புனித நீராட்டுவதும், எதிர்காலத்தில் அவள் குழந்தையைத் தாங்கும் வலிமையைப் பெறவேண்டும் என்பதற்காக ஊட்டச் சத்தான உணவு வகைகளை கொடுப்பதும், பெண் இல்வாழ்க்கைக்கு உரிய தகுதியைப் பெற்ற நிலையை உறவினர்களுக்கும் உலகத்தார்க்கும் தெரிவிப்பதும், பூப்புச் சடங்கில் தாய்மாமன் முதலிடம் அல்லது தலைமை வகிப்பதும் முக்கிய நிகழ்வாகும். பொதுவாக உளுந்தில் செய்த உணவுகளும், எள் கலந்த உணவுகளும் மற்றும் உணவில் அதிகம் நல்லெண்ணெயும் சேர்க்கப் படும்.

பெண்ணின் பூப்பெய்தல், அதை ஒட்டிய நிகழ்வுகளை மறைமுகமாக தெரிவிக்கும் ஒரே ஒரு பண்டைய பாடலாக, சங்கப்பாடல், புறநானுறு 337 இன்று எமக்கு கிடைத்துள்ளது.அதில் வரி: 

"காண்டற்கு அரியளாகி மாண்ட  
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய 
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல் இனியே
அற்றன்றாகலின் தெற்றெனப் போற்றிக்" [7 - 13]

முக்கியமானது. அவள் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிறைந்த [பூப்பு எய்திய] பொலிவோடு [அழகுடன்], மனைக்குள் திகழ்ந்தாள். நீரில் நனைத்துக் காயவிடப்பட்ட மெல்லிய துணி காற்றில் அசைவதுபோல் நடுங்கினாள் [அசைந்தாள்]. கூந்தலில் அவள் ஊட்டிய குளுமையான அகில் புகை தந்த நறும்புகை மெதுவாகச் சென்று படிந்த கபில நிறமுடைய பெரிய அரண்மனையில் மறைந்து இருந்தாள் என்கிறது.[She is hiding in her brown mansion filled with delicately moving fragrant smoke of akil wood. She trembles like a fine washed cloth hung to dry]. 

இப்படியான சடங்குகளை ஒருவர் அல்லது ஒரு குழு, ஒரு குடும்ப நிலையில் இருந்து இன்னொரு குடும்ப நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் [Rites of passage) என்றும் கூறலாம். உதாரணமாக பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் வழியாக பூப்பு, வதுவை [திருமணம்], மகப்பேறு, கைம்மை [widowhood] ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்பார். இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப / சமூக பாத்திரங்களை ஒரு பெண் ஏற்கிறாள் எனலாம் .

பூப்பு, யாழ்ப்பாணத் தமிழில்சாமத்தியச் சடங்குஎன்று பொதுவாக அழைக்கப்படும். தங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தையைக் கருத்தரிக்கக் கூடிய கர்ப்பப் பையைக் கொண்டவளாய் இருக்கிறாள் என்பதற்கான விளம்பரம் தான் சாமத்தியச் சடங்கு என்றும் கூறலாம். “பூப்பு" ஓர் உடல் இயலின் பதிவு, அவ்வளவு தான்! பூப்புனித நீராட்டு விழாக்களைப் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், அப்படியான ' வயதுக்கு வருதல்' [‘Coming of Age’] சடங்குகள் அநேகமான பூர்வீக குடிகளிடம் இன்னும் உண்டு. ஈழத்தில் பூப்புனித நீராட்டு விழா மதங்களுக்கு அப்பாற்பட்டது. இந்துக்கள் மட்டுமன்றி கிறித்தவ ஈழத் தமிழர்களும் தமது பெண் குழந்தைகளுக்கு சாமத்தியச் சடங்கை, இந்துக்கள் போலவே, ஆலாத்துதல் (ஆரத்தி) போன்ற சடங்குகளைச் செய்து கொண்டாடுவார்கள். அது மட்டும் அல்ல இங்கு பெண்கள் பொட்டு வைப்பது, தாலி அணிவது, இப்படியான சடங்குகள் செய்வது எல்லாம் தமிழ்ப் பாரம்பரியமாக மட்டுமே கருதப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் மத்தியிலும் திருமணம், பூப்புனித நீராட்டு போன்ற சடங்குகளில் தாய் மாமனுக்குத் தனி மரியாதை உண்டு. இலங்கையில் வேடர் சமுதாயம், பேய்கள், துர்தேவதைகள், இரத்த மற்றும் சதை போன்றவற்றில் மகிழ்வடைகின்றன என நம்புகிறார்கள் [The Veddas of Sri Lanka believe demons relish blood and flesh]. எனவே  பூப்படைத்தலில் இரத்தம் ஒரு முக்கிய இடத்தை பெறுவதால், பேய்களின் கோபத்தை தணிக்க அல்லது குறைக்க சில நடவடிக்கைகளை அவர்கள் கையாண்டார்கள். அதுவே இன்று சிங்கள சமூகத்தினரிடமும் ஒரு சடங்காக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. இது இலங்கை இந்தியா மக்களை தவிர, மேலும்  ஆப்கானிஸ்தான், ஜப்பான், பொலினேசியா, கொலம்பியா, அந்தமான் தீவுகள், நியூ கினி மற்றும் மத்திய ஆபிரிக்கா [Afghanistan, Japan, Polynesia, Colombia, the Andaman Islands, New Guinea and Central Africa] போன்ற நாடுகளிலும் காணப் படுகின்றன. இலங்கையின் ஒரு புத்த புராண கதை, மகா சம்மதவின் மகள், ஒரு வளர்நிலைச் சடங்கில் [Rites of passage] ஈடு படத்தை குறிக்கிறது [Maha Sammata was the first monarch of the world according to Buddhist tradition.].



தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும். இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "பழையோள்" என்றும் மணிமேகலையில் "முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

எனினும் பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு பொறாமை கொண்ட ஆண் சமுதாயமும், ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும், இன்றைய மத நம்பிக்கையும், முதலாளித்துவம் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான், பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப்பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில் ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சடங்காகி விட்டது என்பது தான் உண்மை. அதனால் தான் பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது எனலாம். எனவே தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும் என நம்புகிறேன் .

வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இனி வருபவை திருமணச் சடங்கும், இறுதியாக மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கிய சடங்குகளின் முடிவாக, அவன் இறந்த பின்பும் தொடரும் இறப்புச் சடங்கும் ஆகும், அவை அடுத்த அடுத்த பகுதிகளில் ஓரளவு விரிவாக தரப் பட உள்ளது

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]
பகுதி: 26 தொடரும்
ஆரம்பத்திலிருந்து அல்லது அடுத்த பகுதி  வாசிக்க கீழே அழுத்துக..
Theebam.com: "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 26
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" [ஒரு ஆரம்பம்.......]



0 comments:

Post a Comment