நடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்

நடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் நடிகர் சூர்யா இந்தப் பிரச்சனை குறித்து 'அன்பை விதைப்போம்' என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

என்ன பேசினார் ஜோதிகா?
தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்வில் விருது பெற்ற நடிகை ஜோதிகா, "பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. கண்டிப்பாக அதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் போன்று ஆலயத்தை நன்கு பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனை ஒன்றில் நடந்தது. அந்த மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் அங்கே பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. 'ராட்சசி' படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார். கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோவிலுக்குப் போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் மிகவும் முக்கியம். அவற்றிற்கு நிதியுதவி அளிப்போம்." என்று கூறியிருந்தார்.

சூர்யாவின் அறிக்கை
ஜோதிகாவின் இந்த பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில்,
அது தொடர்பாக அவரின் கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,"
"கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை 'சிலர்' குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை' என்பது 'திருமூலர்' காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை,"
"பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனாதொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். 'மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்' என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்." என்று நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நன்றி : பிபிசி  தமிழ்.

பிற்சேர்க்கை:
1. ஜோதிகாவின் குடும்பம் , மற்றைய சில நடிகர்களை போல் இல்லாது 'அகரம்' என்ற அமைப்பின் மூலம் பல ஆயிரம் ஏழைப் பிள்ளைகளை டொக்டர், என்ஜினீயர், லோயர், அக்கௌன்டன்ட் என்று பல பட்டப்  படிப்புகள் படிக்க வைத்து, சமூகத்தில் உயர் நிலைக்கு ஏற்ற பண உதவி செய்கிறது.
2. ஜோதிகா நல்ல எண்ணத்தில் இதைச் சொன்னாலும்,  'அதே பணத்தை' என்ற பதம் 'அதற்குப் பதிலாக' என்றோ அல்லது 'அதே அளவு பணம்'  என்றோ அர்த்தம் எடுக்கக் கூடியதாக இருப்பது சர்ச்சை கிளப்புவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.
3. மேலும், 'கடவுள்'.  'சமயம்' என்று வரும்போது எவருக்கும், ஈ.வே.ரா. முதல் இன்றுவரை தாக்கிப் பேசப்படக்கூடிய ஒரே சமயம் இந்து சமயம்தான்.  கிறீஸ்தவ, இஸ்லாம் பற்றி ஒருவருமே தாக்கிப் பேச  மாட்டார்கள்..இதில் ஜோதிகாவும் அடக்கம்.
4. இந்துக்கோவில் வருமானம் செலவு  போக மிகுதி எல்லாம் அரசுக்குச் சென்றடையும். ஆனால், மற்றைய சமயங்கள் இந்தக் கட்டுப்பாட்டுகள் வரா.
5. பெரும்பாலும், இந்துக் கோவில்கள் புதிதாக கட்டுப்படுவது இல்லை.பழங்காலத்துக் கோவில்களைத்தான் பராமரிப்புச் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், உதவி என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணத்தினைக்கொண்டு புதிது, புதிதாக கிறீஸ்தவ ஆலயங்களும், மசூதிகளும் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
6. கோவிலுக்குப்பதிலாக பாடசாலைகளுக்கு கொடு என்று சொன்ன திருமூலர், விவேகானந்தர், பாரதியார், மோடி எல்லோரையும் போற்றிக்கொண்டு,  ஒரு நடிகை எப்போவோ, ஏதோ ஒரு சம்பவத்தில் சொன்னதை ஏன் இவ்வளவுக்குத் தூக்கிப் பிடித்து அலைகிறார்களோ  தெரியவில்லை.
7. ஏன் , இவ்வளவையும்? ஈழத்திலே, பல முறையும் குறிப்பாக  30  வருடங்களாக  நூற்றுக்கணக்கான இந்துக்  கோவில்கள் இடித்துத் தரைமட்டமாக்கியபோது, ஆயிக்கணக்கான இந்துக்கள் கொலை பண்ணப்பட்டபோது, இந்துப் பெண்கள், குழந்தைகள் சீரழிக்கப்பட்டபோது, இந்தக் கோஷம் போடும் 'இந்து விசுவாசிகள்'. ' இந்து சமய காப்பாளர்கள்'  எல்லாம் எங்கே மாங்காய் புடிங்கிக்கொண்டா  இருந்தார்கள்?

பிந்திய செய்தி: சமீபத்தில் நடந்த விழாவில் ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் 10 பாம்புகள் பிடிபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதன்பின்னரும் இந்த விடயத்தில் பேசவா போறீங்க!
உருப்படியாய் எதாவது இருந்தால் போய் செய்யுங்கள் அப்பா!

😼-செல்வதுரை சந்திரகாசன்10 comments:

 1. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிSunday, May 03, 2020


  நல்ல குடும்பத்திற்கு எடுத்துக் காட்டு. கருத்துக்கள் சொல்லவும், விவாதங்கள் செய்து வெற்றி பெறுவதும் தமிழர்களுக்கு கை வந்த கலை தானே.

  ReplyDelete

 2. அருமை அண்ணா மிகவும் அருமை ! அண்ணா 100 வீதம் வரவேற்கக் கூடிய ஆழமான கருத்து . ஒருபோதும் கடவுள் தனக்கு ஏதாவது தரும்படி கேட்பதில்லை . கடவுள் மனித ரூபத்தில் தான் வாழ்கிறார் . வறுமையில் வாடும் மக்களுக்குக் கொடுத்தாலே அது பெரும் புண்ணியமாகும் அதிலும் எங்கள் சொந்த உறவுகள் வறுமையில் வாடும் அதே சமயம் கோயில்களில் கட்டிடம் கட்டவும் , பெரும் பூஜைகள் செயயவும் பணத்ததை விரயம் செய்வதும் நன்மை பயக்காது என்று தான் நான் எண்ணுகிறேன் . பணம் இருந்தால் முதலில் பாடசாலை , மருத்துவமனை போன்றவற்றுக்குக் கொடுத்தால் பல மக்கள் பயன்பெறுவாரகள் , கொடுத்து உதவியவர்களும் நீடூழி காலம் நலமுடனும் ஆனந்தமாகவும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை . சிலபேர் கடவுளுக்குப் பயப்படுவதுண்டு . கடவுள் என்ன பொல்லாதவரா ? இல்லையே ! அது எங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி தான் . அடுத்தவருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீங்கு செய்யாமலிருந்தாலே போதும் என்பது தான் தாரக மந்திரம் . முடிந்தால் உதவுவோம் இல்லையேல் விலகுவோம் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை நினைவில் கொண்டு செயற்படுவோமாக ! இது யார் மனதையும் புணபடுத்துவதற்காக அல்ல , எனது கருத்து மட்டுமே ! நன்றி !

  ReplyDelete
 3. Atputhan SanthiyaSunday, May 03, 2020

  Atputhan Santhiya
  தெரியாமல் கேட்க்கிறேன். ஜோதிகா அவர்கள் கூறிய கருத்து என்ன.? கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் கல்வி மருத்துவமனைகளுக்கும் உதவி செய்யுங்கள் என்று தானே சென்றார் இதில் என்ன தவறு இருக்கிறது.
  இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை கூறினால் அதை உடனடியாக ஒரு கூட்டம் மதரீதியான விவாதத்தில் எடுத்துச்சென்று சேர்த்து விடுகின்றன..
  தஞ்சை பெரிய கோயில் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று இன்னொரு கும்பல் குமுறிக் கொண்டிருக்கின்றன..

  ReplyDelete
  Replies

  1. Atputhan Santhiya எல்லாம் படித்த முட்டாள்களின் புரியாத தன்மையும் , எதிர்த்து நின்றால் நாங்கள் தான் பெரியவர்கள் என்ற எண்ணமும் தான்

   Delete
 4. MANUVENTHAN SELLATHURAISunday, May 03, 2020

  எங்கள் சமுதாயத்தில் பேராசை அதிகம் உள்ள வசதி படைத்தவர்கள் தங்களுக்கும் சூர்யா குடும்பம் உதவி செய்யவேண்டும் என வேண்டும் என எதிபார்த்தது ஏமாறும் கூட்டம் ஒருவகையினர், எம்மை விட தாழ்ந்தவர்கள் ,எம்மைப்போல் கல்வி கற்று மேல் வருவதற்கு காரணமான சூர்யா குடும்பத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டோர் இன்னொருவகையினர் இவர்கள் தான் கத்துவதற்கு கருவி தேடித்திரிபவர்கள்.கத்துகிறார்கள்

  ReplyDelete
 5. Pathmanathan VinyMonday, May 04, 2020


  ஜோதிகா எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை. கோவிலுக்கு காசு கொடுப்பதுபோல்,
  பராமரிப்பது போல்
  மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகூடங்களுக்கும் நன்கொடை வழங்கும்படி
  தான் தன்னுடைய கருத்தை
  முன் வைத்தார்.
  இதை சிலர் புரிந்துகொள்ள தெரியாமல் சமயப்பிரச்சினையாக கொண்டுபோய் விட்டார்கள்
  கோயிலுக்கு பதிலாக பள்ளிகள் மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று ஜோதிகா சொல்லவே இல்லை.கோயில்கள் பராமரிக்க படுவது போல் பள்ளிகள் மருத்துவமனைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினார். கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழைகளின் வலி உணர்ந்து அவ்வாறு கூறியுள்ளார்.அதை புரிந்துகொள்ள முடியாத சிலர் எதற்கெடுத்தாலும்
  அவர் சொல்ல வந்த விஷயத்தை
  ஒழுங்காக காது கொடுத்து கேட்காமல் மதவெறி பிடித்து திரிவது வேதனைக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிMonday, May 04, 2020


   ஒருவர் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்றால், இப்படியும் சொல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. கவனம். அதிலும் பெண்கள். உலகம் அப்படி இருக்கிறது. இந்த உலகத்தில் தானே வாழ வேண்டும்.

   Delete
 6. கிரிஜாMonday, May 04, 2020

  ஜோதிகா குடும்பம் முழுவதுமே ஏழைகளுக்கு மனசார உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை. ஆனாலும், அவரை அறியாமலே அவர் வாயில் இருந்து சற்று பிழையான கருத்தை தரக்கூடியதாகவே சொல்லமைப்பு வந்துவிட்ட்து.

  "வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள்"

  'அதே பணம்' என்றால் 'அந்தப் பணத்தை' என்றுதான் விளங்குமே ஒழிய 'அதே அளவு பணம்' என்று ஒருபோதும் கருத்து எடுக்க முடியாது.

  பிழையான கருத்தோடு சொல்லும் நோக்கம் அவருக்கு மனசளவில் இருந்திருக்காது. அவர் எழுதிக் கொடுத்து வாசிக்கவில்லை; தன் மனக்கவலையை, மனதில் தோன்றியதை அள்ளிக் கொட்டியிருக்கிறார்.

  எத்தனையோ பெரிய நடிகர்கள், கோடிக்கணக்கான வருமானத்தை, வரியும் கட்டாது ஒழித்து வைத்துக்கொண்டு, ஏழைகளுக்கென்று ஒரு பைசா செலவு செய்யாது இருக்கிறார்களே, அவர்களுடன் போய் மல்லுக்கு கட்டுங்கள்; இந்த நல்ல ஆத்மாக்களை சும்மா விடுங்கள்!

  ReplyDelete
 7. திருமதி ஜோதிகா சூரியாவை ஒரு திரைப்பட நடிகையாகப் பார்க்காமல் தமிழரின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து கொண்ட ஒரு பெண்மணியாகத்தான் நான் பார்க்கிறேன். கலைஞ்சர்களும் நம்மைபோல் கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதர்கள்தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அன்னயாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். உழைத்து சேர்த்த பணத்தை அவர்கள் நாட்டிற்குச் செலவழிக்கிறார்கள். அவர்கள் சொன்ன கருத்தில் எந்தவிதமான தவறும் இல்லை. ஏனென்றால் பேச்சு சுதந்திரம் இங்கு எல்லோருக்கும் உண்டு.

  ReplyDelete