சித்தர் சிந்திய முத்துகள் .....3/ 59

 


***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -491

புத்தகங்களை சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்

செத்திடம் பிறந்திடம் அது எங்ஙனென்று அறிகிலீர்

அத்தனைய சிந்தனை அறிந்து நோக்க வல்லிரேல்

உத்தமத்துளாய சோதி யுணரும் போக மாகுமே.               

புத்தகங்கள் பலவும் நிரம்பப் படித்து தலைக்கனத்தை சுமந்து உண்மையை உணராது, கற்ற கர்வத்தினால் பொய்களையே பிதற்றித் திரிகின்றீர்கள். நீங்கள் பிறந்த இடம் எது? சாகப் போகும் இடம் எது? என்பதையும் அது உங்களுக்குள் எங்ஙனமாய் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவே மெய்யறிவு என்பதையும் அதிலேயே அத்தனை தத்துவங்களும் பொருந்திய சித்தனாம் சிவன் இருப்பதை அறிந்து கொண்டு அதையே நோக்கி தியானம் செய்து ஞானத்தில் வல்லவராகுங்கள். உங்கள் உள்தமரில் உள்ள உத்தமமான சோதியை உணர்ந்து இறை இன்பம் பெறுங்கள்.

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் -493

கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணா

உருக்கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்த பின்

தருக் கலந்த சோதியைத் தெளிந்து யானறிந்த பின்

இருக்கிலேன் இறக்கிலேன் இரண்டு மற்றிருந்ததே.                     

கருவாக உருவாகிய போதே என்னோடு கலந்து நின்றவன் ஈசன் என்பதை நான் கண்டுகொண்டேன். நான் காணவும் அனைத்துக்கும் காரணமானவன் ஈசன். அவன் என்னுள் உருவாகவும் சோதியாகவும் கலந்து நின்றதை தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அண்டங்கள் யாவும் கலந்து நின்றது அச்சோதியே என்பதைத் தெளிந்து அவ்வீசனையே பற்றி தியானித்திருக்கின்றேன். அதன்பின் நான் இருப்பதைப் பற்றியோ இறப்பதைப் பற்றியோ எந்த நினைவும் இன்றி எல்லாம் அவ்வீசனிடமே ஒப்படைத்து சரணடைந்து என்றும் நித்தியமான இரண்டுமற்றிருந்த மெய்ப்பொருள் ஒன்றிலேயே தியானித்து இருக்கின்றேன்.     

***************************************************

 

சித்தர் சிவவாக்கியம் - 495

கள்ள உள்ளமே யிருக்கக் கடந்த ஞானம் ஒதுவீர்

கள்ள உள்ளம் அறுத்த போது கதியிதன்றிக் காணகிலீர்

உள்ளமே விளக்கி நித்தம் ஒளியை அணுக வல்லிரேல்

தெள்ளு ஞானமும் முளே சிறந்ததே சிவாயமே.

கள்ளத்தனமான எண்ணங்களை உங்கள் உள்ளத்தில் வைத்துக் கொண்டு, எல்லாம் கடந்த எல்லையைக் கண்டது போல் ஞானம் பேசி உபதேசம் செய்கின்றீர். அந்த கள்ள எண்ணங்கள் யாவையும் வேரோடு அறுத்து உள்ளத்தை பரிசுத்தமாக்கி தியானிக்கும் போது நமக்கு நற்கதி கொடுக்கும் திருவடி மெய்ப்பொருளையன்றி வேறு எதையும் பார்க்காதீர்கள். நம் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் யாவையும் அன்பால் கசிந்துருகி அகற்றி நித்தமும் வாசியினால் ஒலியை ஏற்றி ஒளியுடன் கூட்டி தியானிக்க வல்லவரானால் தெளிந்த சோதியாகிய ஞானம் உங்களுக்குள் சிறந்து அதுவே சிவத்தோடு சேர்க்கும்

***************************************************

..அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment