சித்தர் சிந்திய முத்துக்கள் .....3/61

 

***************************************************

  சித்தர் சிவவாக்கியம் -501

என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே

ஏகனே இறைவனே இராச ராச ராசனே

உன்னை அற்பநேரமுமொழிந்திருக்க லாகுமோ

உனது நாமம் எனது நாவிலுதவி செய்த ஈசனே.               

இந்நாயேனை கண் இமைக்கும் நேரங்கூட மறக்காது என்னுள் இருக்கும் என் குருனாதனே! ஏகப் பொருளாகிய ஒருவனே! இறைவனே! யாவர்க்கும் மேலான இராச ராசனே! ஒரு நொடி நேரங்கூட நீ இல்லாது இவ்வுடம்பில் நான் இருக்க முடியுமோ? ஆகையால் உனது நாமமான நமசிவய என்ற அஞ்செழுத்தை எனது நாவில் மறக்காது ஓதவும் எனக்கு உபதேசித்து உதவி செய்த என் ஈசனே.

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 504

நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து

கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன்

எத்தனை பேர் எண்ணினாலும் எட்டிரண்டும் பத்தலோ

அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே

நித்தமும் மணி ஒலித்து வீட்டின் மூலையில் இருக்கும் பூசை அறைதனில் பூசைகள் செய்து உரக்கக் கத்தி ஒதுவதாலும் கதறுவதாலும் கண்கள் மூடியபடி அமர்ந்து இருப்பதாலும் என்ன பயன் கண்டீர்கள். எத்தனை பேர்கள் எந்தனை முறை எண்ணினாலும் எட்டும் இரண்டும் பத்துதானே. உண்மை அறியாது நீங்கள் இவ்வாறு செய்யும் பூசைகளை நமையீன்ற அத்தனாகிய ஈசன் ஏற்பானா? அறிவை அறியாத மனிதர்களே! எட்டும் இரண்டுமாகிய ஆகாரத்தையும், உகாரத்தையும் தம்மில் அறிந்து பத்தாம் வாசலில் இருக்கும் ஈசனையே பற்றியிருந்து வாசியினால் நாத ஒலியை மணி ஓசை போல ஒலிக்கச் செய்து ஒளியான சோதியில் சேர்த்து கண்களை மூடி தியானித்து இருந்திடுங்கள். இதுவே ஈசனுக்கு ஏற்ற உகந்த பூசை.           

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 505

எட்டிரண்டு கூடியே இலிங்கமான தேவனை

மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்

கட்டமான பிறவியென் கருங்கடல் கடக்கலாம்   

இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.            

எட்டாகிய அகாரமும் இரண்டாகிய உகாரமும் கூடியே இலிங்கமாக ஆகியுள்ளது. அதிலே இருந்து ஆளும் தேவனான ஈசனை, எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாக உனக்குள் உள்ள மெய்ப்பொருளை மதித்து அதையே நோக்கி தியானித்து இருந்திடுங்கள். மிகவும் கஷ்டமான பிறவி என்ற கருங்கடலை கடந்து சேரலாம். ஈசனுக்கு விருப்பமான ஆகாய வெளியில் ஈசனோடு இசைந்து இருந்து கண்டு கொள்ளுங்கள்.      

***************************************************

-அன்புடன் கே எம் தர்மா & கிருஷ்ணமூர்த்தி

0 comments:

Post a Comment