'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 07

நாம் மீண்டும் மகாபாரதத்தை கவனத்தில் எடுத்தால், வேத கால ரிஷியும், உத்தாலக ஆருணியின் மகனும், சீடருமான சுவேதகேது பற்றிய ஒரு கதை அங்கு வருவதை காணலாம். ஒரு முறை சுவேதகேதுவின் அன்னையை வேறு ஒரு அந்தணர் உறவு கொள்ள விரும்பி கைபிடித்து, சுவேதகேதுவின் தந்தையின் முன்னிலையில் அழைத்துச் சென்றார். தந்தை அதை பெரிதாக பொருட் படுத்த வில்லை. அப்போது, சுவேதகேது, இத்தகைய நடைமுறைக்கு முடிவு கட்ட, அதை தடுத்து நிறுத்தி, இனி ஒரு பெண், ஒரு கணவருடன் மட்டுமே இறுதி வரை வாழ வேண்டும், ஒரு ஆடவனின் குழந்தைப் பேற்றிற்காக, வேறு ஆடவனின் மனைவியை கைப்பற்றக் கூடாது என விதி வகுத்தான் என்கிறது மகாபாரதம். 

 

மகாபாரதத்தின் முற்பட்ட பகுதிகள், வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 5ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில், இது முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. அதாவது கி மு  5ஆம் நூற்றாண்டில் தொடங்கி  கிபி 4ஆம் நூற்றாண்ண்டில் மகாபாரதம் முழுமையாக முழு வடிவத்தையும்  பெற்றது ஆகும். இந்த இதிகாசத்தில் கூறப்பட்ட மூல கதைகள் அல்லது சம்பவங்கள் அதிகமாக கி மு ஒன்பதாம் எட்டாம் நூறாண்டுகளுக்கு இடைப்பட்டவையாக இருக்கலாம் என கருதுகிறார்கள்.  

 

தந்தை சமுதாயம், பெண்ணைத் தாய் மக்களிடம் இருந்து பிரித்து, தங்களிடையே ஊன்றச் செய்வதையே திருமண சடங்காக உறுதிப்படுத்தியது. பலவந்தமாகப் பற்றிக் கொண்டு வராமல், அன்போடு அணி கலன்களும், பரிசில்களும் வழங்கி, மகளுக்குப் பிரியா விடை கொடுத்துத் தாய் வீட்டு மக்கள் அனுப்ப, மணமகன் தன் இல்லம் கூட்டி வந்தான்.

 

"தீய கண்கள் இல்லாதவளே, கணவரை விரும்புபவளே, கன்று காலிகளுக்கு நல்வாழ்வு தருபவளே, பிரகாசமானவளே, மென்மையான இதயம் கொண்டவளே, கடவுள்களை நேசிப்பவளே, மகிழ்ச்சி நிரம்பியவளே, வீரர்களை பெறுபவளே,  எங்கள் நான்கு கால் மற்றும் இரு கால் உயிர் இனங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வாருங்கள்"  [”Not evil-eyed, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentlehearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds” (Rig Veda 10.85.44)] என்று புதிய வீட்டுக்கு அவளை வர வேற்றார்கள். இதுவே சுருக்கமாக ரிக் வேதம் காட்டும் திருமணத்தின் சாரம் ஆகும்.

 

விவசாய கண்டு பிடிப்புடன், குடும்பங்களும் அதற்குத் தக்கதாக தனது அமைப்பையும் படிப் படியாக மாற்றத் தொடங்கியது. உதாரணமாக, சொந்த நிலம் வைத்திருக்கும் உரிமையும் அதை தனது வாரிசுக்களுக்கு கொடுக்கும் உரிமையும், பெண்களின் குழந்தை பிறக்கும் திறன் மற்றும் ஆண் ஆதிக்கம் போன்ற வற்றையும் மிகவும் முக்கியமாக்கியது [women’s childbearing abilities and male domination became more important]. இதனால், உறவை விட, திருமணம், குடும்ப வாழ்க்கையின் மையமாகியது. அது மட்டும் அல்ல,  ஆண், பெண் மற்றும் அவர்களின் உறவினர் குழுக்களுக்கிடையில் ஒரு  முறையான ஒப்பந்த உறவு [a formal contractual relationship] ஏற்பட்டது. அப்படி என்றால் தான் வாரிசு அல்லது சந்ததிகள் வெளிப் படையாக தெரிய வருவதுடன் இரத்த உறவுகளும் அடையாளம் காணப் படுகிறது. மேலும்  ஒவ்வொரு திருமண பங்குதாரரினது [marital partner] உரிமைகள் மற்றும் பொறுப்புகள், தமது தேவைக்கு ஏற்ப தெளிவாக வரையறுக்கப் பட்டன.

 

உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்வதற்கு முன்பு, திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. மேலும் சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக்  காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும் போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு  வெவ்வேறு  பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன.

 

விவசாய கண்டு பிடிப்புடனும், அதை தொடர்ந்த நாகரிக வளர்ச்சியுடனும் ஆண் ஆதிக்கம் மேம்பட,  ஒருவருக்கு ஒருவர் மேல் உள்ள அன்பை, கவர்ச்சியை விட,  பொருளாதார காரணிகள் திருமணத் தேர்வுகளில் முதன்மை வகுத்தன. அது மட்டும் அல்ல, செல்வம் மற்றும் அதிகார ஏற்றத் தாழ்வுகள் போன்றவை, உயரடுக்கினரிடையே அல்லது ஆளும் வர்க்கத்தினருக் கிடையிலே பெரும்பாலும் அரசியல் கூட்டணிகள் மற்றும் ஆண் குழந்தைகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்கள் ஏற்பட வழிவகுத்தது. காலப் போக்கில், எல்லா வர்க்கத்தினரிடமும் பெண்களின் உரிமை மற்றும் பாலியல் கட்டுப் படுத்தப் பட்டது. பொதுவாக மனைவி என்பவள்  முறையான குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட்டதுடன்,  பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் ஆண்களை சார்ந்தவர்கள் போல் நடத்தப் பட்டனர் [treated like dependents]. குழந்தைகளை கவனித்தல், சமையல், மற்றும் வீடை கவனித்தல் அல்லது பராமரித்தல்  போன்ற நடவடிக்கைகளுக்கு மட்டுப் படுத்தப் பட்டது. வரலாற்றின் இடைக் காலத்தில் [During the Middle Ages] அதிகமாக இவ்வாறே குடும்ப அமைப்பு இருந்தது எனலாம். என்றாலும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களில், குடும்ப வருமானத்துக்கு பெண்ணின் பங்கை பொறுத்து, ஆணாதிக்கம் மத்தியஸ்தம் [இடைப்பட்ட ஒரு நட்பு தீர்வு / விட்டுக்கொடுத்து இணக்குவி] செய்யப் பட்டது [patriarchy was mediated]. என்றாலும், திருமணத்தை சட்டப்பூர்வமாக்குதலும் மற்றும் ஆண் ஆதிக்கமும் ஓரளவாவது அங்கும் இருந்தது.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
பகுதி 08 தொடரும் ... வாசிக்கத்  தொடுங்கள் - Theebam.com: குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பகு...8: 

0 comments:

Post a Comment