சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? [பகுதி:02 ]

சைவ மதம் உலகின் ஒழுங்கு படுத்தப்பட்ட,பதியப்பட்ட சமய நெறியில் மிகவும் பழமை வாய்ந்ததாக அதன் வேர்,5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சம வெளியில் சிவன்[பசுபதி] வழிபாட்டிலும் மற்றும் தாய் தெய்வ வழிபாட்டிலும்,மேலும் அதன் சம காலத்தில் அல்லது அதற்கும் முந்திய காலத்தில்,உலகின் முதல் நாகரிகமாக கருதப் படும் சுமேரிய நாகரிகத்தில் ஈனன்ன வடிவில் தாய் தெய்வ [அல்லது காளி] வழிபாட்டி லும் காணப் படுகிறது.அதே போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தென் இந்தியா சங்க இலக்கியத்திலும் சிவா/சிவன் குறிக்கப் பட்டுள்ளது.இந்த மத நெறி திராவிடரினதும் மற்றும் ஆரியருக்கும் பிராமண வேதத்திற்கும் முற்பட்டதாகும்.”சிவன்” என்பது ”சிவ் + அன்” ஆகும். அதாவது, ”சிவ்” தன்மையானவன் ”சிவன்.” ”சிவ்” என்பது ”ச் + இ + உ” ஆகும். இது ”மேன்மை(ச்) நிறைவு(இ) உயிர்ப்பு(உ) தன்மை” யாகும்.மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை” யை நாம்: அன்பு, அருள், அறிவு, அறம், செம்மை, ஒளி, இன்பம், தூய்மை, அழகு, இன்பம், இனிமை, .... எனப் பலவற்றில் அடையாளப்படுத்தமுடியும்.ஆகவே, ”சிவன்” என்பது,
அன்புமயமானவன், அருள் மயமானவன், அறிவன், அறமயமானவன், செம்மையானவன், ஒளிமயமானவன், இன்பமயமானவன், புனிதன், தூயவன், அழகன், இனியவன், .... எனவெல்லாம் வரும்.எனவே இவைகள் யாவும் ”சிவன்” என்பதன் ”பொருள்கள்” ஆகும்.இறைவன் ஒருவனே,அவன் எல்லா வாழ்வுயிரிலும்  மேம் பட்டவன்,எங்கும் வியாபித்து உள்ளவன்.அவர் இரக்கமானவர், அன்பானவர்.அவரது கருணை, எல்லா பாதிக்கப்பட்ட ஆன்மா மீதும் அவரது கிருபையால் பொழிகிறது.அவர் தூய அன்பு மற்றும் இரக்கம் உடையவர்.எங்கும் நிலவியுள்ளார்.மனிதனின் தூய்மையிலும் ஆன்மிக செயல்களிலும் மகிழ்ப்பவன் அவன்.எனவே அப்படியான சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும்,இயல்பாகவே, பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள்."அன்பே சிவம்","தென்னாடுடைய  சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று சைவ மதம் எங்களுக்கு போதிக்கிறது.அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு
இல்லை.இரண்டும் ஒன்றே!இந்த முது மொழி,தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது.அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன.கணியன் பூங்குன்றனார் எனும் கவிஞன் புறநானூறு-192 இல் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று அறைகூவல் ஒன்றை விடுகிறான். நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும்,விழியும் ஒளியும் போல் மக்கள் எல்லாம் நம் உறவே என்றும்- புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான் அந்த கவிஞன்!

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."

மேலும் சைவ சித்தாந்தம் "ஒன்றே குலம்  ஒருவனே தேவன்"என்று
எம்மை வழி காட்டுகின்றது.எமது திருக்குறள்,மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்ப முடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) எம்மை அறிவுறுத்துகிறது.என்றாலும் அவர்,வாழ்வில் நிறைவு அடைதல் பற்றி ஒன்றும் கூறவில்லை.முப்பாலையும் கடந்தவன் தானாகவே தனது வாழ்வில் நிறைவு காண்பான் என்பதால் அதை சொல்லாமலே விட்டுஇருக்கலாம்? இப்படி நாலு வாழ்க்கை நிலையைத்தான் சைவம் எமக்கு போதிக்கிறது.இங்கு கருத்து அற்ற சடங்குகளுக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கும் இடம் இல்லை. "வையத்து வாழ்வாங்கு"வாழவேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது.."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று திரு மூலர் தனது திருமந்திரம் 2104 இல் கூறுகிறார்.படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஒரே தன்மையை உடையன என்றும் இவை அனைத்துக்கும் ஒருவனே இறைவன் என்றும் சமரசம் காணுகிறார்.இது சைவ சித்தாந்தத்தின் மையக் கருத்தாக அமைகின்றது.அது மட்டும் அல்ல, சைவ சித்தாந்த நெறியின் தாரக மந்திரமாகச் திருமந்திரம் 2962 "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது" என்று கூறுகிறது. அதாவது உலக இயக்கத்துக்கு பேரொளிப் பிழம்பான ஒரு தெய்வம் உண்டு என்பதை அறிந்தீர்.அந்த ஆண்டவன் உலகத்தை உயிர் போன்று இருந்து இயக்குவதையும் அறிந்தீர் என்கிறது.வேறு எந்த
சமயத்திலும் இப்படி பொதுவாக சமரசமாக கூறியது உண்டா?. இதனால் சைவம் எந்த வேறுபாடும் காட்டாமல் மக்களை இணைத்தது.இதை,இந்த தத்துவத்தை எந்த முற்போக்கு சிந்தனையாளனும்/பகுத்தறிவாளனும் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்வான்.மேலும் அன்பே கடவுள் என திருமந்திரம் போதிக்கிறது.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயின்(Lev Nikolayevich Tolstoy)  பிரபலமான வாசகம்.நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் சிரிப்பு தெரியும்.அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது.அந்த அன்பின் மகத்துவத்தினை திருமூலர் ’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார்  அன்பே சிவமாவதொரு மறிகிலார்’’ என்று எவரும் இலகுவாக விளங்கக் கூடியதாக கூறுகிறார்.அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்றும் அன்பும்,சிவமாகிய இறை நிலையம் பிரிக்கவே முடியாதது என்றும்,அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர். ஆகவே "அன்பே சிவம்",அதாவது அன்பு தான் கடவுள் என்பது, திருமூலர் விவரித்தவாறு,சைவ சமயத்தின் மையக்கருவாக உள்ளது.

மறுபுறம்,இந்து சமயம், ஆரியர்களின் இந்தியா வருகையுடன் ஆரம்பிக்கப் பட்டது.அங்கு முக்கிய கடவுள்கள்,உதாரணமாக இந்திரன் என்ற முதன்மைக் கடவுளும் ,மற்றும் வருணன்,அக்கினி,வாயு, மித்திரன், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் போன்ற மற்ற கடவுள்களும் ஆணாக இருப்பது குறிப்பிடத் தக்கது.மேலும் இவர்களுடன் வேள்வியை அடிப்படையாகக் கொண்ட வழிபாடும், பிறப்பு அடிப்படையில் நால்வருண அடிப்படையில் ஏற்றத் தாழ்வுள்ள சமுதாயம் கொண்ட அமைப்புமுறையம் முன்னுக்கு வந்தது. வேள்விகளில் பசு, குதிரைகளைப் பலியிட்டு அவற்றையே உணவாக உண்டனர்.சோமபானம் குடித்தனர்.கி மு 1500 ஆண்டு அளவில் நான்கு வருண முறைகளில் வெற்றியாளர்களான ஆரியர் அல்லது பிராமணர் பிறப்பால் உயர்வானவராகவும்,தோற்கடிக்கப் பட்ட  திராவிடர்,  சூத்திர ராக அடிமைகளாகவும் ஆக்கப்பட்டனர். ஆகவே,இந்த ஆரிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் அதுவும் ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் கட்டுப் படுத்தப் பட்டது. இதனால்,பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி வளர்ந்தது.ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று இவர்களால் அழைக்கப்பட்டார்கள். உதாரணமாக ‘தாசர்’ என்ற சொல்லுக்கு ‘ஊழியன் அல்லது அடிமை’ என்று அர்த்தமாகும்.மனு ஸ்மிருதியில் (viii, 413) பிராமணர்களுக்கு சேவை (தாசியா) புரிவதற்காக சூத்திரர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. எனினும் தொடக்கத்தில் அவர்களின் சமூக படிநிலை வேலையின் அடிப்படையில் அமைந்தது போல் தெரிகிறது.ஆகவே வேலை மாறும் போது அவர்களின் சமூக படிநிலையும் மாறக் கூடியன வாக இருந்தன.என்றாலும் காலப் போக்கில்,அவை பிறப்புடன் இணைக்கப் பட்டதால்,அவை நிரந்தரம் ஆகிவிட்டன.இந்த ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கால் நடைகளுடன் கைபர் போலன் கணவாய் வழியாக குதிரைகளில் கைகளில் இரும்பு ஆயுதங்க ளுடன் இந்தியாவிற்குள் வந்தவர்கள்.அப்போது இங்கு பெரிய நாகரிகம் ஒன்று இருந்தது.அது தான் திராவிடர்களின் நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் ஆகும்.அவர்களை தமது பலத்தால் வென்ற ஆரியர்கள், கி  மு 1500–1000  அளவில், எங்களுக்கு செல்வத்தைத் தா, எங்கள் விரோதிகளிடமிருந்து எம்மை காப்பாற்று போன்ற கெஞ்சும் பாடல்களும்,மேலும் சடங்குகளைப் பற்றியும்,அப்போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்களும்  மற்றும் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்தும்  அவர்களின் புரோகிதர்கள் பாடினார்கள். இவைதாம் ரிக் வேதம்,யசுர் வேதம், சாம வேதம்,அதர்வண வேதம் போன்றவை ஆகும்.அதன் பின் அவர்கள் கி மு 700–500  ஆண்டளவில் உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) தொகுக்கப் பட்டன.இந்த ஆரியர்கள் தம்முடன் ஒரு புதிய மொழியையும் ,தந்தை வழி சமுதாய அமைப்பையும் கொண்டு வந்தனர்.இதனால் ஆண் குழந்தை பிறப்பு ஒரு தனி வரவேற்பையும் பெற்றது.இவர்களின் சமயம் மற்றும் வர்ணாசிரம த்தில் இருந்து ஒரு புதிய சமூக ஒழுங்கு உருவாக்கப் பட்டது.இவை அனைத்தும் அடிப்படையாக அமைத்தே இந்து சமயம் முதலில் ஆரியர்களால் கட் டமைக்கப் பட்டன.எப்படியாயினும் பின்னர் சில திராவிடர் நம்பிக்கையையும் உள் வாங்கி,திராவிட நாட் டார் தெய்வங்களையும் ஆரிய மயமாக்கி இந்து சமயம் இன்றைய நிலையை அடைந்தது எனலாம்? 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]    

பகுதி:03  தொடரும்.

1 comments:

  1. Every writer has simply vomited his own idea and neglected the truth.

    ReplyDelete