எம்மை நெருங்கி வரும் புதுமைகள்

 அறிவியல்=விஞ்ஞானம்

வருகிறது வகை-2 நீரிழிவு நோய்க்கு மருந்து

போதுமான இன்சுலின் சுரக்காததால் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

 நியூசிலாந்தின் ஓடகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்நோயைக்  கட்டுப்படுத்த டாலியா மலர் இதழ்களில் இருந்து எடுக்கப்படும் மருந்துப்  பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

 எலிகள் மீது நடத்திய சோதனையில் வெற்றியும் பெற்றுள்ளனர். விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இனி, புதிய பற்களை முளைக்க வைக்கலாம்!...


குழந்தைகளாக
இருக்கும்போது பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் வளரும். நிரந்தர பற்கள் விழுந்துவிட்டாலோ அவை திரும்ப முளைப்பதில்லை.

 ஆனால் சுறாக்களுக்கு சில வாரங்களுக்கு ஒரு முறை புதிய பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். முதலைகளுக்கும் அவற்றின் வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்.

 இவற்றை அடிப்படையாகக் கொண்டு விழுந்த பற்களை திரும்ப வளர வைக்கும் வழிமுறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

 'போன் மார்ஃபோஜெனிக் புரோட்டீன்' எனும் ஒரு வகைப்  புரதத்தை தூண்டுவதன் வாயிலாக, பல் வளர்ச்சியை உருவாக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

எலிகளில்   நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து 2024 ஆம் ஆண்டில்,'டூத் ஏஜனிசிஸ்'  எனப்படும் மரபணு குறைபாட்டினால் ஏற்படும் பல் வளர்ச்சியின்மையால் அவதிப்படுவோரிடம் சோதனை நடத்த உள்ளனர்.

 தற்போது இது குறித்து ஆராய்ந்து வரும் ஜப்பான் நாட்டின் ஒசாகா  மருத்துவ ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த புதிய சிகிச்சை முறை 2030 ஆண்டுக்குள் முழுமை வடிவம் வரும் என்று கூறுகின்றனர்.

 

முன்னணியில் தனிமை

இதய நோய்களுக்கு தனிமையும் முக்கியமான காரணம் என்று, ஐரோப்பிய கார்டியாலஜி சொசைட்டி, கண்டுபிடித்துள்ளது. இந்த அமைப்பு, 37 - 73 வயதுடைய, 5 லட்சம் மக்களின் உடல்நல அறிக்கையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. இதய நோயை ஏற்படுத்துவதில் கெட்ட கொழுப்பு, அதீத உடல் எடை, சிறுநீரக பாதிப்புக்கு அடுத்தபடியாக, மிக முக்கியமான காரணியாக தனிமை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதய நோயை ஏற்படுத்தும் தவறான உணவுப் பழக்கம்,புகை பிடித்தல், மன அழுத்தம் ஆகிய காரணிகளை இது முந்திவிட்டது.


புதுவகை கண்ணாடி

பென்சில்வேனியா பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 'லைன் க்ளாஸ்' எனும் புதுவகை கண்ணாடியை உருவாக்கியுள்ளனர். இது சாதாரண கண்ணாடியை விட, 10 மடங்கு வலிமையானது, எளிதில் உடையாதது. அது மட்டுமன்றி வழக்கமாக கண்ணாடி தயாரிக்க 1,500 டிகிரி செல்ஷியஸ் வரை சூடாக்க வேண்டும். ஆனால் இதற்கு, 400 டிகிரி செல்ஷியஸ் வெப்பமே போதுமானது. இதனால், இந்தப் புதுவகை கண்ணாடி சுற்றுச்சூழலுக்கும் நன்மை தருகிறது. விரைவில் வணிக ரீதியான விற்பனைக்கு வர உள்ளது.

 

மூளையைத் தாக்கும் பூஞ்சைகள்...


நம்
சுற்றுச் சூழலில் காற்று, மண், அழுகும் தாவரங்கள், நம் உடலில் தோல், குடல் என எல்லா இடங்களிலும் பூஞ்சைகள் வாழுகின்றன. இவற்றின் நன்மை செய்யும் பூஞ்சைகள் போலவே தீமை செய்பவையும் உள்ளன. இவற்றால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் இறக்கின்றார்கள். சமீப காலமாக   ஆப்பிரிக்காவில் பூஞ்சைகளால் உருவாகும் நோய்கள் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களையே பூஞ்சைகள்

 அதிகம் தாக்குகின்றன.

 37 டிகிரி செல்சியஸ் கொண்ட மனித உடலில் வெப்ப நிலையில் பெரும்பாலான  பூஞ்சைகள் வாழ இயலாது. ஆனால் மாறிவரும் பருவச் சூழலால், அதிகமான வெப்பநிலையிலும் கூட வாழ்வதற்கு பூஞ்சைகள் தங்களை தயார் படுத்திக் கொண்டுள்ளன.

'க்ரிப்டோகாக்கஸ் நியோஃபோர்மன்ஸ்' எனும் பூஞ்சையால் ஏற்படும், 'க்ரிப்டோகாக்கல் மெனிங்கிடிஸ்' என்ற நோய்   முதலில் நுரையீரலில் வளர்ந்து, பின்னர் மூளையை தாக்குகிறது.'நியுமோசிஸ்டிஸ் ஜிரோவெசி நிமோனியா' என்ற நோய் 'நியுமோசிஸ்டிஸ் ஜிரோவெசி' எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது.

 இவை இரண்டும் எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவர்களையே தாக்குகின்றன.

 இந்த நோய்களுக்கான மருந்துகளை கண்டறியும் முறைகளுக்கு செலவு அதிகம் என்பதால் இவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இவற்றுக்கான தீர்வை விஞ்ஞானிகள் முழு வீச்சில் தேடி வருகின்றனர்.

தொகுப்பு :மனுவேந்தன் செல்லதுரை


1 comments:

  1. அறிவியலில் ஆர்வமுடையவன் என்ற ரீதியில் ஒன்றுவிட்ட சனிக்கிழமைகளில் உங்கள் பக்கத்தில் வரும் அறிவியல் செய்திகளை ஆர்வத்துடன் படிப்பேன். தொடருங்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete