காக்க,காக்க........மூளை யைக் காக்க


                

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் 10 செயல்கள்!
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன.
காலை உணவு..
காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகமாகச் சாப்பிடுவது..
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்..
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல்..
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
சுவாசித்தல்..
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
தூக்கமின்மை..
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது..
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
நோயுற்ற காலம்..
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை..
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
பேசாமல் இருப்பது..
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க”

இராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்


இராமாயணம்  என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள், சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட், ஷேக்ஸ்பியர், மதனகாமராஜன், பஞ்சதந்திரக் கதைகள் முதலிய கட்டுக் கதைகளைப் போன்று இயற்கைக்கும் மனித ஆற்றலுக்கும் பொருத்த மற்றதும் அனுபவத்தில் சாத்தியப்படாததுமான அசாதார ணமானவை களாயிருப்பதால் இக்கதை உண்மையாய் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுவதில்லை என்று உறுதியாய்க் கூறலாம்.
 அசாதாரண சம்பவங்களால்தான் கடவுள் தன்மை அவதாரத்தன்மை முதலிய தெய்வீகத் தன்மைகளைக் கற்பிக்க முடியும் என்று சொல்லப்படுமானால், இக் கதையில் காணப்படும் அசாதாரண விஷயங்கள் பெரிதும் பொருத்தமற்றதும், தேவையற்றதும், நீதியற்றது மாய் இருப்பதோடு பொது நடத்தையில், தேவை உள்ள சந்தர்ப்பங்களில் அதாவது உயர் குணமும் முன்யோ சனையும், கருணையும், சத்தியமும், தூர திருஷ்டியும் நல்லெண்ணமும் காட்டப்பட வேண்டிய சாதாரணக் காலங்களில் அசாதாரண சம்பவத்தில் காட்டப்படும் தெய்வீகத் தன்மையோ அல்லது மிக மிக சாதாரணத் தன்மையில் காட்டப்படும் சராசரி மனிதத் தன்மையோ கூட இல்லாமல் இருக்கின்றன.
 கதாநாயகனாகிய இராமனைக் கடவுளின் அவதாரம் என்று மக்கள் கருத வேண்டும் என்பதாகக் கருதியே கற்பனை செய்திருக்கும் இந்த இராமாயணக் கதையில், இராமனுடைய எண்ணம் பேச்சு நடத்தை ஆகியவை களில் வஞ்சகம், பொய், சூது, வன்னெஞ்சம், பேராசை, கொலை, மதுவருந்தல், மாமிசம் புசித்தல், மறைந் திருந்து கொல்லுதல், அபலைகளை குற்றமற்றவர்களை கொடுமை செய்தல் முதலிய தீயகுணங்களும் கூடா ஒழுக்கங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இதனாலேயே இராமனும் இராமாயணக் கதையும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை அல்ல என்பதும் அவை சராசரித் தன்மையைவிடக் கீழ்ப்பட்டவை என்பதும் தெள்ளென விளங்கும் என்பதோடு மற்றும் இராமனுடையவும் இராமாயணத்தினுடையவும் எந்தக் காரியமும் எண்ணமும் தமிழ் மக்களுக்கு படிப்பி னைக்கோ பின்பற்றுதலுக்கோ ஏற்றதல்ல என்பதையும் தெளிவுபடுத்தும்.
கதை- தோற்றம்
இராமாயணக் கதை தோற்றத்திற்கு ஆக அதில் கூறப்படும் காரணங்கள் பெரிதும் பகுத்தறிவுக்கும் தெய்வீகத் தன்மைக்கும் ஒத்ததாகச் சிறிதும் காண்பதற்கில்லாமல் இருக்கிறது. அதாவது:-தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனி டம் வந்து முறையிடுகின்றார்கள். நான்முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்கு ஆக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன.

அவையாவன:- திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாபத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாபத்திற்கு ஆக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாபத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன. இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? இராட்சதர்கள் என்பவர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்கு கொலை, களவு,காமம், விபசாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன?
இக்காரியங்களைச் செய்பவர்கள் கடவுளர்கள் ஆவார்களா? தேவலோகத்துக்கும் பூலோகத்துக்கும் சம்பந்தம் என்ன? தேவர்கள் யாகம் செய்ய பூலோகத்துக்கு ஏன் வரவேண்டும்? ஜீவப்பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று, பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும், உயர்பதவியும் மேன் மையும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும் கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர் களாகவும் அதைத் தடுக்கிறவர்கள் இராட்சதர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப்பட வேண்டியதாகும். இன்றைய நாட்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப் பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொது மக்களும் அரசாங்கமும் கருதி பழிப்பும் ஆக்கினையும் தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத்தடுப்பது ஒழுக்க மாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் சிவபக்த னான இராவணனுடைய நாட்டிலும், ஆட்சியிலும், இம்சை யும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமான தென்றும் தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக் கினையும் செய்யவேண்டியது கடமையாக இருந் திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததினாலேயே அந்த அரசனையும் அவனது குலத்தையும் குடிபடைகளையும் நாட்டையும் அடியோடு ஒழிப்பதற்கு ஆக அவதாரம் எடுத்து வர வேண்டியது கடவுள் தன்மையா? என்பனவும், இவை போன்ற பிறவுமே, இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங் களும் ஆபாசக் களஞ்சியமாய் இருந்து வருவதை விளக்கும்.
மகப்பேறு யாகம்
இராமாயணக் கதையின் முதல் காண்டம் என்னும் பாலகாண்டம், அயோத்தி அரசனாகிய தசரதன் தனக்கு மகப்பேறு உண்டாக யாகம் செய்கிறான் என்றும், அந்த யாகத்தில் கொன்று பலியிடுவதற்கு ஆக, ஆடு, மாடு குதிரை, பறவை, பாம்பு, ஆமை முதலிய நடப்பன பறப்பன ஊர்வன வாகிய ஜீவப் பிராணிகளைக் கொண்டு வந்து வைத்திருந்த தாகவும் கூறுகிறது. ஒருவனுக்குப் பிள்ளை உணடாக, இத்தனை ஜீவன்கள் பலியால் மாள வேண்டுமா? இந்தப் பலிகளை ஏற்றுத்தான் கடவுள் ஒருவனுக்குப் பிள்ளை கொடுக்க வேண்டுமா என்பது ஒருபுறமிருக்க, இதைக்கண்டு தேவர்கள் திருப்தி அடையலாமா?
இப்படிப்பட்ட தேவர்களுக்கு ஒரு அரசன் இருக்கிறானாம்.அவன் பெயர் தேவேந்திரனாம்! இவனது கொடுஞ்செயலையும், கூடா ஒழுக்கத்தையும் இவன் சம்பந்தப்பட்ட கதைகளில் பார்ப்போமானால், அவை பல இராமாயணமாகலாம்.நிற்க, தசரதன் செய்யும் இந்த யாகத்தில், யாகப் பசுவாகிய குதிரையை தசரதன் மனைவிகளில் ஒருத்தியாகிய கௌசலை என்பவள் ஒரே வெட்டில் வெட்டிக் கொன்று, அந்த செத்த குதிரையுடன் ஒரு இரவு முழுதும் கட்டி அணைந்து படுத்துக் கொண்டிருக்கிறாள். (இதுதான் தெய்வீகத் தன்மை போலும். இனி இவர்களது மானுஷீகத் தன்மை, எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே நம்மால் முடியவில்லை. இவ்வளவுதானா? இன்னும் இந்த யாகத்தின் யோக் கியதையை, யாகசாஸ்திரப்படி பார்ப்போமானால், அது நினைப்பதற்கே உடல் துடிக்கும். அந்த ஆபாசங்கள் ஞானசூரியன் என்னும் மற்றொரு குடிஅரசு பதிப்பில் காணலாம்) இரவு முடிந்தவுடன், இந்த கௌசலையையும் தசரதனின் மற்றும் இரு மனைவிகளாகிய சுபத்திரை, கைகேயி ஆகியவர்களையும், யாகப் புரோகிதர்களாகிய ருக்வித்துக்களுக்கு தசரதன் தட்சணையாகக் கொடுத்து விடுகிறான். இந்தப் புரோகிதர்கள் மூவரும் இப்பெண் களைக் கைப்பற்றித் தங்கள் இஷ்டம்போலெல்லாம் கூடித்திரிந்து அனுபவித்துவிட்டுப் பிறகு, அதற்கு ஆகக் கூலியோ, கிரையமோ தசரதனிடம் வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுத்து விடுகிறார்கள்.
அதன்பிறகே இம்மனைவி கள் கர்ப்பவதிகளாகக் காணப்படுகிறார்கள். ( ஆங்கில மொழி பெயர்ப்பாளராகிய மன்மதநாத் தத்தர் இந்த இடத்தில் அரசனது மனைவிகளை ஹோதா, அத்வர்யு, உக்தா ஆகிய மூவரும் புணர்ந்தார்கள் என்று எழுதுகிறார்) இதுதான் தசரதன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் தத்துவம்.இந்த யாகத்தின் முறைகளையும், அங்கு நடந்த காரியங்களையும், சாஸ்திரப்படியும், கதைப்படியும், பகுத் தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூன்று மனைவிமாருக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் நான்கு குழந்தைகளும் தசரதனுக்குப் பிறந்த குழந்தை களாக இருக்க முடியாது என்றும், அவை அந்த யாகப் புரோகிதர்களுக்குத் தான் பிறந்திருக்க வேண்டுமென்றும் விளங்கும். இதை விளக்கமாகச் சொல்லவேண்டு மானால் யாகம் செய்யும்போது தசரதனுக்கு வயது அறுபது ஆயிரம். அவனுக்கு மனைவிமார்களோ அறுபது ஆயிரம் பேர்கள் என்று, கம்பன் சொல்லி இருந்தாலும், முன்னூற்று அய்ம்பது மனைவிகள் என்று வால்மீகி கூறுகிறார்.
 இதிலிருந்து தசரதன் படுகிழவன் என்பதும், அவன் பல நூற்றுக்கணக்கான மனைவி களை மணந்து, கலந்து வாழ்ந்த காமாந்தகன் என்பதும் நன்கு விளங்கும். இப்படிப்பட்டவன் தனக்கு ஆண்மை இழந்து பிள்ளை உண்டாகும் சக்தி இல்லாமல் போவதும், வெறும் சபலத்தால் பெண்களுடன் கூடிக்குலாவித் திரிவதும் இயற்கையேயாகும்.ஆகவே இந்தக் காரணங்களால், இத்தனை காலம் கர்ப்பமடையாதிருந்த இவனது மனைவிமார்கள் அந்த யாகம் செய்த அன்று ஒரு நாளில் மூன்று பேரும் ஏக காலத்தில் கிழவனாகவும் ஆண்மையற்றவனாகவும் இருந்த தசரதனால் கர்ப்பம் அடைந்திருக்க முடியுமா? என்பதும் யோசிக்கத்தக்கதாகும்.அன்றியும், அப்பெண்கள் மூவரும் யாகப் புரோகிதர்கள் மூவருக்குக் கொடுக்கப்பட்டு அவர்கள் மூவரும், இப்பெண்களை இஷ்டப்படி அனுபவித்து விட்டு, அதற்கு ஆக அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள் என்றால் அப்பெண்களின் கர்ப்பத்திற்கு தசரதன் நாதனாக இருக்கமுடியும் என்று யார்தான் சொல்ல முடியும்? உண்மையிலேயே இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கன் என்கின்ற நான்கு பிள்ளைகளும் தசரதனுக்கே பிறக்காமல், யாகப் புரோகிதர்களுடைய கருவுக்கே பிறந்திருந்தாலும், ஆரிய தர்மப்படி அதில் குற்றம் சொல்லவோ இழிவு கற்பிக்கவோ இடம் இல்லை. ஏனெனில், ஆரியரில் ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குப் பிள்ளை இல்லாவிட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேறு ஒருவனிடம் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தர்ம சாஸ்திரங்களும் ஸ்மிருதிகளும் கூறுகின்றன. இதற்கு அனுபவப் பூர்வமாய் ஆதாரம் வேண்டுமானால் மற்றொரு ஆரியக் கதையாகிய பாரதத்தில் பார்க்கலாம். அதில் யாகம் என்கின்ற ( சாக்கு) காரணம்கூட இல்லாமல், பல விதவைகள் தமது குல குருவாகிய வியாசனிடம் கூடி, பல பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
திருதராஷ்டிரன், பாண்டு முதலியவர்கள் அந்தப் படி – பிறந்தவர் களேயாவார்கள். இன்னும் அநேகம் பேர்கள் பாரதத்தில் இதுபோலவே காணப்படுகிறார்கள். மற்றும் சீதையின் பிறப்பைப் பார்த்தாலும், அவளது தாய், யாராலோ சீதையைப் பெற்று காட்டில் எறிந்து, புளுதியில் கிடந்த பெண்ணாகவே கிடைத்திருக்கிறாள். இந்தக் காரணத்தால் சீதைக்குத் திருமணம் கூட வெகுநாள் தடைப்பட்டிருக்கிறது. இதை சீதையே சொல்லுகிறாள்.மற்றும், ஆரியர்களின் இதிகாச புராண சாஸ்திரங் களைப் பார்த்தால், அதில் வரும் மக்களுக்குக் கருவு உண்டாக்கியவர்கள், அல்லது பெற்றவர்கள், மனிதர் களாகக்கூட இருந்திருக்கவில்லை யென்பது தெரிய வரும்.ஆதலால் இந்த யாகத்துக்கும் மகப் பேறுக்கும் சம்பந்தமில்லை என்பதும், யாகம் என்றால் மதுவருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கோலாகலமாய்த் திரியும் பண்டிகை என்பதும், அதனால் மதிக்கத்தக்க பலன் இல்லை என்பதும் இனிது விளங்கும்.
………………… தந்தை பெரியார்

உரிமை வேண்டி....

Image result for உரிமை
உறக்கமாய் நீயும்
உறைந்து போவாய் எனின்
உரிமை வேண்டி
செத்துமடியும் இனத்தின் ..
உணர்வுகளும்
உணரப்படமுடியாமல்
மடிந்து போகும்..
உள்நோக்கம்  கொள்ளாது
விழித்து பார்..
உணர்ந்துவிடுவாய்
வலிகள் தம்மை.

உயிர்களைக் காக்கும்  இறைவனும்.
உனை முழுமையாக
புரிந்து கொள்வானென்று..
உணர்ச்சி இழந்து
உருக்குலைந்து போகாதே.

உன்னை முழுமையாய்
புரிந்து கொண்டு
மறுக்கப்படும்
நீதிகளை  வேண்டி
போராடி  விடு.
மறையாமல் இருந்துவிடும்
நிஜங்கள்
உன்னை வாழவைத்துவிடும்.

கடந்த, நிகழ், எதிர்
காலங்களும் நீயே.
காலத்தை
நோக்கமின்றி மறைக்காதே
கடமையே   உன்னை
உயர்த்தி வைக்கும்.
காலத்தை  விரயம் செய்யாது
கண் வைத்துவிடு.
கனிந்து வரும் நேரங்கள்.

-காலையடி, அகிலன்.

சினிமா- துளிகள்


இந்த வருடத்தில் அதிக வசூல் எது?
இந்த 2018 வருடம் பிறந்து 9 மாதங்கள் முடியப்போகிறது. இவ்வருடம் இதுவரை வெளியான ஓப்பனிங் வசூலில் டாப் 5 இடத்தில் எந்த  படங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.
இதில் சீமா , காலா , விஸ்ப ரூபம் , தமிழ் படம் ஆகிய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படம் தான்.

தனுஷ் படத்தில்  அனு இமானுவேல்!
தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நடிகை அனு இமானுவேல் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தில் நாகார்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதிராவ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இவர் விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.


வருகிறது சில்க் சுமிதா வின் கடைசிப் படம்
கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் திரைப்படத்தை இயக்குநர் திருப்பதி ராஜன் ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவரது வாழ்க்கை குறித்து பாலிவுட்டில் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவர் அறிமுகம் செய்த இயக்குநர் திருப்பதி ராஜன் இயக்கத்தில் சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் என்ற திரைப்படம் வெளியாகம் இருந்தது.

அப்போது சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த திரைப்படம் வெளியாகவில்லை. தற்போது இந்த திரைப்படத்தை இயக்குநர் திருப்பதி ராஜன் வெளியிட முடிவு செய்துள்ளார்.
ஆமா! அன்று காட்டத் தடையானவை இன்று தடையில்லைத்தானே !

2018  விருது: யாருக்கு என்னென்ன விருது?
2018 சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை சேர்ந்த கலைத்துறை கலைஞர்கள் பங்கேற்றனர்.

சைமா விருது பட்டியல் இதோ...
வாழ்நாள் சாதனையாளர் விருது: பி.சுசீலா
சிறந்த படம்: விக்ரம் வேதா
சிறந்த இயக்குனர்: அட்லீ (மெர்சல்)
சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (வேலைக்காரன்)
சிறந்த நடிகர்: மாதவன் (விக்ரம் வேதா)
சிறந்த நடிகை: நயன்தாரா (அறம்)
சிறந்த நடிகை: அதிதி பாலன் (அருவி)
சிறந்த துணை நடிகர்: எம் எஸ் பாஸ்கர் (8 தோட்டாக்கள்)
சிறந்த துணை நடிகை: சிவதா (அதே கண்கள்)
சிறந்த வில்லன் நடிகர்: எஸ் ஜே சூர்யா (மெர்சல் & ஸ்பைடர்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான் (மெர்சல்)
சிறந்த பாடலாசிரியர்: விவேக் (ஆளப்போறான் தமிழன் - மெர்சல்)
சிறந்த பின்னணிப் பாடகர்: சித் ஸ்ரீராம் (மெர்சல்)
சிறந்த பின்னணிப் பாடகி: லக்ஸ்மி சிவனேஷ்வரலிங்கம் (போகன்)
சிறந்த அறிமுக நடிகர்: வசந்த் ரவி (தரமணி)
சிறந்த அறிமுக நடிகை: அதிதி ராவ் ஹைத்ரி (காற்று வெளியிடை)
சிறந்த அறிமுக இயக்குனர்: அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி)
சிறந்த காமெடி நடிகர்: சூரி (சங்கிளி புங்கிளி கதவ தொற)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் (காற்று வெளியிடை)

வருகிறது 'வடசென்னை'

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ்  தயாரித்து  தனுஷ் நடித்துள்ள வட சென்னை திரைப்படம் வரும் அக்டோபர்  மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி,  அமீர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சார்லி சாப்ளின் 2
சக்தி சிதம்பரம் இயக்கித்துல, பிரபு, பிரபு தேவா, காயத்ரி ரகுராம், அபிராமி, மோனல நடிச்சிருந்த படம்   'சார்லி சாப்ளின்'. 2002ம் ஆண்டு தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி என ஆறு மொழிகள்ல வெளியான இந்த  குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவையாக இருந்ததாலா சூப்பர் ஹிட்டாச்சு.

இப்ப சார்லி சாப்ளின் 2ம் பாகத்தை எடுத்துட்டு வற்றாரு இயக்குநர் சக்தி சிதம்பரம். இந்த படத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோர் நடிச்சுருக்காங்க.

ரஜினி - 2.0
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.542 கோடிக்கு மேல் செலவில் எடுத்துள்ள இந்த படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள்உற்சாகம் அடைந்துள்ளனர்.
                                                                                     

தமிழ்நாடு பிறந்தது எப்படி?/சங்கரலிங்கனார்



கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். 75 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு ஊரைச் சார்ந்தவர்.

வாழ்க்கை
காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தையும் துவக்கிய இவருக்கு ராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் பொட்டி சிறீராமுலுவின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்தத் திட்டமிட்டார்.

உண்ணாவிரதம்
காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27ந்தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணா. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார்.

பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாகத் தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார். 76 நாட்கள்வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இதுகுறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.

மறைவு
அக்டோபர் 10ந் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறந்தபின் தன் உடலைப் பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைத்து இறுதிமரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறினார் , அதையொட்டி அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள். தியாகி சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக‍ அரசால் விருதுநகர் ராமமூர்தி சாலையில்-கல்லூரிசாலைப் பகுதியில் ரூ 1.6 கோடியில் மணிமண்டபம் கட்டும்பணிகள் நடைபெறுகின்றன. 

தமிழ்நாடு பெயர் மாற்றம்
சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னாளில் ஆட்சிக்கு வந்த பேரறிஞரின் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு 1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தோன்றிய தமிழ்நாடு அந்நிய  ஆக்கிரமிப்பு இன்றி ஒரு போராட் ட முமின்றி, தாய் மொழி விசுவாசமு மின்றி  ஆங்கில நாடாக விரைவாக மாறிக்கொண்டு வருவது வருந்தத் தக்கதே!
:தொகுப்பு-கயல்விழி,பரந்தாமன்.