சித்தர் சிந்திய முத்துக்கள்.....3/58

 

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -482

தொண்டு செய்து நீங்களும் சூழவோடி மாள்கிறீர்

உண்டுழன்று நம்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்

வண்டுலாவும்  சோலை சூழ வாழுமெங்கள் நாதனும்

பண்டு போல நம்முளே பகுத்திருப்பனீசனே.

இவரே குருவென்றும் அவதாரமென்றும் கூறிக் கொண்டு அப்பொய் குருவுக்கே வாழ்நாள் முழுதும் தொண்டு செய்தும், கூட்டமாக கூடி சூழ்ந்து ஓடி ஆடி உழன்று உண்மையை உணராமல் நீங்கள் செத்துப் போகின்றீர்கள். மெய்குருவாக அவர் நமக்குள்ளேயே உண்டு என்பதை அறிந்து அதிலேயே உழன்று தியானம் செய்தும், சத்விசாரம் செய்தும், உற்றுணர்ந்து பார்க்க மாட்டீர்கள். கற்பகத்தரு விளங்கும் சோலையில் வண்டுகள் போல் உலாவிக் கொண்டுள்ள எங்கள் உள்ளத்தில் வாழும் எங்கள் குருநாதன் ஆதியான மெய்ப்பொருளில் புகுந்து பகுத்தறிவாக இருப்பான் ஈசன் என்பதை உணர்ந்து அதையே பற்றித் தியானித்திருங்கள்.        

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -486

என்னகத்தில் என்னை நான் எங்குமோடி நாடினேன்

என்னகத்தில் என்னையன்றி ஏது மொன்று கண்டிலேன்

மின்னெழும்பி வின்னகத்தின் மின்னொடுங்கு மாறு போல்

என்னகத்துள் ஈசனோடி யானுமல்ல தில்லையே.                

என்னகத்தில் ஆறு ஆதாரங்களிலும் ஏழாம் தலமான சகஸ்ராரத்திலும் என் உள்ளமாகிய கோயிலிலும் எல்லா இடங்களிலும் மனதை ஒட்டி ஈசனையே நாடி தேடினேன். என் உள்ளத்தில் நானாக நின்ற மெய்ப்பொருள் ஒன்றை யன்றி வேறு ஒன்றும் ஏதும் இல்லை என்பதை கண்டு கொண்டேன். மின்னல் தோன்றிய விண்ணிலேயே மின்னல் ஒடுங்குவது போல் என் அகத்திலேயே ஆகாயத்தில் ஈசன் ஒடுங்கியிருப்பதை அறிந்து கொண்டேன். என் அகத்துள் உள்ள மெய்ப்பொருளில் ஈசனும் யானும் இணைந்து ஒன்றாகி இருப்பதை உணர்ந்தேன். என் உயிரான  ஈசன் ஓடிவிட்டால் நான் என்ற ஒன்று இல்லையே..

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம்- 490

இடங்கள் பண்ணி சுத்தி செய்தே யிட்ட பீடமீதிலே

அடங்க நீரும் பூசல் செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்

ஓங்குகின்ற நாதனார் உதிக்கு ஞானம் எவ்விடம்

அடங்குகின்ற தெவ்விடம் அறிந்து பூசை செய்யுமே.            

புண்ணிய இடங்களைத் தேடிச் சென்று கருவறையை சுத்தம் செய்து பீடமிட்டு அமைத்திருக்கும் சிலைகளில் வாசனை திரவியங்களாலும் புனித நீராலும் அபிஷேகம் செய்து பூசைகள் பண்ணுவீர்கள். ஆனால் உங்கள் உள்ளத்தை அறிந்து அதனை சுத்தி செய்து ஈசனார் கட்டாதலிங்கமாக இருக்கும் பீடத்தை உணர்ந்து அதிலேயே அடங்கி பூவாக விளங்கும் உங்கள் ஆன்மாவை அசையாமல் நிறுத்தி பூசை செய்வதே அரியதான தவம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் பீடம் மீதில் ஒதுங்கியிருக்கும் ஈசனார் ஞானப் பொருளாகி உதிப்பது எந்த இடம்? அடங்கி இருப்பது எந்த இடம்? என்பதனை அறிந்து கொண்டு அங்கேயே உங்கள் ஆன்மாவை நிறுத்தி இந்த மெய் பூசையை செய்து தியானித்திருங்கள்.                

***************************************************

 ..அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment