நாய் வாலை நிமிர்த்த முடியாது!

அம்பிகாபதி திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக்காட்சி . தமிழ் சினிமாவின் ஆரம்பகால நகைச்சுவை நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் நடித்த காட்சி அது. என்.எஸ்.கிருஷ்ணன் மதுரத்தை காதலிப்பார். என்.எஸ்.கிருஷ்ணன் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறும் தனது காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் எனவும் கூறுவார். அதற்கு மதுரம் ”நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். எனது செல்ல நாயின் சுருண்டு போயுள்ள வாலை நிமிர்த்திவிட்டால் நான் உங்களை திருமணம் செய்கிறேன்” எனப் பதிலளிப்பார். உடனே ”இதுவா விடயம் .இது ஒன்றும் பிரமாதமான விடயமல்ல” என்று சொல்லிவிட்டு தனது நண்பருடன் சேர்ந்து நாயை பிடித்து அதன் வாலை நேராக்கிவிடுவார் என்.எஸ்.கிருஷ்ணன்.

 

ஆனால் கையை விட்டதும் வால் மறுபடியும் சுருண்டு விடும் .இப்படி இரண்டு மூன்று தடவைகள் முயற்சித்து களைத்துப் போன பின் ஒரு தடியை எடுத்து வந்து நாயின் வாலில் வைத்து கட்டிவிடுவார். கட்டிவிட்டு வெற்றிப் புன்னகையுடன் மதுரத்தைப் பார்த்து “எப்படி?” என்று கேட்பார். மதுரம் தனது நாயின் வாலில் கட்டியுள்ள தடியை அவிழ்த்ததும் நாயின் வால் மறுபடியும் சுருண்டு பழையநிலைக்கு வந்துவிடும்.

 

இதேபோல் தான் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் ஒருபோதும் திருத்தவே முடியாது போலிருக்கிறது. தமிழர்கள் என்ற இனம் ஒற்றுமையாக இருந்தால் அது உலகத்துக்கே ஆபத்து என்று கடவுள் நினைக்கிறார் போலிருக்கிறது. மூவேந்தர்களும் இணைந்திருந்திருந்தால் உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்திருக்கலாம்.

 

தமிழர்களின் ஒற்றுமைக்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்து ஆலயங்களே நல்ல எடுத்துக்காட்டு. சிறிய ஆலயங்கள் முதல் பெரிய ஆலயங்கள் வரை அனைத்து ஆலயங்களிலும் ஆண்டவனுக்கு சேவை செய்வதற்காக போட்டி போட்டு சிங்கள பௌத்த பொலிஸாரையும் நீதிமன்றத்தையும் நாடுகின்றனர் மெத்தப் படித்த யாழ்ப்பாணத்தார். பல கோயில்கள் பூட்டப்பட்டுள்ளன; சில கோயில்களில் பூசகர்களும் நிர்வாகிகளும் மாறிமாறி இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

 

சில கோயில்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மூடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஆண்டவனுக்காக தம்மை அர்ப்பணித்து ஆண்டவனுக்கு சேவை செய்யும் நோக்குடனேயே சிங்கள பௌத்த பொலிஸாரையும் நீதிமன்றத்தையும் நாடுகின்றனர் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. 


இதேபோல் பாடசாலையின் அபிவிருத்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட யாழ்ப்பாண பாடசாலைகளின் பழைய மாணவர்களும் தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்கின்றனர். கிராம அபிவிருத்திச் சங்கம் ,சனசமூக நிலையம் போன்றவற்றிலும் இவ்வாறே மக்கள் சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அடிபடுகிறார்கள்.

 

தமிழ் அரசியல்வாதிகளும் இதற்குவிதி விலக்கல்ல; தமிழ் அரசியல்வாதிகளும் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழ் மக்களுக்காகச் சேவை செய்து வருகின்றனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதற்கு மட்டும்தான் போட்டி போடுகின்றனர் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்; தமது சொந்த நலன்கள் என்று வரும் போது அவர்கள் தமது அரசியல் வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு மிகமிக ஒற்றுமையாக செயற்படுவார்கள் என்பதையும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

 

1984-86 காலப்பகுதியில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக தங்களுக்குள் மாறிமாறி சுடுபட்ட தமிழ்ப்போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், எப்படி வடக்கு மாகாணசபையில் வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதற்கும் ஏனைய விடயங்களுக்கும் ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள் என்பதை ஈழம் வாழ் தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஜே.வி.பியினரைப் போல் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை வேண்டாமென்று சொல்ல தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களல்லர், தமிழர்கள் புத்திசாலிகள்.

 

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு வருடந்தோறும் இலங்கையிலிருந்து தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளால் மூன்றுக்குக் குறையாத கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு பிரேரணைகளை அனுப்புவதற்கான காலக்கெடு கடந்த மாதம் 23 ஆம்திகதியுடன் முடிவடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலக்கெடுவுக்கு முன்னர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் எவருமே பிரேரணைகள் எதையும் அனுப்பியதாகத் தெரியவில்லை.

 

சற்று காலதாமதமானலும் ஈழத் தமிழர்களின் நலன்கருதி இலங்கை தமிழர் தரப்பிலிருந்து அனுப்பப்படும் பிரேரணைகளுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன், எவ்வளவு அதிகமாகப் பிரேரணைகள் எனக்கு கிடைக்கிறதோ அவ்வளவுக்கு தான் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் மகா நாட்டில் பிரஸ்தாபிக்க முடியும் ”எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏதோ இரகசியச் செய்தி அனுப்பியிருக்க வேண்டும்.

 

அதனால் தான் ஆளாளுக்கு தனித்தனியாக , ஏட்டிக்கு போட்டியாக காலம் கடந்த பின்னும் கடிதங்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பதவி ஆசை என்பது அறவே இல்லாத எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் சுயநலனுக்காகத்தான் இப்படி கன்னை கட்டிக் கொண்டு கடிதம் அனுப்புவதாக யாரும் தவறாக நினைத்தால், அவர்களின் கண்ணைக் கடவுள் குத்தவும் கூடும்.

 

இறுதியாக அண்டை நாட்டு இராஜதந்திரி ஒருவர் கூறிய கருத்தையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். 

தமிழ் அரசியல்வாதிகள் உச்சபட்ச வாக்குகளுடன் எங்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் என்று கேட்கிறார்கள்; ஏனென்றால் தாங்கள் (தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உச்சபட்ச சலுகைகளை அனுபவிப்பதற்காக” என்றார்.

(தமிழருக்கு என்றொரு....பண்பாடு உண்டு)

நன்றி:ந.பரமேஸ்வரன்

0 comments:

Post a Comment