'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 05



வலிமையினால் தன் நாயகத் தன்மையை நிலை நிறுத்திக் கொண்ட, ஆண் தலைமைக் குழுக்களும் இதே போல் இதே காலத்தில் அல்லது கொஞ்சம் பிந்தி உருவாயின. காலம் செல்லச் செல்ல, தானியங்களை விளைத்துப் பயன் பெறலாம் என்று கண்டனர். குகைகளில் தங்கியவர்கள், நெருப்பை எப்போது வேண்டுமானாலும் பெற முடியும் என்ற வழி கண்டதும், பல்வேறு பகுதிகளில் நாடோடிகளாக குழுக்களாக உலகைக்காண திரிந்தார்கள்; பிறகு நீர்க்கரை ஓரங்களில், தங்கள் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டார்கள். உலகின் பல பகுதிகளிலும் ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் மக்கள் பல்கிப் பெருகினர். அவர்கள் வானிலை, மற்றும் மாறும் பருவங்கள் அறிந்தார்கள். தம் அறிவுக்கு எட்டாத இயற்கை நிகழ்வுகளை, தெய்வ ஆற்றல் என்று கருதி, இயற்கையை வழிபட்டார்கள். மனித உடலின் இன்றியமையாத ஆற்றல் குருதி என்று கருதி, அந்த இரத்தத்தை தெய்வம் என்று நம்பியவற்றுக்குப் பலியாக்கும் சடங்குகளைச் செய்தார்கள். மனித சமுதாயம் நிலைப்படுமுன், இத்தகைய பெண்தலைமை - ஆண்நாயகக் குழுக்கள், அந்தந்த இடத்துக்குரிய சூழலுக் கேற்ப, உருவாயின. இப்போதும் தாயை வைத்தே மக்கள் அறியப் பெற்றனர். காரணம் ஒருவளுக்கு ஒருவன் என்ற உறவு இன்னும் ஏற்படவில்லை. ஆகவே தந்தை யார் என்பது புரியாத புதிராகவே இருந்தது?

 

உதாரணமாக, திராவிட மக்களின் வெற்றித் தெய்வமாகக் ‘கொற்றவை’ என்னும் தாய்த் தெய்வம் கொண்டாடப் பெற்றிருக்கிறாள். இவளை, முருகனுடைய தாய் என்று திருமுருகாற்றுப் படையில் "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" - (வெற்றியையும் வெல்லும் போரையும் உடைய கொற்றவையின் திருமகனே!) என்று குறிக்கிறது. இந்தக் கொற்றவைத் தெய்வத்துக்கு நாயகன் குறிக்கப் பெற்றிருக்கவில்லை. எவ்வாறு, ருக்வேதம் கூறும் துவக்க கால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும்தேவர்களின் தாய் என போற்றப்படும் “அதிதி” தாய்க்கு [அதிதியை தேவமாதா என்று விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் கூறுகிறது] நாயகர் வரையறுக்கப் படவில்லையோ, அவ்வாறே, இங்கு கொற்றவை தனித் தெய்வமாகவே விளங்குகிறாள். தந்தை தலைமை அல்லது நாயக குழு, அதிதியைக் கச்யபரின் மனைவியாக்குகிறது. இங்கும் முருகனின் தாயாகிய கொற்றவையை , சிவனின் மனைவியாக, உமா, காளி, மாதங்கி என்றெல்லாம் அறிமுகப் படுத்துகிறது. அதிதி (aditi, சமக்கிருதம்: अदिति ) - வரையறுக்கப் படாதவள் என்று பொருள். ரிக் வேதத்தில் அதிதியின் பெயர் 80 முறை வருகிறது. இருக்கு வேதத்தில் இவர் 'மஹா' என்ற அடைமொழியுடனே அழைக்கப்படுகின்றார்.

 

வேட்டையாடும்  உணவு  சேகரிக்கும் சமூகத்தில் [hunting and gathering societies], மக்களுக் கிடையில்  ஏற்றத் தாழ்வுகள் தோன்றப் படவில்லை என்றாலும், 9,000–12,000 ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய கிழக்கில், விவசாய சமுதாயமாக அது மாற்றமடையும் பொழுது, விவசாயம் மற்றும் நில உரிமையை அடிப்படையாகக் கொண்ட  விவசாய பொருளாதாரங்கள் [agrarian economies based on farming and land ownership] தலை தூக்க, அங்கு ஏற்றத் தாழ்வுகளும் தலை தூக்க தொடங்கியது எனலாம். அவ்வாறான பொருளாதாரம் நாகரிகத்தின் வருகையை எடுத்து காட்டுவதுடன், அது ஒரு உறுதியான, நிலையான சிக்கலான மற்றும் மக்களிடையே படிநிலை உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகம் எனவும் ஊகிக்க முடிகிறது அல்லது வரையறுக்கவும் முடிகிறது. அத்துடன் இது தொழிலாளர் மற்றும் பிற இயற்கை வளங்கள் மீதான தனிப் பட்ட உரிமையை ஏற்படுத்தியதுடன், பரம்பரை உரிமைகள் மற்றும்  அடிமை அல்லது பண்ணையாள்அடிமை உழைப்பு போன்றவை தோன்றவும் அரசியல் மற்றும் பொருளாதார சட்டங்கள் உருவாகவும் துணை புரிந்தன [With such economies came the concept of personal ownership of labour and other natural resources, inheritance rights, the rise of serf and slave labour to plant and harvest crops, and the creation of political and economic laws to protect wealth]. இப்படி பல அம்சங்களை அடிப்படையாக கொண்ட  நிலையான பொருளாதாரம், மக்கள் தொகை வளர்ச்சி, உபரி உற்பத்தி வளர்ச்சி, சிறப்புத் தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி போன்றவற்றிற்கு வழிவகுத்தது [led to population growth, surplus production, and specialized occupations and institutions]. இவை அனைத்தும், செல்வம் மற்றும் தகுதி நிலைக்கு ஏற்ப ஒரு படிநிலைக்கான அடிப்படையை உருவாக்கியது [hierarchy among people based on wealth and status]. தொழில்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், உண்மையில் அங்கு இரண்டு முக்கிய வேறுபாடுகளே காணப்படுகின்றன. ஒன்று ஆளும் வர்க்கம், மற்றது தொழில் புரியும் விவசாய மக்கள். அது போல, நில உரிமையாளர்கள் மற்றும் நிலமற்றவர்கள், மேற்குடி ஆட்சிக்குரிய மற்றும் சாதாரண மக்கள் [aristocratic/royal elites and the masses] ஆகும்.

 

 இப்படியான விவசாய சமுதாயத்தில் தான் சமயங்களும் அதை ஒட்டிய நம்பிக்கைகளும் பிறந்தன. இந்த நாகரிக காலத்தில் தான்மனிதகுலம் என்றால் அது ஆணைச் சார்ந்ததாகவே கணிக்கப் பட்டிருக்கிறது. நீதி நூல்களும், வாழ்வியல் கோட்பாடுகளும் ஒரு பெண்ணை மனிதப் பிறவி என்று முன்னிறுத்தியே சொல்லப் பட்டிருக்க வில்லை. ஆணுக்கு மகிழ்ச்சியும் நலமும் தரவும், வாரிசைப் பெற்று வாழ வைக்கவுமே அவளை இறைவன் படைத் திருக்கிறான் என்ற கருத்தையே காலம் காலமாக எல்லாச் சமயங்களும் சொல்லி மக்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன. இந்நாள், இருபத்தொன்றாம் நூற்றாண்டை நாம் எட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், பெண் தன் இருப்புக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் கருப்பையிலேயே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள் என்பது தான் உண்மை.

 

இறைவன் முதலில் ஆணையே படைத்தான். பின்னர் அவனுக்கு அடங்கிய துணையாக, அவனிலிருந்து ஒரு பகுதியை வைத்தே பெண்ணைப் படைத்தான், என்ற வகையில், சமயங்கள் சார்ந்து பல கருத்துக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, திருமாலின் உந்திக்கமலத்திலிருந்து படைப்புக்கடவுள்-(ஆண்) பிறந்தார் என்றும் முக்கண்ணனின் நெற்றிக்கண்ணில் தெறிந்த பொறிகளில் இருந்து குமரக்கடவுள் தோன்றினார் என்றும் பெண்ணின் கருப்பைச் செயல் பாட்டையும் தாய்த் தன்மையையும் மறுக்கும் கற்பிதங்கள் இந்நாட்களில் தெய்வம் சார்ந்து நிலைப் படுத்தப் பட்டிருக்கின்றன. என்றாலும், ஆதிமனிதர் வரலாறு, பெண்ணை அப்படி ஒரு துணைப் பிறவியாக இனம் காட்ட வில்லை என்பதே உண்மையாகும்.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 06 தொடரும்... வாசிக்கத்  தொடுங்கள் - 

Theebam.com: 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பக...6

ஆரம்பத்திலிருந்து வாசிக்கத்  தொடுங்கள் -Theebam.com: 'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01

 

 

 

 


0 comments:

Post a Comment