ஐம்பெரும் காப்பியமா!! அவை எவை?


பொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்லா ஐம்பெரும் காப்பியங்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளதாகக் கூறிப் பெருமை அடைந்துகொள்வது அன்றாடம் காணும் காட்சியாகும்.

 தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு இந்த ஐந்து காப்பியங்களைப் பற்றிய பூரண அறிவு உள்ளது என்று நினைக்கின்றீர்கள்? நான் நினைக்கிறேன், ஒரு 50 வீதமானவர்கள் இந்த ஐந்தின் பெயர்களையே கூற முடியாதவர்களாய் இருப்பார்கள்; 98 வீதமானவர்கள் இவற்றின் கதைகளையே அறியாதவராக இருபபார்கள். ஆதலால், இவை என்னதான் சொல்கின்றன என்று ஒருமுறை பார்ப்போமா?

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்பன ஐம்பெருங் காப்பியங்கள் எனப்படும். இவற்றில் முதலாவது எல்லோருக்கும் தெரிந்த கதை. இரண்டாவது பலருக்கும், மிஞ்சியவை ஒரு சிலருக்கும் மட்டுமே தெரிந்திருக்கும்.

⇛⇛⇛⇛⇛⇛⇛⇛கதைச் சுருக்கம்
சிலப்பதிகாரம்

சோழ நாட்டிலே, புகார் என்ற ஊரிலே, கோவலன் என்னும் வணிகன், கண்ணகியை மணந்து இன்புற்று வாழ்ந்தான். பின்னர், கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். அதன்பின் மாதவியோடு கருத்து வேறுபாடு கொண்டு கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணி வணிகம் செய்ய இருவரும் மதுரை சென்று, கண்ணகியின் ஒற்றைச் சிலம்பைக் விற்க கடை வீதிக்க்குச் சென்றான். இத்தருணம், பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், தான் தப்புவற்காக பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை ஆராய்ந்து  பாராத மன்னன் அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செயப்பட்ட செய்தியை அறிந்த கண்ணகி, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை, அந்த சிலம்பை உடைத்துக் காட்டி, உள்ளே மாணிக்கம்தான் உள்ளது, அரச சிலம்பின் முத்து அல்ல என்று நிரூபித்தாள். செயலிழந்த இழந்த அரசன், 'நானோ அரசன்; நானே கள்வன்' என்று அலறி, மயங்கி விழுந்து இறந்தான். உடனே தேவியும் நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். அதன் பின்னர், கோபம் கொண்ட கண்ணகி மதுரையை எரித்தது யாவரும் அறிந்ததே!
மணிமேகலை
கோவலன் + கண்ணகியின் மறைவிற்குப் பின் மனம் வருந்திய மாதவி, பழைய வாழ்க்கையை வெறுத்து, தன மகள் மணிமேகலை ஆசையைத் துறந்து வாழவேண்டும் என்று புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

அந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, முற்பிறப்பு பந்தத்தினால் அவளுக்கும் அவன்பால் காதல் உணர்வு வருவதை எண்ணிக் கவலைப்படுவதைக் கண்ட மணிமேகலா தெய்வம், அவளை எடுத்து தீவு ஒன்றில் விட்டுச் செல்ல, அங்கு அவள் ஒரு புத்த துறவியானாள். அத்தெய்வம் அவளுக்கு வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்வான்வழி பறக்கும் சக்தியையும், பசிப்பிணி போக்கும் அட்சய பாத்திரத்தையும் கொடுத்தது. அவள் ஒரு கற்புடைய மங்கை ஒருவரைத் தேடிப் பிடித்து, இந்த அட்சயபாத்திரத்தினூடாக முதலன்னம் அவளுக்கு அளித்தாள். பின்னர், அவள் தன்னூர் வந்து, இளவரசன் தன்னை அடையாளம் காணாதபடி காயசண்டிகை என்பவளின் உருவம் எடுத்து, யாவருக்கும் அன்னதானமும், நல்லறமும் புரிந்தாள். என்றாலும், அவன் அவளை அடையாளம் கண்டு மீண்டும் காதலுடன் அணுகும்போது, உண்மையான காயசண்டிகையின் கணவன் அவ்விடம் வந்தான். தன் மனைவியைத்தான் இளவரன் தீண்ட முனைகிறான் என்று எண்ணி அவனை அங்கேயே வெட்டிக் கொண்டான். இதனால் வெகுண்டெழுந்த மன்னன், தன மகனின் சாவுக்கு மணிமேகலைதான் காரணமென்று அவளைச் சிறைவைத்து, சொல்லொணாச் சித்திரவதைகள் செய்தும், அவள் எந்த ஒரு பாதிப்பும் அடையாமல் இருப்பதைக் கண்டு, அஞ்சித் தன பிழையை உணர்ந்து அவளை விட்டு விடுகிறான்.

அன்று முதல், ஊரூராய்ச் வெவ்வேறு சமய வாதிகளிடமும் சென்று நுண் பொருள் நுணுக்கங்கள் பற்றிய விளக்கங்கள் பெற்றும் நிறைவு கொள்ளாமல், கடைசில், பௌத்த அறவண அடிகளிடம் தரும நெறியின் நுண்மையான மெய்ப்பொருள் விளக்கத்தினால் தெளிவு பெறுகிறாள்.

முடிவில், தர்மம் போதித்து, மக்களின் பசியைப் போக்கி வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
குண்டலகேசி

காவிரிபூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கரிகாற்சோழன் ஆண்டு வந்தான். வணிகமணி என்பவர் அவ்வூரில் இருந்தார். அவரது மகள் குண்டலகேசி ஓர் அழகுப்பதுமை. அரண்மனை அருகில் இருந்த பெரிய வீட்டில் குடியிருந்தாள். அப்பகுதியில் வணிகம் செய்து வந்த காளன் என்னும் இளைஞன், தொழிலில் நஷ்டப்பட்டதால் திருடித் திரிந்தான். கையும், களவுமாக பிடிபட்ட  அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்து வந்த போது, தனது மாளிகையின் உச்சியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி வேடிக்கை பார்க்க வந்தாள். அவன் ஒரு குற்றவாளியாக இருக்கிறானே என்பது பற்றி கவலைப்படாமல், விதிவசத்தால் காளனிடம் காதல் வசப்பட்டாள். அந்தளவுக்கு அவன் அழகாக இருந்தான். கரிகாற்சோழன் முன் கொண்டு செல்லப்பட்ட காளனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு, மறுநாளே தூக்கில் போட உத்தர விடப்பட்டது.

 இதற்குள் தன் தந்தை, வணிகமணியிடம் தனது காதலை விவரித் தாள் குண்டலகேசி.  ஒரு குற்றவாளியைப் போயா காதலிக்கிறாய் என தந்தை கடிந்து கொண்டும், காதல் கண்ணை மறைக்க அவள் பிடிவாதம் செய்தாள்.

வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்றார் வணிகமணி.  அவருக்கும் சோழனுக்கும் நல்ல பழக்கமுண்டு. அவரை வரவேற்ற மன்னன், இரவோடு இரவாக வந்துள்ளீர்களே! ஏதேனும் உதவி வேண்டுமா? என்றான். தாங்கள் நான் கேட்பதைத் தருவீர்களா? என்றதும், என்ன கேட்டாலும் தருகிறேன் என வாக்களித்து விட்டான். தன் நிலையை எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார்.  மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்து விட்டான். ஒரு நல்லநாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது.

ஆனாலும், ஆசை விடவில்லை. மேலும் சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் அவன் திருட்டில் இறங்கினான். இதை குண்டலகேசி கண்டித்தாள். மனைவி தன்னைக் கண்டிப்பது காளனுக்கு பிடிக்கவில்லை.  ஒருநாள் மலை உச்சியில் சந்தோஷமாக இருந்து வரலாம் எனக் கூறி, அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான். அவள் சுதாரித்துக் கொண்டு, இனியவரே! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், சாகும் முன் கணவனை வலம் வந்து வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகள். அதற்கு அனுமதியுங்கள், என்றாள். காளனும் வேண்டாவெறுப்பாய் சம்மதித்தான். இரண்டுமுறை வலம் வந்த குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன் கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிர் இழந்தான். பின்னர் அவள், பௌத்த துறவியாகி ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பி, அவரது திருவடியை எய்தினாள்.

வளையாபதி

 இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. ஆனால், ஒரு குத்துமதிப்பாக, இதுதான் அந்தக் கதையாய் இருக்கலாம் என்று சொல்லலாம். இல்லவே இல்லை, அது வெறும் பிழை என்று கூறுபவர்களும் உளர்.

நவகோடி நாராயணன் என்பவன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும் வேறு குலத்தில் ஒரு பெண்ணையும் மணந்து வாழ்கிறான். வணிகர்கள் இவன் வேறு குலத்துப் பெண்ணை மணந்ததற்காக இவனைத் தங்கள் குலத்தை விட்டு ஒதுக்குகின்றனர். இதனால் நாராயணன் தன் வேறு குல மனைவியைத் தள்ளி வைத்து விடுகிறான். அவள் காளியை வேண்டித் தனக்கு வாழ்வு தருமாறு கேட்டுக் கொள்கிறாள். அப்பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து இளைஞன் ஆகிறான். இவன் தன் தந்தையைப் பற்றி அறிந்து புகார் நகரம் சென்று வணிகர்கள் கூடிய அவையில் தன் தந்தை நாராயணனே என்று கூறுகிறான். காளிதேவியும் சாட்சி கூறுகிறாள். குடும்பம் ஒன்றுபடுகிறது.
சீவக சிந்தாமணி
இதுவும் ஒரு சமண நூல்.
மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். நல்லாசனிடம்  கல்வி பயின்றான். இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன். மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன்.

இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

இக்கதைகளை வாசித்தவர்களில் பலர் உண்மையில் முதல் தரமாகவே இவை என்ன கதைகள் என்று அறிந்திருப்பார்கள். திருக்குறளில், நாம் செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை என்று தெளிவான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், இக்கதைகளில் வரும் பலதார மணங்கள், ஓரிருவரைத் தவிர மீதிப் பெண்கள் எல்லாம் கற்பில்லாதவர்கள் என்ற ஒரு நிலைப்பாடு போன்றன, தற்கால சிந்தனையாளர்களுக்கு ஒரு கேள்விக் குறியைத்தான் ஏற்படுத்தும்.

எனினும், ஐந்து அணிகலன்களின் பெயர்களைக் கொண்ட இவற்றின் சுவைசொட்டும் வரிகளினால், அகம், புறம், பக்தி, அறிவுரை ஆகியவைகள் பற்றி ஞயம்படக் கூறியுள்ளமை, தமிழ் மொழியின் வளத்திற்கு பெருமை தரும் ஒரு விடயம் ஆகும்.

✍செல்வத்துரை,சந்திரகாசன்.


1 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, October 18, 2013

  இந்த ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகளை கிழே தருகிறேன். தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிருபித்த கண்ணகியின் சுவைசொட்டும் வரிகளை பாருங்கள்.அதே நேரம் இப்ப இப்படி ஒரு கண்ணகி, கண்ணகியை பத்தினி தெய்வமாக போற்றும் நாடுகளிலாவது வாதிட முடியுமா? எனவும் சிந்தியுங்கள்!

  "தேரா மன்னா செப்புவது உடையேன்
  எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
  புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
  வாயிற் கடைமணி நடுநா நடுங்க
  ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
  அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
  பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
  ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
  மாசாத்து வாணிகன் மகனை ஆகி
  வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
  சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
  என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
  கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி"
  (வழக்குரை காதை : 50-63)

  “உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.

  புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடையகாற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள்.

  "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பார்கள் அப்படிப்பட்ட பணம் பத்தும் செய்யும்.இதை நாம் இப்ப பல இடங்களில் பல தடவை கண்டுள்ளோம்.அதை எப்படி வளையாபதி கூறுது என்று பாருங்கள்.

  "குலம் தரும், கல்வி கொணர்ந்து முடிக்கும்,

  அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும்,

  நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகிப்

  புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ?"

  நம் கையில்மட்டும் காசு இருந்துவிட்டால், அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

  மாந்தர்க்கு உயர்குடிப் பெருமையைத் தரும்; அறிவுச் செல்வத்தையும் வரவழைத்துக் கொடுக்கும்; உற்றார் உறவினர் பசிப்பிணியைப் போக்கி அவரை யுய்விக்கும், ஆதலால் மாந்தர் பாலை நிலங்கடந்தும் திரைகடலோடியும் அப்பொருளை நிரம்ப ஈட்டுதல் வேண்டும் என்கிறது

  ReplyDelete