ஆன்மீகம்-அன்பு

புத்தரின் அன்பு


பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது.
இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது.
உடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழிவாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள்.
இன்று மாலை இதே வழியில்தான் சொற்பொழிவு முடிந்து திரும்பி வருவேன். திட்டுவதற்கு இன்னமும் இருந்தால் அப்போது திட்டுங்கள்,” என்றார்.
இந்த வார்த்தைகள் பெரியவரின் கோபத்தை தணித்தது. ஆனால் அன்று மாலையும் அந்த வழியில் புத்தரின் வரவுக்காக அந்த பெரியவர் காத்திருந்தார். அப்படி வந்ததும் புத்தரிடம் பணிவுடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.


அனுப்பியவர்:ஜெயகாந்த்

2 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, November 18, 2012

    உண்மையான புத்த போதனையை பின்பற்றுபவனுக்கு [ பவுத்தனுக்கு] சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு(புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு எதிரானவர்.

    ஒரு புத்த பிக்குவின் போதனையால் போர்களே வாழ்க்கையாய் இருந்த அசோகன் இனி போர் புரியமாட்டேன் எனச் சபதம் ஏற்று புத்த சமயம் [பவுத்தம்] தழுவினான். இதனால் புத்தரின் கொள்கையை உலகம் வியந்து வரவேற்றது புத்தருக்குப் பெருமை சேர்த்தது.

    அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட புத்த பெருமான்.

    ஒரு சமயம் புத்தரும், அவருடைய சீடர்களும் காட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் அங்கு வந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடினான். அப்போது அவனது கால், புத்தரின் காலில் பட்டு விட்டது . புத்தர் விழித்துக் கொண்டார். தடக்கியதால் சற்று தடுமாறிய அந்தத் திருடன், சமாளித்து விட்டு வேகமாக ஓடினான்.உடனே தன் அருகில் படுத்திருந்த ஒரு சீடனைத் தட்டி எழுப்பினார். பிறகு துணி மூட்டையிலிருந்து ஓர் அழகிய கிண்ணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

    ''யாரோ ஒருவன் நம்மிடமிருந்த ஓட்டைக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். பாவம்... அந்தக் கிண்ணம் அவனுக்குப் பயன்படாது. நீ வேகமாக ஓடிச் சென்று இந்தப் புதிய கிண்ணத்தை அவனிடம் கொடுத்து விட்டு வா என்றார் புத்தர். நீண்ட நேரம் ஓடிய பின் திருடனைப் பிடித்தான்.

    ''அன்பனே! சற்று நில்! நீ தூக்கிக் கொண்டு ஓடி வந்தது ஓட்டைக் கிண்ணம். அது எதற்கும் பயன்படாது. அதற்குப் பதில் இந்தப் புதுக் கிண்ணத்தை வைத்துக் கொள். என் குருநாதர்தான் இந்தக் கிண்ணத்தை கொடுத்துவிட்டு வரச் சொன்னார்!'' என்று சொல்லி விட்டுக் கிண்ணத்தை கொடுத்தான் .திருடன் கண்களில் நீர் திரண்டது. அவன் சீடனுடன் நடந்து புத்தரை வந்தடைந்தான்.''என்னை மன்னித்து விடுங்கள்!'' என்று கூறி அப்படியே அவர் கால்களில் விழுந்தான்.

    இன்னும் ஒரு சமயம் புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர், "இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

    அதற்கு புத்தர்,"முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கட்டுமே! ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது! சிப்பியை நீயே எடுத்துச் செல்" என்று சொல்லிவிட்டார்.

    ஆனால், இப்ப புத்தத்தை பூசிக்கும் நாடுகள் புத்தனின் கொள்கைகளிலிருந்து மிகவும் மாறுபட்டு விட்டது .மனிதத்தை புதைத்து விட்டன . சர்வதேச அளவில் மனித உரிமையை பேணுவதில் பின்னோக்கியுள்ள நாடுகளாக மாறி உள்ளன.

    இப்ப இதே வழியில் புத்தர் சொற்பொழிவு முடிந்து, மாலை திரும்பி வந்தால் திட்டுவதற்கு அவர் இருப்பாரோ...?

    ReplyDelete
    Replies
    1. சுவாமி விவேகானந்தர் இலங்கை வந்தபோது கொழும்பில் தனது ஆன்மீக உரையினை முடித்தபின் யாழ்ப்பாணம் செல்லும் வழியில் அனுராதபுரத்தில் தங்கி உரையாற்றினார்.அப்பொழுது பிக்குகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.தொடர்ந்து அவர் புத்தரின் கருத்துக்களை அழகாகக் இணைத்து உரையாற்றியதும் அவர்கள் அடக்கத்துடன் அமர்ந்து அவர் உரையினை செவிமடுத்தார்களாம்

      Delete