மாறிடும் உலகினில் மனிதர்கள் ....தெரியும்......ஆனால் தெரியாது!

அன்றாட வாழ்வினிலே,  சில கதா பாத்திரங்கள், பலவிதமான செயல்பாடுகளில் தாம் ஈடுபடுவதாகச் அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிவார்கள்; ஆனால், அப்படி ஒன்றும் செய்து முடித்ததாக ஒன்றுமே காணமுடியாது. ஆனாலும் தொடர்ந்து தமக்கு அது செய்ய விருப்பம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.

 

'அது வரும்......ஆனால் வராது!' என்பதுபோல,

செய்வார்கள்....ஆனால் செய்யமாட்டார்கள்.

தெரியும்......ஆனால் தெரியாது!

 

அவர்களில் சிலர்:

 

- எழுத்தாளர் என்பர்; ஆனால் வாழ்வில் ஒன்றையும் எழுதியதைக் காண முடியாது.

- படப் பிடிப்பாளர் என்பர்;  அப்படி ஒரு கமராவும் இருக்காது, இயற்கைக் காட்சிப் படம் ஒன்றும் வீட்டில் காணவும் கிடையாது.

- ஓவியர் என்பர்; வீட்டில் ஒரு பெயின்ரோ, பிரஷ்ஷோ இருக்காது. இரசனையும் இருக்காது. சுவரில் எந்த ஓர் ஓவியமும் தொங்காது.

- சுற்றுலா விரும்பி என்பர்; ஆனால் வீடடை மட்டுமே சுற்றி வருவர்.

- தான் அப்போ அப்படி என்பர்; இப்போது அப்படி ஒன்றும் இராது.

- பரோபகாரி என்பர்; எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டார்.

- பேராசை அற்றவர் என்பர்; லாபம் கிடைத்தால் எதிரிகளுக்கும் கும்புடு போடுவர்.

- புகழ் வாய்ந்தவர் என்பர்; செலவு செய்து ஆட்களைக் கொண்டு வந்து தன்னைப் புகழ்ந்து பேச வைப்பர்.

 

இப்படி, இப்படிப் பலர் நம்மிடையே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.(நானும் எந்த இரகமோ!)

 

வெறுமனே,  வெறும் வாயை வைத்துக்கொண்டே, ஒன்றும் செய்யாமலேயே பெரிய பெயர் வாங்கி விடலாமே என்று எதிர்பார்த்து இருப்பார்கள். அதற்கென்று ஒரு சிறிய வட்டத்தில், அவர்களைப்போலவே  வேறு சிலரைப் பிடித்து வைத்தும் இருப்பார்கள். அவர்கள், மாறி, மாறி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டு திருப்திப்பட்டும், வெளி உலகில் என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்கள்போல் இருந்தும் கொள்வார்கள். பணம் கொடுத்துப் கௌரவப் பட்டமும் வாங்கிவிடுவார்கள்.

 

உதாரணமாக, எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால், ஓர் எழுத்தாளரின் ஊர் சென்று, அவரைப் புகழ்ந்து பேசி, மாலை போட்டு, பொன்னாடை போர்த்துக் கௌரவித்தவர்கள் எல்லோருமே தாங்களும் எழுத்தாளர்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். அதன் பின்னர் அந்த ஊரிலிருந்து இங்கு வந்து இவர்களுக்கு அதே பாராட்டும், அதுவும், இதுவும் தானாகவே நடக்கும்.

 

சில எழுத்தாளர்கள், 50-100 வருடங்களுக்கு முன்னால் உள்ள மாற்ற முடியாத மன நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களிலோ, கணினித் தொடர்புகளிலோ, விரிந்து  வரும் பெரும் வலைத் தளங்களிலோ நம்பிக்கை வைப்பதை மறுப்பவர்கள். இவற்றின் ஆதிக்கத்தினை வெறுப்பவர்கள்;  நவீன ஊடக செயற்பாடுகள் அவசியம் அற்றவை என்று கருதுபவர்கள். ஒரு கடதாசிக் கட்டொன்றைக் கையில் வைத்து வாசித்தால்தான் பூரண திருப்தி என்று நினைப்பவர்கள்.

 

இவர்களில் சிலர் அறிவுபூர்வமாக, பெரிதாக, நன்றாக எழுதுவார்கள், ஓர் அச்சகத்தை நாடுவார்கள்; கடதாசியில் பக்கம் பக்கமாக அச்சிடுவார்கள்; சில நூறு புத்தகப் பிரதிகளை கட்டி எடுத்துவந்து ஒரு நூல் வெளியீட்டு விழாவை நடத்தி, அதை வெளியிட்டு, வந்தவர்களை அதை வாங்கச் செய்வதுதான் உண்மையான எழுத்தாளர்களுக்கு அடையாளம் என்று  நம்புவார்கள். இந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடு இவர்களின் ஆக்க முயற்சிகளுக்கு பயனுள்ளவையாக இருக்கவில்லை என்று உணர மறுக்கிறார்கள்.

 

வாங்கியவர்களில் பெரும்பாலோர், வாசிப்பதில் எந்த வித ஆர்வமும் இல்லாதவர்களாயும் இருக்கலாம். அப்படி இருந்தால், இவர் எழுதிய விடயம் அவருக்குப் பிடிக்காத துறையாய் இருக்கலாம். அல்லது,புத்தகத்தை விட்டு கணினியில் வாசிக்க விரும்புவராகவும் இருக்கலாம். முகமனுக்காக வாங்கியவர்கள் அதை வாசிப்பார்களோ என்பது சந்தேகம்தான். இவர்கள் மிகுதிப் புத்தகங்களை, விற்றுப்போன சிலவற்றைத் தவிர, தம் வீட்டில் ஓர் அலுமாரியில் அழகாக அடுக்கி வைத்திருந்து, புத்தக சாலைகள், வருபவர், போகிறவர்களுக்கெல்லாம் இலவசமாகக் கொடுக்கும் நல்ல மனம் கொண்டவர்கள்.

 

காலப்போக்கில், எல்லாம் தூசு பிடித்து, கறையான் அரித்து, இவர்கள் இறந்ததும், பிள்ளைகள் அந்த ஆக்கங்களுக்கு எந்த வித மதிப்பும் அளிக்காது குப்பைத் தொட்டிக்குள் வீசிவிடுவார்கள் என்பதை நினைக்க எவ்வளவு வேதனை தருகிறது. இவர்களின் அயராத உழைப்பு பலனற்று அழிந்துவிடுகிறது.

 

இதுவே வலைத்தளத்தில் இடப்பட்டிருந்தால் என்றென்றும் இவர் எழுத்து அழியாமல் இருந்திருக்கும். எந்தக் காலத்திலும், எவரும், எப்போதும், விரும்பிய நேரத்தில் இழுத்து வாசிக்கக்க்கூடியதாக இருந்திருக்குமே! பல மரங்கள் தறிக்கப்பட்டு, அழிக்கப்படாமல் இருந்திருக்குமே!

 

ஆனால், இவர்களின் விருப்பம் அப்படித்தான் இருக்கும், அதுதான் அவர்களுக்கு மனச் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்ற மனோ நிலையில் உள்ளதால் அவர்கள் தொடர்ந்து பழமை பேணுபவர்களாகவே இருந்துவிட்டுப் போவதுதான் அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதுவும் உண்மைதான்.

 

ஒரு காலத்தில் புத்தகங்கள் வந்தபோது,  ஓலைச் சுவடியிலிருந்து நேரடியாக வாசிப்பதுதான் 'ஒரிஜினல்' என்று கருதப்பட்டது.- தற்போது கூடி காண்டம் வாசித்துப் பலன் கூறுபவர்கள் 'ஒரிஜினல்' ஓலைகளைத்தானே கொண்டு திரிகிறார்கள்; அவற்றைப் பிரதி பண்ணிக்கொள்ள விரும்பவில்லை! -  பின்னர் புத்தகம் வாசிப்பதுதான் 'ஒரிஜினல்'.

 

இப்போது கடதாசியில் வாசிப்பது குறைவு; இணையத்தில் வாசிப்பதுதான் வெகு  விரைவில் இணையத்தில் வாசிப்பது மறைந்து, கேட்பதும், கதைப்பதும்தான் நடக்கும். கடைசியில்  பார்ப்பது மட்டும்தான் நடக்கும், பார்வையிலேயே மூளை எல்லாவற்றையும் கிரகித்துவிடும். கடதாசிப் பாவனை வெகு விரைவில் மறைந்துவிடும்.

 

சில முதியோர், சிறிய கைபேசிகளில் வாசிப்பது மிகவும் கஷ்டம்; புத்தகத்தில் வாசிப்பதில்தான் சந்தோஷமும், திருப்தியும்  என்று சாதிப்பார்கள். கைபேசியில் காணும் வரிகளை தேவையான எந்த அளவுக்கும் பெரிது படுத்தியும், தொலைக்காட்சித் திரையிலோ, பெரும் சுவரிலேயோ வேண்டிய அளவில் விழச் செய்தும்  வாசிக்கலாமே!

 

இன்னும் ஒரு 50 வருடங்களுக்குள் கடதாசி என்பது ஒரு காட்சிப் பொருளாகத்தான் இருக்கும்.

 

அதுமட்டுமல்ல, ஒரு வாசகருக்கு எந்தத் துறையில் வாசிக்க விருப்பமோ, அந்த விடயத்தை மட்டும் வலைத்  தளத்தில் வடிகட்டித் தேடி எடுத்து அவர் வாசிப்பாரே ஒழிய, ஒருவர் தனக்கு விரும்பியதை எழுதிவிட்டு, 'இந்தா இதை வாசி!' என்று இன்னொருவரை நிர்ப்பந்திக்க முடியாது என்பதுதான் உண்மை.

 

எதை ஒருவர் வாசிக்க வேண்டும் என்று முடிவு எடுப்பது அவரின் உரிமை, எழுத்தாளன் அல்ல!

 

இப்படியாக, வேறு துறைகளிலும் பலர் இருக்கிறார்கள்.

 

அவர்களுக்கு,

'தெரியும்; ஆனால் தெரியாது'

-சந்திரகாசன் ,செல்வதுரை

0 comments:

Post a Comment