உடற்பயிற்சியும் உடல்நலமும்


                                                       
நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே முடியாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்கரை நோய் , உயர் கொழுப்பு , உயர் இரத்த அழுத்தம் , கான்சர், எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை வேரறுப்பதில் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் குறுக்கு வழியும் இல்லை. பல விதமான ஆராய்ச்சி முடிவுகளும் இதை தான் சொல்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி அவசியம்.

இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள். இத்தகைய நோய்கள் ஒருமுறை தாக்கினால் அதன் பாதிப்பு ஆயுள் வரை கூடவே இருக்கும். வருமுன்னே காவாதான் வாழ்க்கை நெருப்புக்கு முன் இடப்பட்ட துரும்பாய் பொசுங்கிப் போகும் என்பது பொய்யா மொழி. எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை என்பவர்கள் பின்னால் தங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவ மனைகளில் பழியாய் கிடந்து தீர்க்க நேரும். உடல் இயக்கக் குறைவால் வரும் இத்தகைய நோய்கள் தான் மிகவும் அதிக மருத்துவச் செலவு ஏற்படுத்தக்கூடியதும் கூட.

உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இலலை என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற் பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை.

என்ன பயிற்சி செய்யலாம்?
சுறுசுறுப்பாக நடத்தல். நீச்சல், சைக்கிளோட்டுதல், நடனப் பயிற்சிகள் நுரையீரல் மற்றும் இதயத்தசைகளை வலுவடையச் செய்கிறது. இதயத்துடிப்பை சிறிது நேரத்திற்கு அதிகரித்து அதிக பிராண வாயு இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
இதுவரை நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அதன்பிறகு நீங்களே வலிமையடைவீர்கள். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கவும் இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

எப்போது உடற்பயிற்சி செய்யலாம்?
அதிகாலையில், வெறும் வயிற்றில் இந்த எளிய பயிற்சிகளை செய்யலாம். ஏனெனில் காலையில் தான் அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்க முடியும். இதனால் கொழுப்பு விரைவில் கரையும்.

எவ்வளவு தீவிரப் பயிற்சிகள் செய்யலாம்?
நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் விளைவாக உங்கள் இதயத்துடிப்பானது உங்கள் அதிக பட்ச துடிப்பின் அளவில் 60 முதல் 80 சதவீதம் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் எட்டி இருக்க வேண்டும்.

அதிக பட்ச துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?
 இதை தெரிந்து கொள்ள 220 லிருந்து உங்கள் வயதை கழிக்க வேண்டும்.
உதாரணம்: உங்கள் வயது 40 என்றால், 220-40= 180 என்பது உங்கள் அதிக பட்ச இதயத்துடிப்பு.
இதன் 60 % முதல் 80% என்பது நிமிடத்திற்கு 108 முதல் 144 துடிப்புகள் வரை உடற்பயிற்சிக்கு பின் சுமார் 30 நிமிடங்களாவது எட்டியிருக்க வேண்டும். இன்னிலையில் உங்கள் சுவாசம் தெளிவாக கேட்கும்படி இருக்கும். பேசும் போது சிறிது மூச்சு வாங்கும்.
பயிற்சியை சற்று தீவிரப்படுத்த நடப்பதற்கு மலைப் பாதையை தேர்வு செய்யலாம். பழு தூக்கலாம். கைகளை இதயத்துக்கு மேல் தூக்கி பயிற்சி செய்வதும் இதயத்துடிப்பை அதிகரிக்கும்.

தசைகளுக்குப் பயிற்சி
வயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலும்புகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பழு தூக்குதல், பயிற்சி கருவிகள் பயன் படுத்துதல் இதற்கு உதவும். வாரம் 3 முதல் 4 முறை அரை மணி நேரம் இத்தகைய பயிற்சிகளுக்கு ஒதுக்கலாம். இத்தகைய தசைப்பயிற்சிகளுக்கு பின் தரமான புரத உணவு பானங்கள் அருந்துவது தசைகள் வலுவடைய சிறப்பாக உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. leucine என்ற புரத சத்து தசைகளை பழுது பார்த்து நல்ல நிலையில் வைக்க உதவுகிறது. பயிற்சியின் போதும் அதன் பின்னும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் கை, கால் தசைகளை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி செய்வது நல்லது . மூச்சை ஆழமாக இழுத்தும் மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து செகன்டுகள் அப்படியே வைத்திருக்கவும்.
உடலில் கொழுப்பு வடிவில் சேமித்து வைக்கப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.
உங்கள் சக்தியை மிஞ்சிய உடற்பயிற்சி தீமையையே விளைவிக்கும்.உதாரணமாக  உங்கள் கைகளினால்  பழு தூக்கும்போது ,இயன்ற பாரத்தையே தூக்க வேண்டும். நடப்பதனை சிறிது சிறிதாக அதிகரித்து அரை மணி நேரத்துக்கு மேலாக ஒரே தடவையில் நடவாதீர்கள்.
எப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தை தயாரித்துக்கொள்ளுங்கள்.  ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைபிடியுங்கள். மாற்றங்கள் காண்பீர்கள்.



0 comments:

Post a Comment