சொர்க்கமா? நரகமா? நீ போகுமிடம்....?ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக உலகில் தோன்றிய மதங்களில் பெரும்பாலானவை, பல வழிகாட்டிகளையும், இறை நாமங்களையும் வேறு படுத்திக் காட்டியிருந்தாலும், ஒரு விடயத்தில் மட்டும் ஒத்துப்போய் இருக்கின்றன. அதுதான் சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும்.

மனிதர்கள் இறந்ததும் அவரவர் செய்த நல்ல, கெட்ட   விடயங்கள் எல்லாவற்றையும் துல்லியமான கணக்கில் வைத்து, அதை அலசி ஆராய்ந்து, மதிப்பிட்டு, இறைவனால் நல்லவர்கள் சொர்க்க உலகத்திற்கும், கெட்டவர்கள்  நரக உலகத்திற்கும் அனுப்பப்படுவார்கள் என்று இவர்கள் அடித்துக் கூறுகின்றார்கள். சொர்க்க உலகத்தில் உயர்த்தரமான சௌகரிய வாழ்க்கை கிட்டும் என்றும், நரக உலகத்தில் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் பறை சாற்றிக்கொள்வார்கள்.

இத்தனைக்கும், இதுவரை காலமும் எந்தவொரு நபராவது இந்த உலகிலிருந்து அந்த எந்த ஒரு உலகத்துக்குப் போனதாகவோ, போய்க் கண்டு திரும்பி வந்து சொல்லியதாகவோ, அல்லது ஒரு சில டிஜிட்டல் புகைப்படங்கள்தானும் போனவர்களாலோ, அல்லது கடவுள்களாலோ மந்திர வித்தைகள் காட்டும் கலியுக சுவாமிகளாலேயோ  எடுத்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது என்று எதுவும் இல்லவே இல்லை. ஆனால், காணாத ஒன்று இருப்பதாக நம்ப வைக்கப்பட்டு, அந்த நம்பிக்கையில் ஊறி, அந்த சொர்க்காபுரிக்குப் போவதற்காகவும், நரக வாழ்வில் இருந்து தப்புவதற்காகவும் மனிதன் அன்றாடம் செய்யும் பிரார்த்தனைகளும், மத வாத, தீவிர வாத செயல்களும் சொல்லில் அடங்கா!

நாம் இந்த உலகிலே வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதுதான் உண்மை. இந்த 'வாழ்வது' என்பதும் ஒரு மாயப் பிரம்மையோ தெரியாது. நாம் இறந்த பின்னர் 'நாம்' மீண்டும் 'நாம்' இல்லை என்பது வெட்ட  வெளிச்சம். நாம் இறந்தபின்னர், நாம் என்னவாக மாறுகின்றோமோ, அல்லது திரும்பவும் பிறக்கின்றோமோ, அல்லது ஒன்றுமே இல்லாமல் 'இன்மை' யாய்ப் போய்விடுகின்றோமோ ஒன்றுமே நமக்குத் தெரியாது. அப்படி இருக்க, ஏன்தான் இங்கு பலர் அந்தத் தெரியாத, அறியாத, உணராத, நிறுவப்படாத, பிரஜோசனமில்லாத, கண்ணுக்கு புலப்படாத, நம்ப முடியாத, இலாபம் அற்ற, அந்நியமான, உண்மை அற்ற அந்த ஏதோ ஓர்  'இன்மை' யோ அல்லது ஓர்  'எருமை' யோ கிடைக்க வேண்டும் என்று காலம் முழுவதும், அல்லும் பகலும் மத வழிபாடுகள், மத போதனைகள், மத மாற்றங்கள், மதக் கொலைகள் என்று நடத்திக் கொண்டு திரிகின்றார்கள் என்று ஒன்றுமே புரிவதில்லை.

மனிதன் தன்நலம் காக்கும் சுயநல புத்தி கொண்டவன். தன் சொந்த இலாபத்திற்காக ஊரை வெறுப்பான்; உறவுகளைத் துறப்பான் பிள்ளைகளை ஒதுக்குவான்; மனைவியையே  தள்ளி வைப்பான்; தேவையானால் கொலையும் செய்யத் தயங்க மாடடான். இப்படியான ஒருவன், அது எப்படி, இறந்தபின் வருவதாகச் சொல்லப்படும் அந்த ஒன்றுக்காக இவ்வளவுக்கு ஆசைப்படுகின்றான்? அவனுக்கே அறியாத அந்த ஏதோ 'ஒன்று' நல்ல சொர்க்க வாழ்வு வாழவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு ஜீவ (அல்லது ஜட) காருண்யம் உள்ளவனா அவன்? அன்னை தெரேஸாவே அந்த அளவுக்கு எண்ணியதில்லையே!

நபீபியா நாட்டில் உள்ள கோஎஸ் கிராமத்து ஏழை காரி எனப்படுவர் நலமே அங்கு வாழவேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அதில் ஓர் அர்த்தம் இருக்கும்; ஆனால், என்னவோ, ஏதோ, எங்கோவோ, எப்போவோ, உள்ளதோ, அல்லதோ என்ற ஒன்று, நல்ல சொர்க்க வாழ்வு வாழவேண்டும் என்று நினைத்து வாழ் நாள் முழுவதும் அலைந்து திரிவது என்ன அடிப்படையில் மனிதனுக்குள் ஊறிப்போய்விட்டது என்பது ஒன்றுமே புரிவதில்லை.

இந்த மனநிலையில் உள்ளோர், 'அதை' அடைவதற்காக எவ்வளவோ பிரார்த்தனைகளும், பூசைகளும் செய்கின்றார்கள்; வீடு வீடாகச் சென்று மத போதனை செய்கின்றார்கள்; மதம் மாற்றம் செய்கின்றார்கள்.  அதி உயர் சொர்க்கமாக பல கன்னிப் பெண்கள், ஆண்களுடன், வெறி, குடிகளுடன்கூடிய  காமக்களியாட்ட உல்லாச சொர்க்கம் உடனடியே கிடைக்கும் என்று புற மதத்தினரைக் கொல்கின்றார்கள். இந்த நடவடிக்கை எல்லாவற்றையும் அறிவுபூர்வமாக ஆராய்ந்தால் சுத்த முட்டாள்தனமாகத்  தோன்றவில்லையா?

சரி அப்படி ஒன்று 'அங்கு' இருந்தால், அது இருந்துவிட்டுப் போகட்டுமே! அதை பற்றி நாம் ஏன் இங்கு இருந்து அங்கலாய்க்க வேண்டும்? இங்குள்ள எமக்கு அவர்களையோ, அவர்களுக்கு எங்களையோ தெரியப்போவது இல்லையே? அப்படி ஒன்றைப் பற்றிக்   கவலைப்படுவதற்கு நாம் என்ன அவ்வளவுக்கு நல்லவர்களா? நாம் செய்யும் பாவங்களுக்குத் தண்டனை அங்கு நமக்கே தெரியாத வேறு ஒன்றுக்குத்தான் கிடைக்கும் என்று இருந்தால், சாதாரணமாகச் சிந்திக்கும் ஒரு மனிதன் இங்கு தனக்கு கிடைக்கக்கூடிய சுகங்களை அடைவதற்குப் பல பாவத் செயல்களை அல்லவா செய்து விட்டுப் போய்விடுவான்?

ஆக இரண்டு உலகங்கள் மட்டும்தான் உள்ளனவா?  பல தரப்படட மட்டங்களில் நல்ல, கெட்ட செயல்களில் ஈடுபடடவர்களுக்கு தகுதிக்கேற்ற வெவ்வேறு லெவல் சொர்க்க, நரக உலகங்கள் இல்லையா?

இந்தச் சொர்க்க  ஆசை காட்டலும், நரக பயமுறுத்தலும் மனிதனை தெய்வ பயத்தைக் காட்டி நல்வழிப் பாதையில் கொண்டு செல்வதற்குத்தான் மனிதனால் உருவாக்கப்பட்டது. அந்த நோக்கம் கடந்த காலங்களில் மிக வெற்றிகரமாக வேலை செய்தது என்பது உண்மை. ஆனால், தற்போது சட்டம் , ஒழுங்கு என்பன முறைப்படி பொலிஸ் பிரிவினரால் பாதுகாக்காப்படுவதனால் இப்படியான பூச்சாண்டிகள் எல்லாம் மலை ஏற்றப்பட வேண்டியவையே!

கடவுள் இவ்வாழ்வில் கொடுத்ததாகச் சொல்லப்படும் சௌகரியங்களால் திருப்பதி அடையாமல், போதாது என்று மேலும் கேட்பது என்பதே பேராசை! கடவுளின் செயலில் குற்றம் காணும் துணிச்சல்! இறந்ததன் பின்னரும் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கடவுளை நச்சரித்துக்கொண்டு இருப்பது, ஆசைப்படுவது என்பன சுத்த அயோக்கியத்தனம்; வெறுக்கத்தக்க, அருவருக்கத்தக்க மிகப் பெரும், பேராசை

சொர்க்கமோ, நரகமோ வேறு ஒரு தூரத்திலும் இல்லை; இங்கேதான் இருக்கின்றது! அதுவும் எங்களுக்கு உள்ளேதான் இருக்கின்றது!  இவற்றை எந்தக் கடவுளாலேயும் எங்களுக்குத் தரமுடியாது!  நாமேதான் எங்களுக்குள் இருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

வாழ்க்கையை சொர்க்கம் ஆக்குவதும், நரகம் ஆக்குவது நமது கையிலேதான் இருக்கின்றது!
ஆக்கம்:செல்வதுரை,சந்திரகாசன்.

8 comments:

 1. சொர்க்கமோ, நரகமோ வேறு ஒரு தூரத்திலும் இல்லை; இங்கேதான் இருக்கின்றது! அதுவும் எங்களுக்கு உள்ளேதான் இருக்கின்றது! இவற்றை எந்தக் கடவுளாலேயும் எங்களுக்குத் தரமுடியாது! நாமேதான் எங்களுக்குள் இருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 2. How dare you talk against the God's writing! Have you ever read our Holy Books?
  You will surely, definitely be thrown in to the huge burning fire there!

  ReplyDelete
  Replies
  1. you don't know who write the holy boooks!!!!
   ”கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயே!” அமெரிக்க உளவியல் சங்க ஆய்வு முடிவு!
   வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. அச்சங்கத்தின் ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவ முறையில் பலவாறாக பயன்படுத்தப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்ற நிலை உள்ளது.
   ஆய்வும் முடிவும் கடவுள் நம்பிக்கையாளர்கள் மன நோய் வயப்பட்டவர்கள்
   கடவுள் அல்லது மேலான சக்தி என்று ஒன்று இருப்பதாக திடமாக, ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்கள் பொது அறிவு சார்ந்த நிலைகளிலும் தாங்கள் எடுக்கக் கூடிய முடிவுகளில் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, மன நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மத நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள் மிகுந்த கவலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், உணர்ச்சிவயப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களாகவும், இயல்புக்கு மாறாக கற்பனை உலகில் உலவுபவர்களாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். 5 ஆண்டு கால ஆய்வின் முடிவாக சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
   கடவுள் நம்பிக்கையாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் உடல்நலக் குறைவு போன்ற நேரடி பாதிப்புகளுக்கு காரணமாக கடவுள் கொடுக்கும் தண்டனை என்று கருதுகிறார்கள். மத நம்பிக்கையில் உள்ள இரண்டுவிதமான நடவடிக்கைகள் முற்றிலும் உண்மை நிலைக்கு தொடர்பற்று முரணாகவே இருந்து வருகின்றன.
   பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரியூஸ்
   உளவியல் பேராசிரியர் டாக்டர் லில்லியன் ஆண்ட் ரியூஸ் கூறுகையில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிர்காக்கும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகளால் உயிரிழக்கிறார்கள். அந்தக் கருத்தை மறுத்து, கடவுள் அவர்களைக் காப்பார் என்று கடைசிவரை நம்புகிறார்கள். ஆகவே, சிகிச்சை எடுத்துக்கொள்வதில் முடிவை எடுக்க தகுதி அற்றவர்களாக இருக்கிறார்கள்.
   குருதிக்கொடை ஏற்காத மனக்கோளாறு
   ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் எந்த சூழலிலும் ஏற்க மாட்டார்கள். அதேபோல் அடுத்தவர் ரத்தத்தைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறப்பதேமேல் என்பார்கள். அவ்வப்போது பலரும் ஆவிகளைக் கண்டதாகக் கூறிக் கொள்வார்கள். உண்மைக்கு மாறானவைகளாக உள்ள இவ்வாறான நிலையை மனக் கோளாறுகளின் அடையாளமாகவே பார்க்க முடியும்.

   Delete
 3. சிந்திக்கும் ஆற்றல் அற்றுப் போனவர்களுக்கு கூறப்படும் அறிவுபூர்வமான சிந்தனைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே வீணாகிப் போகும் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரி.சிந்திக்கும் ஆற்றல் இல்லாத படியால்தான் கண்ட நீண்ட கள்ளச் சாமிமார் சொல்வதனை எல்லாம் நம்பி ஏமாறுகிறார்கள்.எல்லாவற்றையும் இழக்கிறார்கள்.கடைசியில் விதியில் பாரத்தினைப் போட்டு [அப்போது கூட புத்தி தெளியவில்லை] மூட நம்பிக்கையினை தப்ப வைக்கிறார்கள்.

   Delete
 4. சந்திரகாசன்Monday, January 23, 2017

  எத்தனை பெரியார்கள் சரி, தொடர்ந்து எத்தனை வீரமணிகள் சரி வந்து எப்படித்தான் சொன்னாலும் உந்த உயர் முத்தி நிலையில் உள்ளவர்களுக்கு மண்டைக்குள் ஏறவே ஏறாது.

  அந்தக் கடவுளின் அவதாரங்கள், குமாரர்கள், சுவாமிகள் என்று எல்லோரும் தங்களுக்கே வரும் நோய், நொடி, கஷ்ட, நஷ்டங்களில் இருந்து தங்களைக் காப்பாற்ற முடியாது இறுதியில் அழுந்தி மடிக்கின்றார்களே, இப்படியானவர்களால் எப்படி இந்தக் கூட்டத்தினரைக் காப்பாற்றமுடியும்?

  ReplyDelete
 5. Naan kadavulaiye kumpuddathu kidaiyaathu; aanaalun naan nalla vasathuyodu santhosamaai valkinrene!

  ReplyDelete
  Replies
  1. அதாவது நீங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறியர்கள்.

   Delete