சிவன் உறையும் கைலாய மலை!



சைவ சமய நூல்களில், சைவ சமயத்தினரின் முழு முதற் கடவுளாகிய பரமாத்மா ஆகிய சிவபெருமான், தன் தேவி பராசக்தியுடனும், புத்திரர்கள் விநாயகப் பெருமான், முருகப்பெருமான் ஆகியோருடனும் திருக்கைலாய மலைதனிலே வீற்றிருந்து, அண்டம் வாழ் உயிர்கள் எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து  அருளுகின்றார் என்று கூறப்பட்டிருக்கின்றது.

இந்தக் கைலாய மலையானது, நம் புலனுக்கே எட்டிடாத, எங்கோ ஒரு பல கோடி ஒளி வருட தூரத்தில் உள்ள ஒரு தேவ லோகத்தில்தான் இருக்கும் என்றும், சுவர்க்க உலகமும் அங்குதான் உள்ளது என்றும் நம் இள வயதிலே ஆசான்களினால் உணர்த்தப் பட்டோம்.

ஆனால், வெகு சமீபத்தில்தான் அறிய முடிந்தது, இவர்களின் உறைவிடம் அவ்வளவு தூரத்தில் இல்லை என்று. அவ்விடம், மிக மிக சமீபத்தில், எல்லோருமே போகக் கூடிய ஓர் இடத்தில், இங்கேயே, இப்பூவுலகிலேயே நமக்கு பக்கத்திலேயே இருக்கின்றது, அது வேறு எங்கும் இல்லை; அவர் தன் குடும்பத்துடன் வாழும் இடம் நமக்கு அண்டை நாடான சீன தேசம்தான்!

கைலை மலை என்றும், திருக்கயிலாய மலை என்றும், கைலாசம் என்று சைவ சமயத்தினரால் போற்றப்படும் சிவனின் இந்த உறைவிடம்  இமய மலைத் தொடரின் ஒரு மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இது சீனாவின் திபெத் மாகாணத்தில் உள்ளதுஇம்மலையில் இருந்து சிந்து நதி, பிரம்மபுத்திரா நதி என்பன  உற்பத்தி ஆகின்றன.

கைலை மலை சிவனை வணங்கும் இந்துக்கள் மட்டும் அல்ல போன்கள், திபெத்தியர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.கைலாயம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் இது குறித்துப் பாடியும்  இருக்கின்றார்கள்.

பல இந்து சமயப் பிரிவுகள் இம் மலையயைத்தான் ஆன்மாக்கள் இறுதியில் சென்றடையும் சுவர்க்கம் என்று கருதுகிறார்கள். கைலாய மலையை ஒரு மிகப்பெரிய சிவலிங்கமாக காட்சியினைக்   கண்ட பக்தர்கள் அநேகர்.

இம்மலையைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ளுவார்கள். நேபாளம், கத்மண்டுவில் இருந்து  விமானம் மூலம் சென்று, மோட்டார் வண்டியில் மலை அடிவாரத்தை அடைவார்கள். அங்கிருந்தவாறு மலையைத் தரிசிப்போன்றோர் சிலர், மலையைச் சுற்றிய 52 கி. மீ. தூரத்தை நடந்தே முடித்துப் [நடந்ததன்]பயன் பெறுவோர் சிலர். நடக்க முடியாதோர் குதிரைகள், எருமைகளிலும் சென்று பிறவிப் பலனை அடைந்து கொள்ளுவார்கள்.

முழுமுதற் கடவுள் சிவ பெருமானின் வாசஸ்தலத்தை இவ்வளவு இலகுவாகவே பக்தர்கள் தரிசிக்கும் வசதி கிடைக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. பக்தர்களை எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இங்கு சென்று முத்தியடைய எவ்வளவு வசதியாகப் போய்விட்ட்து. ஆனால், இதுவரை ஒருவராவது நேராக கைலாய வீட்டுக்கு உள்ளே சென்று இறைவன் குடும்பத்தை நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை!

என்றாலும், என் சிற்றறிவிக்குப் புரியாத சில சூனியக் கேள்விகள் என் மனத்தினுள் எழுந்த வண்ணமே இருக்கின்றன.

ஒன்று இந்தியா ஒரு புண்ணிய பூமி(யாம்). இங்கு பிறப்பதற்கு ஆன்மா முந்திய பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம்.(?). ஏன்,இந்தப் புண்ணிய பூமியில் சிவன் வாழ் விரும்பவில்லை?
அவர் உருவாக்கிய புண்ணிய பூமியில் வசதிகள் குறைவோ?

இரண்டு: சம்ஸ்கிருத மொழி (மட்டும்) தெரிந்த இறைவன் (அந்த மொழியில் தானே பூசை செய்கிறார்கள்), ஏன் அம்மொழியோடு ஒத்துப் போகும் இந்தி பேசுவோர் மத்தியில் வாழ விரும்பவில்லை? இந்தி உச்சரிப்பு விளங்காதோ?

மூன்று: சிவனை மட்டும் வழிபடும் சைவர்கள் வாழும் தமிழ் நாட்டில் அல்லது ஈழத்தில் ஒரு மலையில் அல்லது ஒரு குன்றில் என்றாலும் ஏன்தான் தன் குடும்பத்தினருடன் வாழவில்லை?

எல்லா நாட்டு அரசுகள் நடத்துவது போல தமிழர்கள் அங்கீகரிக்கப் படாத ஓர் இனமாய் இருக்குமோ?

நான்கு: எந்த விதமான இறை வழிபாட்டினையே  விலத்தி வைத்திருக்கும், சிவ வழிபாடே என்னவென்று தெரியாத ஒரு கொம்யூனிச நாடான சீனாவில், ஆளே இல்லாத ஒரு ஒதுக்கப்புற உச்சி மலையில், கடும் குளிரில், வெறும் மேலுடன், நல்ல குளிர் உடுப்பும் இல்லாமல் ஏன்தான் ஒழிந்து ஒரு வாழ்க்கை வாழ்கிறார்

நேசிக்கும் மக்கள் மத்தியில் வசிக்க அவ்வளவுக்கு வெறுப்போ?

ஐந்து: எதற்காக பக்தர்களுக்கு எதிரி நாடொன்றுக்கு விசா, கடுமையான பயணம், தாங்க இயலாத குளிர் என்று கஷ்டமான ஒரு யாத்திரைதனை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றார்?  சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தவர்களை எப்போதாவது தன் வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளாரா?

ஏன் மூடு பனியில் ஒருவரையும் தெரியவில்லையோ?

என்னவோ, வருடாந்தம் ஏராளமான வெவ்வேறு சமய கடவுள் பக்தர்கள் யாத்திரை சென்று, தம், தம் கடவுள்மாரை வணங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எனக்கு ஒரு சிறிய சந்தேகம்; எல்லாக் கடவுள்மாரும் ஒரே வீட்டில் இருக்கின்றார்களா அல்லது விரோதம் காரணமாக வேறு, வேறு  விதமாக வடிவமைப்புச் செய்யப்பட்ட இல்லங்களில் வசிக்கின்றார்களா?


ஒன்றும் புரியவில்லை; இதெல்லாம் புரிந்து கொள்ளும் அந்த ஞானம் எனக்கு கிடைக்க கைலை நாதன்தான் நேரில் வந்து ஒளி தந்திட வேண்டும் போலும்!
செல்வத்துரை , சந்திரகாசன்....🖋



0 comments:

Post a Comment