"குடும்பத் தலைவி"- சிறு கதை

என்னுடன் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான், இன்று என் அண்ணாவை திருமணம் செய்யப் போகிறவர். அவளின் பெயர் 'தமிழ்', அவள் படிப்பிலும் அழகிலும் சாதாரணமே. ஆனால் நல்ல பண்பாடும் மற்றும் கலைகளிலும் ஈடுபாடு உள்ளவள். நான் அதற்கு எதிர்மாறு. படிப்பிலும் மற்றும் அழகிலும் முன்னுக்கு நிற்பவன். அதனால் கொஞ்சம் இறுமாப்பும் உண்டு. படிக்கும் காலத்தில் நான் அவளை கணக்கிலேயே எடுப்பதில்லை. சிலவேளை கொஞ்சம் அவள் கவலை அடையக் கூடியதாக, பலரின் முன்னிலையில் பகிடி கூட செய்துள்ளேன், அவள் அது எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்து, பொருட்படுத்தாமலே விட்டு விடுவாள்.

 

நான் இறுதி பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தி அடைந்து, உதவி விரிவுரையாளராக அதே பல்கலைக்கழகத்தில் நியமனமும் பெற்றேன். அவளும் சாதாரண சித்தி பெற்று. கிராமப்புற பாடசாலை ஒன்றில் உதவி ஆசிரியர் பதவி பெற்றார். அவள் எல்லா சக மாணவர்களிடமும், பரீட்சை முடிவின் பின்  விடை பெரும் பொழுது, என்னிடமும் வந்தாள். நான் அவளை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. என்றாலும் அவள் தான் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுத்த சிற்றுண்டியில் ஒன்றை எடுத்து, மிக சர்வ சாதாரணமாக என் வாயில் திணித்துவிட்டு, 'காலம் மாறும், உன் திமிரும் அடங்கும் , என்னிடமே நீ, என்னை மதித்து ஆலோசனை பெரும் காலம் வரும்'  என்று ஒரு புன்முறுவலுடன் கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள். அதன் அர்த்தம் அப்ப எனக்கு புரியவில்லை.நான் அதைப்பற்றி பெரிதாக பொருட்படுத்தவும் இல்லை.

 

இன்று அவள் எனக்கு அண்ணியாகப் போகிறாள். எம் அம்மா பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் அகால மரணம் அடைந்தார். அன்றில் இருந்து இன்றுவரை அப்பாவே என்னையும், அண்ணாவையும், தங்கையையும் பல சிரமங்களுக்கிடையே, நல்ல படியாக வளர்த்து எடுத்தார். அண்ணா ஒரு மருத்துவர். நான் இயற்பியல் [பௌதிகவியல்] விரிவுரையாளர். தங்கை பல்வைத்திய துறையில் நான்காம் ஆண்டு மனைவி. ஏன் அப்ப கூட ஒரு பொறியியலாளர். அதனால் எமக்கு பண கஷ்டம் இல்லை, ஆனால் குடும்பத்தை கவனிக்க ஒரு தலைவி தான் இல்லை. அப்பவே தலைவனும் தலைவியும். அப்பாவின் செல்லப் பிள்ளைதான் என் தங்கை. அவரே சிலவேளை குடும்ப தலைவி மாதிரி கட்டளையிடுவார். அப்பாவும் அதை பொருட்படுத்துவதில்லை, சிலவேளை அதை ஊக்கப் படுத்தியும் உள்ளார், ஆனால் அது எனக்கு ஒரு பிரச்சனையாக என்றும் இருக்கவில்லை. அவள் எனக்கும் செல்லப் பிள்ளைதான்!

 

இன்னும் தமிழ், வலது கால் எடுத்து எம் வீட்டுக்குள் வரவில்லை, ஆனால், அப்பா என்னையும் தங்கையையும் கூப்பிட்டு, 'உங்க வரும் கால அண்ணி ..  திருமணத்தின் பின் வேலைக்கு போகமாட்டார் ..  அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்..  நான் கேட்டதின்படி ..  நானும் வீட்டு வேலை, வெளிவேலை என்று களைத்துப் போய்விட்டேன் ..  நாளையில் இருந்து அவரே இந்த வீட்டின் குடும்பத்  தலைவி ..  நீங்க இருவரும் அதற்குத் தக்கதாக உங்களை தயார்படுத்த வேண்டும்'  என்று ஒரு போடு போட்டது தான் இப்ப என்னை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்பான வேண்டுகோளா இல்லை கட்டளையா எனக்கு தெரியாது, அதைப்பற்றி சிந்திக்கும் நிலையில் நான் இல்லை.  ஆனால் தங்கையோ ஒரே குதூகலம், தனக்கு ஒரு நல்ல அண்ணி மற்றும் வீட்டுக்கு ஒரு பொறுப்புவாய்ந்த தலைவி வருகிறார் என்று!

 

இப்ப எனக்கு அந்த கடைசி நாள், விடை பெரும் நிகழ்வு, படமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதை நினைக்க நினைக்க மனம் கொதித்துக் கொண்டு வந்தது. கேவலம் ஒரு சாதாரண என் சக மாணவிக்கு, முதல் தரத்தில் சித்தியாகி, பெரும் பதவியில் இருக்கும் நான் மதிப்புக் கொடுக்கும் காலம் வந்ததே என்று! கர்வம் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. அது என்னுடன் பிறந்தது!

 

என்றாலும் ஒரு பயமும் என்னை வாட்ட  தொடங்கியது, நான் மூன்றாம் ஆண்டில் இருக்கும் பொழுது, நடந்த ஒரு பகிடிவதை தான் அதற்கு காரணம். அவள் முதலாம் ஆண்டு கலைப் பீட மாணவி, பெயர் ஜெயா, அவளை என் சக நண்பர்கள் பகிடிவதை செய்யும் பொழுது, பூ கொத்து ஒன்று கொடுத்து, அந்த நேரம் அந்த வழியே போய்க்கொண்டு இருந்த என்னிடம் கொடுத்து, 'ஐ லவ் யு' சொல்லும்படி கூறி உள்ளார்கள். அது எனக்குத் தெரியாது. எனவே அவர் வந்து திடீரென பூ கொத்து நீட்டிக்கொண்டு 'ஐ லவ் யு' சொல்ல, அவள் உண்மையில் மிகவும் அழகு வாய்ந்தவளாக இருந்தும், என்னுடன் பிறந்த கர்வமும் முரட்டுக் குணமும், அவளை இழுத்து அணைத்துக்கொண்டு, உனக்கு படிக்க வந்தனியா இல்லை மாப்பிள்ளை தேடி வந்தனியா என்று பேசி, பூ கொத்தை பிடுங்கி அவள் தலையில் போட்டு, போடி என்று தள்ளிவிட்டேன். இதை அந்த சக நண்பர்கள் மறைந்து  இருந்து வீடியோவும் எடுத்து விட்டார்கள். அவள் அங்கிருந்து பயத்துடன் அழுது கொண்டு போய்விட்டாள். அதன் பின்பு தான் எனக்கு உண்மை புரிந்தது. இதற்கு இடையில் அந்த வீடியோ நண்பர்களுக்கிடையில் பரவவும் தொடங்கி விட்டது. 

 

அப்பொழுது தான், தமிழ், என் சக மாணவி, இன்று என் வருங்கால அண்ணி, என்னிடம் வந்து, ஜெயா மிகவும் நொந்து இருக்கிறாள், அந்த வீடியோ பரவுகிறது, பாவம் அவள், அவளை ஏன் நீ காதலித்து, அந்த விடியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது என்று ஆலோசனை வழங்கினார். ஜெயா உண்மையில் ஒரு அழகு சிலை. வார்த்தையில் அடங்கா அழகின் அழகு அவள் .

 

என்றாலும் என் கர்வம் அதை ஏற்கவில்லை, ஆகவே ஒரு சாட்டாக, 'எம் குடும்பம் எம் குடும்ப தலைவன் / தலைவியின் சொற்படியே நடப்பது. அதை என்னால் மீறமுடியாது. அப்படி என்றால் அங்கே  போய் அதை கேளு' என்று அந்த வேண்டுகோளை உதறித் தள்ளி விட்டேன். அப்ப தமிழ் 'காலம் வரும் பொழுது, நான் கட்டாயம் அதை செய்வேன்' என்று சபதம் இட்டு போனது இப்ப ஞாபகம் வருகிறது. நாளையில் இருந்து அவளே குடும்ப தலைவி, அப்பா முழுப் பொறுப்பையும் அவளிடம் நாளை கொடுக்கப் போகிறார். அது தான் இப்ப என்னை வாட்டும் ஒன்று!   

 

உண்மையில் அவள் நல்ல அழகு, அவளும் முதல் வகுப்பில் சித்தி அடைந்து, அங்கேயே விரிவுரையாளராகவும் இருக்கிறாள் . எல்லாம் நல்ல பொருத்தம் தான்,  எனவே தமிழ் குடும்ப தலைவியாக வந்து, அவள் முன்பு சொன்ன சபதத்தை நிறைவேற்ற முன்பு, நானே அவளை காதலித்தால் என்ன என்று என்னில் தோன்றியது. தமிழ் அவளை திருமணத்துக்கு அழைத்திருந்தால், அவளும் திருமண மண்டபம் வந்து இருந்தாள். இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று, நானே முன்னின்று அவளை வரவேற்று, பின்  தனியாக உன்னுடன் பேசவேண்டும் என்று அவளுக்கு கூறினேன். அவளும் அதற்கு இசையை, நான் 'ஐ லவ் யு' என்று அவளிடம் கூறினேன். அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மிக அமைதியாக முதலில் இருந்தாள், பின் ஆறுதலாக உங்க குடும்ப தலைவன் அல்லது தலைவியுடன் கதைத்து அவர்களுக்கூடாக பதில் சொல்லுகிறேன் என்று அமைதியாக விலகி போய்விட்டாள். அப்ப தான் என் வீணான கர்வத்தின், தற்பெருமையின் உண்மை புரிந்தது!

 

அண்ணாவின் கல்யாணத்தின் பின் இப்ப ஒரு கிழமையும் கடந்து விட்டது, அண்ணி, எம் குடும்பத் தலைவி ஒன்றும் என்னிடம் சொல்லவே இல்லை. ஏன் ஜெயா கூட , ஒரே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தும், இது வரை ஒன்றுமே சொல்லவில்லை. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. என்றாலும் நான் ஒன்றும் கேட்கக் கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

 

சில மாதங்கள் கழிய, ஒரு நாள் அப்பாவின் முன்னிலையில், அண்ணி என்னை கூப்பிட்டு, உனக்கு பெண் பார்த்து உள்ளோம், எங்கள் எல்லோருக்கும் நல்ல மகிழ்வு, நாளை நானும் நீயும், அண்ணாவும் பெண் பார்க்க போகிறோம் என்று ஒரு குண்டு தூக்கி போட்டார். எனக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. எதிர்த்து சொல்லவும் இப்ப துணிவு இல்லை. காரணம் அவர் இப்ப குடும்பத் தலைவி, அப்பா  அவர் பக்கமே, அது தான் பிரச்சனை

 

என்றாலும் ஒருவாறு கொஞ்சம் தைரியம் பெற்று, நான் ஒருவளை விரும்புகிறேன். அவளையே  கைப்பிடிக்க விருப்பம் என்றேன். அப்ப தான் அண்ணி, ஒரு குடும்பத் தலைவியின் நிலையில் நின்று,  'தலைவன் / தலைவியின் சொற்படியே நடப்பது. அதை என்னால் மீறமுடியாது' என்று நீ அன்று சொன்னது பொய்யா? என்று ஒரு போடு போட்டார். அப்பாவும் அண்ணாவும் அது என்ன என்று விசாரிக்க, எல்லா கதைகளும் வெளியே வந்தது. அண்ணி மிக அமைதியாக புன்முறுவலுடன் 'காலம் வரும் பொழுது, நான் கட்டாயம் அதை செய்வேன்' என்று முன்பு சபதம் இட்டத்தை நினைவு படுத்தி, நான் எவருக்கும் கேடுதல் நினைப்பத்திலை, நான் சொன்னதையே இப்ப செய்கிறேன் என்றார்! அம்மாவின் தானத்தில், அவர் என்னை அன்புடன் அணைத்து, எனக்கு எல்லாம் தெரியும், உன் ஜெயாவை தான் நாளை பார்க்கிறோம் என்றார், என் சக மாணவி, என் அண்ணி, எங்கள் குடும்பத் தலைவி!

 

நான் இப்ப , நான் காதலிக்கும் ஜெயாவைத் தான் திருமணம் செய்யப் போகிறேன். தமிழ்-இல்லை அண்ணி, தான் முன்பு முன்மொழிந்த பெண்ணையே எனக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார். அப்படியென்றால் யார் வென்றது? யார் தோற்றது ?

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

1 comments:

  1. யாரும் தோற்கவில்லை
    அன்பு வென்றது

    ReplyDelete