உணவு, நீரின்றி வாழும் அதிசய மீன்

 காற்றை மட்டுமே சுவாசித்து உயிர்வாழும் 'நுரையீரல் மீன்'! (LungFish)

உணவு, நீரின்றி வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து இந்த மீன்களால் உயிர்வாழ முடியும். எப்படித் தெரியுமா?

 

உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் உயிர்ப்புடன் இருக்க சில அடிப்படை விஷயங்கள் அவசியமாகத் தேவைப்படும். உணவு, நீர், காற்று இந்த மூன்றும் தொடர்ந்து சில காலம் கிடைக்கவில்லையென்றால் சிக்கல்தான். இந்தத் தேவை ஒவ்வொரு உயிரினத்துக்கும் தகுந்தவாறு மாறுபடும். நிலத்தில் வாழும் பெரும்பாலான உயிரினங்களால் காற்று இல்லாமல் சில நிமிடங்கள்தான் தாக்குப் பிடிக்க முடியும். நீர் இல்லாவிட்டாலும், உணவு கிடைக்கவில்லையென்றாலும் கூட சில நாள்களுக்கு உயிர் வாழ முடியும். ஆனால் நீர்வாழ் உயிரினங்களுக்கான தேவை கொஞ்சம் வித்தியாசமானது. அவற்றுக்குத் தண்ணீர்தான் முதல் தேவை. நீரில் இருந்து வெளியே வந்தால் அவற்றால் நீண்ட நேரம் உயிர் பிழைத்திருக்க முடியாது.

 

எடுத்துக்காட்டாக மீன்களை எடுத்துக்கொண்டால் அவை செவுள்களின் மூலமாகவே நீரில் இருக்கும் பிராணவாயுவை பிரித்தெடுக்கின்றன. அவற்றால் நேரடியாகக் காற்றை சுவாசிக்க முடியாது. அதன் காரணமாகவே நீரில் இருந்து வெளியே எடுத்த சில நிமிடங்களில் எல்லாம் மீன்கள் இறந்து விடுகின்றன. ஆனால் இன்றைக்கும் உலகின் சில பகுதிகளில் ஒரு வகை மீன் ஒன்று வசிக்கிறது. அது மற்ற மீன்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அதற்கு நீர், காற்று, மற்றும் உணவு என மூன்றுமே இல்லையென்றாலும் பிரச்னை இல்லை. காற்றை மட்டுமே சுவாசித்து பல ஆண்டுகள் உயிர்வாழும் தன்மை அதற்கு இருக்கிறது.

 

தண்ணீர் வேண்டாம்; நிலம் மட்டும் போதும்

'லங் ஃபிஷ்' (Lung Fish) எனப்படும் இந்த நுரையீரல் மீன் இனங்கள் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் வாழ்கின்றன. இவையும் நீரில் வாழ்பவைதாம், ஆனால் வறட்சிக் காலங்களில் இவற்றின் வாழ்க்கை வேறு விதமாக மாறுகிறது. பொதுவாகக் குளம் , குட்டை போன்ற நீர் நிலைகளில் வாழும் மீன்கள் தண்ணீர் வற்ற ஆரம்பித்ததுமே அதற்குக் கஷ்ட காலம்தான். ஒவ்வொரு நாளும் நீரின் பரப்பளவு குறைந்து கொண்டே வரும் என்பதால் மீன்களும் அதற்குள்ளேயே இருக்க விரும்பும். ஒரு கட்டத்தில் அதுவே மற்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் சாதகமாகி விடும். நீரில் தேடத் தேவையின்றி ஓரிடத்தில் மீன்கள் கிடைக்கும் என்பதால் மீன்களை உண்ணும் விலங்குகளுக்கு அது ஒரு விருந்தாகவே அமைந்து விடும். ஆனால் நுரையீரல் மீன்கள் இருக்கும் இடத்தில் நடக்கும் கதையே வேறு.

 

நீர் வற்ற ஆரம்பித்ததுமே நுரையீரல் மீன்கள் அதன் அடுத்த கட்ட நகர்விற்கான வேலையைத் தொடங்கி விடும். அதன் முதல் கட்டம் நேரடியாகக் காற்றில் இருந்தே ஆக்சிஜனை சுவாசிக்கத் தொடங்குவது. அதற்கேற்ற வகையில் அதன் உடலமைப்பு அமைந்திருக்கிறது. மற்ற மீன்களுக்கு இல்லாத வகையில் இதற்குச் சிறப்பான சுவாச அமைப்பும், நுரையீரலும் இருக்கின்றன. இவை நீரில் இருந்தால் செவுள் மூலமாகவும், வெளியில் இருந்தால் நுரையீரலும் மூலமாகவும் சுவாசிக்கும் திறன் கொண்டவை. மேலும் இந்த மீன்கள் நீர் இல்லாத நிலையில் வெளியே இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் மண்ணுக்குள் மறைந்திருக்க விரும்புகின்றன. முற்றிலும் மண் காய்ந்த பிறகு அது சாத்தியம் இல்லை என்பதால் சகதியாக இருக்கும் போதே தலையைப் பயன்படுத்தி மண்ணுக்குள் நுழைந்து கொள்கின்றன.

 

அதன் பின்னர் ஒரு திரவத்தை சுரக்கச் செய்வதன் மூலமாக உடலைச் சுற்றி பாதுகாப்பான அமைப்பை இவற்றால் உருவாக்க முடிகிறது. இந்த அமைப்பானது மீனைச் சுற்றி இருக்கும் ஈரப்பதத்தை ஓரளவுக்குத் தக்க வைக்க உதவுகிறது .அதன் பின்னர் உடலின் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி வைக்கிறது நுரையீரல் மீன். அதன் பின்னர் அதற்குக் காற்று மட்டுமே போதுமானது. வறட்சி காலங்களை இப்படியே கடத்தி விடும் இது. இப்படி இந்த மீன் அதிகபட்சம் நான்கு வருடங்கள் வரைக்கும் தாக்குப் பிடிக்கும். பின்னர் தண்ணீர் வருவதற்காகக் காத்திருக்கும். மழை பெய்தால் உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளும். மீண்டும் மண்ணை விட்டு வெளியே வந்து நீந்தத் தொடங்கி விடும்.

மு.ராஜேஷ்

0 comments:

Post a Comment