திருக்குறள்...-/46/-சிற்றினம் சேராமைதிருக்குறள் தொடர்கிறது 

46. சிற்றினம் சேராமை

👉குறள் 451:

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்.

மு.வ உரை:

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

சாலமன் பாப்பையா உரை:

தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

கலைஞர் உரை:

பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.

English Explanation:

(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.

 

👉குறள் 452:

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கினத்தியல்ப தாகும் அறிவு.

மு.வ உரை:

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

கலைஞர் உரை:

சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.

English Explanation:

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

 

👉குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னா னெனப்படுஞ் சொல்.

மு.வ உரை:

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை:

மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

கலைஞர் உரை:

ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.

English Explanation:

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.

 

👉குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்

கினத்துள தாகும் அறிவு.

மு.வ உரை:

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

கலைஞர் உரை:

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

English Explanation:

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

 

👉குறள் 455:

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்.

மு.வ உரை:

மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

கலைஞர் உரை:

ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.

English Explanation:

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.

 

👉குறள் 456:

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்கில்லைநன் றாகா வினை.

மு.வ உரை:

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

கலைஞர் உரை:

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

English Explanation:

To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good.

 

👉குறள் 457:

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழுந் தரும்.

மு.வ உரை:

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

கலைஞர் உரை:

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.

English Explanation:

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

 

👉குறள் 458:

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கினநலம் ஏமாப் புடைத்து.

மு.வ உரை:

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:

மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

கலைஞர் உரை:

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

English Explanation:

Yet good companionship is confirmation strong.

 

👉குறள் 459:

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தி னேமாப் புடைத்து.

மு.வ உரை:

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

கலைஞர் உரை:

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.

English Explanation:

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

 

👉குறள் 460:

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்.

மு.வ உரை:

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

கலைஞர் உரை:

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

English Explanation:

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

Theebam.com: திருக்குறள்...-/47/-தெரிந்து செயல்வகை 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து


0 comments:

Post a Comment