'குடும்பங்கள் / திருமணங்களின் பரிணாமம்' / பகுதி: 01இன்று ஒருபால் திருமணம் ஒரு விவாதத்திற்குரிய விடயமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் திருமணம் என்றால் என்ன என்பதன் பொருள் அல்லது மூல கருத்தே ஆகும். சிலருக்கு அதன் பொருள் காலத்திற்கு ஏற்ப, சமூக மற்றும் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப, விட்டுக் கொடுப்புகளுடன் மாற்றலாம் என்பதே, ஆனால் பலருக்கு அதன் மூல கருத்தை மாற்ற முடியாது என்பதே ஆகும். அப்படியாயின் பல ஆயிரம் ஆண்டுகளாக திருமணம் [மற்றும் குடும்பங்கள்] என்ற நிறுவனம் என்ன அர்த்தத்தில் வளர்ச்சி பெற்று, இன்று வரை தொடர்ந்தது என்பது வரலாற்று ரீதியாக முக்கியம் பெறுகிறது. 


அது மட்டும் அல்ல இன்றைய சமீபத்திய விவாதத்தின் பெரும்பகுதி 'திருமணம் என்ற நிறுவனம் ஆலயம் [சமயம்] அல்லது அரசு தனதாக்கி உள்ளதா?' என்ற கருத்தில் கவனம் செலுத்தியுள்ளது கவனிக்கத் தக்கது [Much of the recent debate has focused on the notion of who "owns" marriage - the religion [Temple, church, mosque ....] or the State]

 

திருமணத்தின் தோற்றம், பதியப் பட்ட வரலாற்றுக்கும் முந்தியது என்று பரவலாக ஒப்புக் கொள்ளப் பட்டாலும், எமக்கு இன்று வரை கிடைத்துள்ள பதியப் பட்ட வரலாற்றில், ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் சம்பிரதாய முறைப்படி இணைக்கும் திருமண கொண்டாட்டம் கி மு 2350 ஆண்டளவில்                           மெசொப்பொத்தேமியாவில் ஏற்பட்டதாக அறிகிறோம். இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு குடும்பம் என்பது கிட்ட தட்ட 30 பேர் கொண்ட தளர்வான குழுக்களாக, பல பெண்கள் மற்றும் குழந்தைகள், பல ஆண் தலைவர்களால் பகிரப் பட்ட ஒரு அமைப்பாக அல்லது ஒரு குழுவாக இருந்தது என பெரும் பாலான மானுட வியலாளர்கள் [anthropologist] நம்புகிறார்கள். வேட்டையாடி உணவுத் திரட்டும் மனிதன் [hunter-gatherers], ஒரு விவசாய சமூகமாக பரிணமிக்கும் பொழுது, அவனுக்கு நிலையான ஏற்பாடுகள் அல்லது அமைப்புக்கள் தேவைப்  பட்டது. இதனால், உலகின் மூத்த நாகரிகமாக கருதப் படும்  மெசொப்பொத்தேமியாவில் கி மு 2350 ஆண்டளவில் ஒரு ஆணுடன் ஒரு பெண்ணை இணைக்கும் திருமண பந்தம் ஏற்பட்டது எனலாம். அது, அதன் பின் மெல்ல மெல்ல அடுத்த பல நூறு ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கின. ஆனால் அப்போது, திருமணம் என்பது, காதலுடனோ அல்லது மதத்துடனோ ஒரு சிறிதளவே தங்கி இருந்தது எனலாம்.

 

திருமணம் அன்று எதைப் பற்றியது என்று கொஞ்சம் ஆழமாக நோக்கினால், ஒரு ஆணுடன் மட்டுமே ஒரு பெண்ணை இணைத்து, அதன் மூலம், அந்த பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையின் தந்தையை அடையாளப் படுத்துவதே முக்கிய காரணியாக இருந்தது எனலாம். அதாவது, ஒரு ஆணின் [மனிதனின்]  குழந்தைகள் உண்மையிலேயே அவரது உயிரியல் வாரிசுகள் என்பதற்கு உத்தரவாதம் கொடுப்பதே திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் [thus guarantee that a man's children were truly his biological heirs]. இங்கு திருமணம் மூலம், பெண், ஆணின் உடமையாகிறார். உதாரணமாக, பண்டைய கிரீஷில் [ancient Greece] நிச்சயதார்த்த விழாவில், "முறையான சந்ததியை உருவாக்கும் நோக்கத்திற்காக நான் என் மகளை தாரை வார்க்கிறேன் [I pledge my daughter for the purpose of producing legitimate offspring] என மணமகளின் தந்தை உறுதிமொழி அளித்து, தனது மகளை, மணமகனுக்கு மனைவியாக ஒப்படைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், பழங்கால ஹீப்ரு அல்லது யூதர்களில், ஆண்கள் பல மனைவிகளை [polygyny] எடுக்க அல்லது வைத்திருக்க அமைப்பு ரீதியாக வசதி இருந்தது. பண்டைய இந்தியாவிலும் இலங்கையிலும் பலதார மணம் இருந்துள்ளது. குறிப்பாக, அரசர்கள், சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் முதலானோர் பல பெண்களை ஒரே நேரத்தில் மணந்து வாழ்ந்ததை வரலாறு மற்றும் புராணங்கள் சாட்சி பகிர்கின்றன. அவர்களின் மனைவிகள் வீட்டிலேயே இருக்க வேண்டியும், மற்றும் வீடு அல்லது குடும்பத்தை கவனிக்க வேண்டியும் பொதுவாக இருந்தது. மனைவி, சந்ததியை உருவாக்கவில்லை என்றால், அவளை திருப்பி கொடுத்து விட்டு, வேறு யாரவது பெண்ணை மீண்டும் மணக்க முடியும்.

 

என்றாலும் சில இடங்களில் பல கணவர் மணம் (Polyandry) இருந்துள்ளது தெரியவருகிறது. உதாரணமாக,  திபெத், நேபாளம், பூட்டான் போன்ற இமய மலையை ஒட்டிய இடங்களிலும் மற்றும் இலங்கையில், கண்டிச் சிங்களவர் திருமணத்தில், ஆங்கிலேயர்களால் 1859  தடை செய்யும் மட்டும்,  ஒரு பெண் குடும்பத்தில் மூத்தவனை முறைப்படி திருமணம் செய்தாலும் அவள் அவனது சகோதரர் அனைவருக்கும் மனைவியாகும் வழக்கம் இருந்தது. இதே மாதிரி பழக்கம்  நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடி மக்களிடையேயும் (Todas  அல்லது தொதவர்) காணப்பட்டது. மகாபாரத காவியத்தில், திரௌபதி பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாக வாழ்ந்ததையும் கவனிக்க. 


சமயம் என்ற அமைப்பு மக்களிடையே வளர்ந்து, அது முதன்மையாகவும் சக்தி வாய்ந்த நிறுவனமாகவும் வந்ததும், ஒரு சமய தலைவரின், உதாரணமாக ஐயர், பாதிரியார் போன்றோர்களின் ஆசீர்வாதம் திருமணத்தை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட அன்று தேவைப் பட்டது. உதாரணமாக, எட்டாம் நூற்றாண்டு அளவில், கத்தோலிக்க தேவாலயம், திருமணத்தை புனித மதச் சடங்காக அல்லது கடவுளின் அருளை பெரும் சடங்காக [sacrament, or a ceremony to bestow God's grace] ஏற்றுக் கொண்டது. 1563 ஆண்டளவில், புனித மதச்சடங்கு கிறித்தவ சமயச் சட்டத்தில் [canon law] சேர்க்கப் பட்டது.   

 

மேலும் திருமணம் கடவுளால் நிச்சியக்கப் படுகிறது என்றும், அதற்கு முதல் உதாரணமாக, ஆதாமும் ஏவாளும் இருக்கிறார்கள் என்றும் கிறிஸ்தவ சமயம் கூறுகிறது. இதை குறித்து ஆதியாகமம் 2:24 [Genesis 2:24] இல்: "அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்து கொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர்." [In the Bible, the first example of marriage was Adam and Eve. It reads, “A man will leave his father and mother and be united with his wife, and the two will become one body.”] என்கிறது. அதே போல

 

"இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை தன்னுடைய சான்றாக கூறுகிறார். நீங்கள் அமைதி பெற, உங்களில் இருந்தே துணைவியாரை உங்களுக்காகப் படைத்து, உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தி இருப்பது, அவரின் சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்துணரும் மக்களுக்கே இறைவனின் வல்லமையின் சான்றுகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்." [According to the Qur’an 30:21, “And among His Signs is this that He created for you spouses of your own kind, that you may dwell in tranquillity with them, and He has put love and mercy for one another: verily in that are Signs for those who reflect.”] என்று குர்ஆன் 30:21 கூறுகிறது.

 

கி மு  1500–1000 ஆண்டை சேர்ந்த ரிக் வேதம், தனது மண்டலம் [அத்தியாயம்] 10, அதிகாரம் (சூக்தம்) 85 [சூரியனின் திருமண பாடல் /  Sūryā’s Bridal Hymn or the Wedding Hymn] இல், ஒரு மண விழாவை அழகுற வர்ணிப்பதை காண்கிறோம். அதில் குறிக்கப் பட்ட சில அம்சங்கள் இன்றும் இந்து திருமணத்தில் தொடர்வதை காணலாம். மணமகனின் பிரதிநிதிகள் [அஸ்வினிகள் / aśvins, or divine twins] மணமகளின் வீட்டிற்கு திருமணக் கோரிக்கை ஒன்று கொண்டு வருகிறார். வருங்கால மணமகளின் தந்தையும் மற்றவர்களும் அதை ஆமோதிப்பதுடன் திருமண நடவடிக்கைகள் ஆரம்பிக்கிறது. மேலும் கி மு 1000–900 ஆண்டை சேர்ந்த அதர்வண வேதம் 7.36  " கணவனும் மனைவியும் ஒருவரை யொருவர் அன்பின் பார்வையில் பார்க்கட்டும்; எப்போதும் இனிமையாக பேசட்டும்; ஒருவருக் கொருவர் இதயத்தில் வாழட்டும்; இரண்டு உடல்களாக இருக்கட்டும்  ஆனால் ஒரே மனதுடன் வாழட்டும்" என  வரையறுக்கிறது [Atharva Veda 7/36/1:- “Sweet be the glances we exchange, Our faces showing true concord; Enshrine me in your heart and let one spirit dwell within us.”]. அது போல, அதர்வண வேதம் 14/1/52 " மனைவியே, கடவுள் உன்னை எனக்கு தந்துள்ளார், உன்னைப் பராமரிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இருவரும் குழந்தைகளைப் பெற்று 100 ஆண்டுகள் வரை வாழ்வோம் [Atharva Veda 14/1/52:-O wife! God has handed you over me. The responsibility of maintaining you lies with me. lets both have children and live up to 100 years.] என்கிறது.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
பகுதி 02 தொடரும்... வாசிக்கத்  தொடுங்கள் Theebam.com: 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / பக... 2: 

1 comments:

  1. மனுவேந்தன்Friday, October 29, 2021

    இன்று தமிழர் திருமணம் என்று எந்த வழக்கத்தினை கொண்டிருக்கிறார்கள் என்று புரியாத நிலையில் திருமணம்-ஒரு புதிய தொடர் ஆரம்பம்.இது நாம் அறியாத பல தகவல்களுடன் திருமணத்தின் காலங்களுக்கு ஏற்ற மாற்றங்கள் தொடர்பான கருத்துக்கள் கொண்டு வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.

    ReplyDelete