தேவைக்கு மேலே செல்வம் சேர்ந்து,
திகட்டிடும் வாழ்வில் இன்பம் தேய்ந்து,
காண்பதெல்லாம் கண்முன் மலிந்து,
களிப்பும் நாளடைவில் மறைந்து போகும்!
திறமைக்கு மேலே புகழும் பெருகி,
திசையெங்கும் புகழ்மாலை சூடி,
புதுமை யாவும் பழமையாய்த் தோன்றி,
புலன்கள் யாவும் சலிப்பினில் ஆழும்!
கிடைத்திடும் செல்வம் அளவினை மீறில்,
கிளர்ந்திடும் ஆசை அடங்கிடும் வேளில்,
அரிதெனத் தோன்றும் பொருளும் ஒருநாள்,
அலட்சியப் பொருளாய் மாறிடும் வாழ்வில்!
புகழெனும் மாலை பெரிதாய்ச் சூடி,
பொய்யான பெருமை மனதினில் கூடி,
உழைப்பினால் பெற்ற உயர்வினை மறந்து,
உண்மையின் மதிப்பும் குறைந்திடும் அன்று!
தேவைக்கேற்ற வாழ்வே சிறப்பாம்,
திறமைக்கேற்ற புகழே இனிப்பாம்,
அளவறிந்து வாழும் மனமே உயர்வாம்,
அடக்கமே மனிதரின் அணியென விளங்கும்!
-
செ.மனுவேந்தன்
'நட்பிற்குத் தடையேது'
மண்ணில் பிறந்த உயிர்கள் யாவும்
எண்ணம் ஒன்றி இணைதல் இன்பம்!
சாதி மதம் இனம் கடந்து
நீதி போற்றும் நேயம் நிலைக்கும்!
உள்ளம் திறந்தே உரையாடி மகிழ
கள்ளம் இல்லாக் காதல் பிறக்கும்!
துன்பம் நேரும் வேளை தன்னில்
இன்பம் தந்து தாங்கும் தோழமை!
உயிரைத் தந்து உயிர்ப்பிக்கும் தூய்மையே
அயராத நட்பிற்குத் தடையேது சொல்லு?
'பதமான நீரோ ?'
பனைமரம் தந்திட்ட தெள்ளமுது இதுவோ?
மனமகிழ்வு ஊட்டிடும் மாமருந்து அதுவோ?
பதநீர் பருகிடப் பசியும் அடங்குமே!
நிதமும் அருந்திட நலமும் பெருகிடுமே!
இயற்கை ஈந்திட்ட இனிய பானமிது!
துயரம் போக்கிடும் தூய அமுதமிது!
தென்னையும் கற்பகத்தருவும்
தந்திடும் செல்வம்!
மண்ணின் மணம்வீசும் மங்காப் புகழே!
'அமைதி வழி'
வீணான சண்டைகள் பேரழிவு தரும்
உயிர்களைக் கொல்லும் சச்சரவுகளே!
சமாதானங்களை என்றும் உயிர்ப்பித்து
யாவரும் போற்றிடும்
சமத்துவங்கள் வளரட்டும்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
