சித்தர் சிந்திய முத்துகள் 3/65

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் - -531

மாந்தர் வாழ்வு மண்ணிலே மறைந்த போது விண்ணிலே

சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல்

வேந்தனாகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்

கூந்தலம்மை கோணலென்றுங் குறிக்கொனாதி துண்மையே.

மனிதர் வாழ்வு இப்பூமியில்தான், உயிர் மறைந்தபோது ஆவியாகச் சேர்வது ஆகாயத்தில்தான். ஆகையால் பஞ்ச பூதங்களையும் உணர்ந்து நம் உயிர் உள்ள இடத்தை உடம்பிலேயே அறிந்து கொண்டு அதை யோக ஞான சாதகங்களினால் சரியான பாதையில் நடத்தி ஞானத்தில் வல்லவராக மாறுங்கள். கோன் என்ற அரசனாக உங்கள் உடம்பில் மன்றுள் ஆடும் விமலன் ஆனா ஈசன் பாதம் கண்டு அதையே பற்றி நில்லுங்கள். கருங்கூந்தலை உடைய அம்மையும் கோனாகிய இடம் ஒன்றிலேயே இணைந்து இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அத்திருவடியையே குறித்து நோக்கி தியானித்திருங்கள். மரணத்தை வென்று ஈசன் திருவடியை சேர்ந்து இறவா நிலை பெறலாம் இது உண்மையே.      

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -532

சருகருந்தி நீர்குடித்துச் சாரல் வாழ் தவசிகள்

சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே

வருவிருந்தோடு உண்டுடுத்தி வளர் மனை சுகிப்பிரேல்

வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.

ஞானம் அடையவேண்டி வீட்டைத் துறந்து காட்டிற்கு சென்று தவம் செய்பவர்களுக்கும் பசி வருத்த வரும். அதனால் காட்டில் உள்ள இலைசருகுகளை அருந்தி அருவி நீரை அள்ளிக்குடித்து மலைசாரல்களில் வாழ்ந்து வரும் தவசிகளே! அந்த சருகுகளை மட்டுமே உண்டு வந்தால் தேகத்தில் உள்ள திசுக்களின் செயலிழந்து உடல் சுருங்கி மன சஞ்சலங்கள்தான் உண்டாகும். மனம் அடங்காது போனால் ஞானம் பெறுவது எவ்வாறு?  அவனை அடைவதே இலட்சியமாய் அனைத்தையும் துறந்து வரும் தவசிகள் பலரும் தவத்தை மறந்து பசியினால் பிச்சைக்கார சாமியார்களாக அலைவதைக் கண்டுணருங்கள். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்து உழைத்து உண்டு நல்ல உடைகள் உடுத்தி எல்லாம் சிவன் செயலே என எண்ணி உங்கள் வீட்டிலேயே இல்லறத்தோடிருந்து சகல செல்வ யோகம் ஞானம் மிக்க வாழ்வில் அன்பே சிவமாய் தியானித்து சுகமாய் இருந்து வாருங்கள். ஈசனே உங்களைத் தேடி விருந்தாக வருவான். உங்களுக்கு வேண்டியதை வழங்கி நல வாழ்வைத் தருவான். இது சிவாயம் ஆன உண்மையே.           

****************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -533

காடு மேடு குன்று பள்ளம் கானினாற சுற்றியும்

நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ

கூடுவிட்டகன்று உன் ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால்

வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பார் இல்லையே.                          

ஈசனைத் தேடி காடு மேடு குன்று பள்ளம் என்று பாத யாத்திரைகள் செய்து நாடு தேசம் விட்டு தேசம் சுற்றி அலைபவர்கள் நாதன் பாதம் காண்பாரோ!! உங்கள் உடம்பை விட்டு அகன்று உங்கள் உயிர் ஆவியாகி எமனூர்க்குத் தான் போகும். இருந்த இடத்திலிருந்தே உங்களுக்குள் உள்ள மெய்ப் பொருளையே நோக்கித் தவமிருந்து பிறவியின் வீடு பேற்றைப் பெற்று அரன் பாதத்தை பற்றி தியானித்திருப்பவர் இல்லையே.        

***************************************************

..அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment