கனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]

           
                                         
                                                     09.05.2020

அன்புள்ள தங்கைச்சிக்கு,

நாம் நலம், அதுபோல் உனது சுகமும் ஆகுக. உனது கடிதம் கிடைத்தது. யாவையும் அறிந்தேன்.
தங்கைச்சி, அண்மையில் லண்டனில் இடம்பெற்ற குழந்தைகள் கொலைச்சம்பவம் தொடர்பாக உன் காதில் வீழ்ந்த , பல்வேறு கதைகளை கடிதத்தில் குறிப்பிட்டு ,உனது சந்தேகத்தினை எழுப்பியிருந்தமை எனக்குள் கவலையினை தோற்றுவித்ததால் உனக்கு விபரம் தர முயற்சிக்கிறேன்.

தங்கைச்சி, எமது சமுதாயம் செய்யும் செயல்கள் எல்லாம் வித்தியாசமானவை.சில நன்மை பயக்கக்கூடியது என்றாலும் சிலவற்றை ஜீரணிக்க முடியாதுள்ளது.
தங்கைச்சி, 20 வருடத்திற்கு முன் கனடாவில் ஒரு 17 வயது தமிழ் பெண் காணாமல் போய்விட்டாள் என செய்தியறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அவளை காவல் துறை தேடும் பணியில் ஈடுபட்ட 6  மாத காலத்திலும் எங்கள் தமிழ் மக்கள் உருவாக்கிய கதைகள், இங்கே எழுத்தில் வடிக்கமுடியாத கொடூரமானவை. அதில் உச்சம் எதுவெனில் , அவளின் காதலை பொறுக்கமுடியாத பெற்றோர் அவளை கண்டதுண்டமாக வெட்டி சாக்கில் போட்டு ,அதனைப் போலீசார் சாக்குடன் கண்டு பிடித்தது' எனும் பொய்யான வதந்தியே.. இவற்றையெல்லாம் சம்பந்தப்படட பெற்றோர்கள் காதில் விழுந்து  ,அவர்கள் அடைந்த  வேதனை சொல்லில் வடிக்க முடியாதது என்பது எமது சமுதாயம் அறியாத விடயமல்ல.

இன்னும் கேவலமான விடயம் என்னவெனில் , எங்கள் மகாசனத்திற்கு ஆங்கில மொழி பேசத்தெரியாவிட்டாலும் , இந்த பொறுக்கிய ஆங்கில சொற்களை வைத்து, வேலை செய்யும் இடங்களில் வேறு நாட்டினரோடு,   இவர்களால் இந்த உடைக்கப்பட்டஆங்கிலம் பேசுவது என்பது மிகவும் சந்தோசமான விடயம். அதிலும் இப்படியான சங்கதி கிடைத்துவிட்டால் யானைக்குக் கரும்பு கிடைத்தது போல் மகிழ்ச்சியுடன் சொண்டு உரசிக்கொள்வார்கள். அவர்களும் நாடகம் போட இவர்களும் உற்சாகத்துடன் விளக்கம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான  புதினமாக  விளக்கம் வேறு நாட்டினருக்கு கொடுத்து மகிழ்வார்கள். தங்கள் பெரும் சாதனையை  ஆங்கிலத்தில் நிறைவேற்றிய பெருமை எங்கள் மகா ஜனங்களுக்கு.

இது நடந்து சில மாதங்களில் , ஒரு 11 வயது சீனப்பெண் காணாமல் போயிருந்த வேளையில், கிட்தத்தட்ட  75 சீன நாட்டினர் வேலை செய்யும் அந்த தொழிற்சாலையில் ஒரு சீனாக்காரனிடமிருந்து கூட எந்த ஒரு தகவலையும் பெற முடியவில்லை. யாரைக் கேட்டாலும் ' தனக்குத் தெரியாது' என்றே பதிலளித்தார்கள்.

இதேபோலவே , எம்முடன் வேலைசெய்த சீனத்து கணவன்,மனைவியர் இருவரையும் எதோ ஒரு சம்பவத்தில் அவர்கள் வீட்டில் வைத்து போலீஸ் அவர்களை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்ததோடு, ஆங்கிலப் பத்திரிகையில் அவர்களின் படமிட்டு செய்தி வந்திருந்தது. இந்த நிலையிலும் கூட அங்கு வேலை செய்யும் சீனர்  அப்படம் அவர்களுடையது இல்லை என மறுத்ததுடன் , அவர்களைப்பற்றி எம்மவர் அறிந்தது பொய் என்றும் கூறினர்.

இதேபோலவே இந்தியரும் அங்கு தங்கள் நாட்டினர் சம்பந்தமான புதினங்களை என்றால் அதை மற்ற நாட்டினருடன் பேசுவது தங்களுக்கு அவமானமாக கருத்துபவர்.

தங்கைச்சிஎங்கள் சமுதாயத்திற்கும் ,ஏனையவர்களுக்கும் இடையில் உள்ள பெரும் வித்தியாசம் என்னவென்று புரிந்திருப்பாய் என எண்ணுகிறேன்.

வேறு நாட்டினரின் உணவையும், உடையையும், மொழியையும்  பின்பற்ற எண்ணும் எம்மவர் இப்படியான நற்பழக்கங்களை கடைப்பிடிக்க ஏனோ முடியாமல் இருக்கிறார்கள்.

இன்று சமூகவலைத் தளங்கள் ஒவ்வொருவர் கையிலும் இருப்பது வதந்திகளைப் பரப்புவதற்கு இன்னும் எங்கள் சமுதாயத்திற்கு மேலும் வசதியாகிவிட்டது. அதுவும் தொடர்கிறது.

தங்கைச்சி, எமக்கேன் அடுத்தவர்கள் வீட்டுப் பிரச்சனைகளை. பிரச்சனைகள் இல்லாத  வாழ்வில்லை. இன்று அவர்களுக்கு,நாளை எமக்கும் வேறு வடிவில் பிரச்சனைகள்  நடக்கலாம். நாம் கவனமாகவும் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடாதவர்களாகவும் வாழ்ந்தால்  போதுமானது.

தங்கைச்சி, ஒரு விடையத்தினை உனக்கு எனது கடிதத்தில் எழுதியிருந்தபோது , அதை யார் சொன்னதாக என்னிடம் உனது கடிதத்தில் கேட்டிருந்தாய்.  ஆனால் என் விடயத்திற்கு  நீ விளக்கம்  தரவில்லை. இப்படி  அநேக வீடுகளில் நடக்கிறது.  யார் கூறியது என்ற கேள்வி மூலம் மூன்றாவது நபரை எங்களுக்குள் இழுக்கும் பழக்கத்தினை முதலில் கைவிட்டுவிடு. இதை உன் கணவனாக இருக்கட்டும் ,பிள்ளைகளாக இருக்கட்டும், கேள்வியும் பதிலும் சம்பந்தப்படட இருவருள்ளும் முடித்துவிடப் பழகிக்கொள். அது மேலும் புதிய பிரச்சனைகளுக்கு வழி வகுக்காது.

இதேபோலவே சில குடும்பங்களில், கணவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாது மனைவியே கேள்வியில் முந்திக்கொண்டு பதில் சொல்லாது தவிர்ப்பது , கணவன் மனதில் எவ்வளவு கஷ்டத்தினைக் கொடுக்கும் என்று சிந்திப்பதில்லை. நாளடைவில் இவை சேர்ந்து ஏற்படும் விரக்தியிலான சண்டைகளுக்கு ,சாதாரணமான சிறு ,சிறு விடயங்கள்  காரணமாக இருந்து விடுகின்றன.

மேலும் ,சில வீடுகளில் மனைவி எதைக் கூற ஆரம்பித்தாலும் , shutup [ வாயை மூடு] என ஆங்கிலத்தில் கூறினால் நாகரீகம் எனக் கருதும் கணவன், நாளடைவில் அதுவே குடும்பத்தில் பெரும் பிளவுகளுக்கு காரணமாக அமையும் எனச் சிந்திப்பதில்லை.

 மனித இனத்துக்கு மட்டும் கிடைத்த அறிய பொக்கிஷம் மொழி. அதை இனிமையாக பேசுவத்தில் நன்மைகளே அல்லாது தீமைகளில்லை.எனவே வாய் திறந்து பேசுவோம்.இனிமையாகப் பேசுவோம்.

தங்கைச்சி, சுந்தரனை ஏன் என் முகநூலிலிருந்து நீக்கியதாக வினவியிருந்தாய்.நாம் இந்த உலகில் கவலைகள் சூழ்ந்தாலும் மகிழ்சியுடன் காலத்தினைக் கொண்டு செல்லவே முயற்சிக்கிறோம். எல்லோருக்கும் பிரச்சனைகள் உண்டு. அதனை நேரில் பேசி தீர்ப்பதே மனித நாகரிகம். அது தெரியாது அநாகரிகமான முறையில் கருத்துக்கள் பதிவோரை ஒரு சுந்தரனை மட்டும் அல்ல, பல சுந்தரர்களை இதுவரையில் நான் நீக்கியிருக்கிறேன். 

உனது தேவைகளையும், சுகமான செய்திகளும் அடுத்த உனது கடிதத்தில் எதிர்பார்க்கிறேன்.

உனது கணவர்,பிள்ளைகள்  சுகம் பெற வாழ்த்திக்கொண்டு விடைபெறுகிறேன். மீதி பின்னர்....

இப்படிக்கு
அன்பின் அண்ணன்

செ.மனுவேந்தன்.

📧📧📧📧📧📧📧📧📧

குறிப்பு:கடிதத்தில், சில நற்குறிப்புகளை வெளியிடுவதற்காக கற்பனைப் பாத்திரங்களும், கற்பனைச் சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளதேயன்றி ,எவையும் எவரையும் சார்ந்ததல்ல என்பதனை உறுதிப்படுத்துகிறேன்- செ .ம 
                                                       

6 comments:

  1. Pathmanathan VinySaturday, May 09, 2020


    தங்கைக்கு அன்பான அறிவுரைகள்.சமூகத்திற்கான சிறப்பான அறிவுரைகளாக பார்க்கின்றேன் அண்ணா.
    இன்று தனிப்பட்டவர்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சிகளை
    முக நூல் போன்ற சமூக
    வலையத்தளங்களில்
    மனம் போன போக்கில்
    முன்வைக்கும் நபர்களை
    இனம் கண்டு அவர்களை
    நீக்கிவிடுதல் வரவேற்கக்கூடியதொன்று.(களை எடுத்தல்)
    மற்றும் ஒன்றை ஒன்பதாக்கி கதை பேசுவதிலும் நம்மவர்களுக்கு( தமிழர்களுக்கு)நிகர் தமிழர்களே தான்.
    தனக்கு தனக்கென சில
    விடயங்கள் நடைபெறும்வரை
    அடுத்த வீட்டு கதைகளை
    மனம் போன போக்கில்
    பேசுவதும் ,கதை கட்டி விடுவதும் இயல்பு தானே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி உங்கள் கருத்துக்களுக்கு.

      Delete
  2. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிSaturday, May 09, 2020


    யார் சொன்னார் என்ற கேள்வியே மிகவும் தவறு. இந்த கேள்வியை யாராவது கேட்டால், கேட்பவர் தாரளமாக முடிவு எடுக்கலா கேட்கப் பட்ட விடயம் உண்மை என்று. எந்த ரூபத்திலும் மூன்றாவது நபர் குடும்பத்தில் நுழையவே கூடாது. சுந்தரை முகநூலில் இருந்து விலகியது அருமை. நானும் விலக்கி இருக்கிறேன். 🙄 கருத்துக்கள் அருமை. ஆனால் ஒன்று இப்பொழுது எல்லாம் அண்ணாமாருக்கு தங்கைகள் அக்காவாக அம்மாவாக சில சமயம் அம்மம்மாவாகவும் புத்திமதிகள் சொல்லுவதே பரவலாக காணப்படுகிறது. இது எனது அனுபவம். 🙏

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி உங்கள் கருத்துக்களுக்கு. நீங்கள் கூறுவதுபோல் சகோதரிகள் புத்தி கூறுவது உண்மையே. முன்னர் பெண்கள் பேச தயங்கினார்கள்.அனால் இன்று அப்படியல்ல. அதனால் நானும் மகிழ்ந்திருக்கிறேன்.

      Delete
  3. Atputhan SanthiyaSaturday, May 09, 2020


    உங்க சமூகநீதி பற்றிய பார்வை ஒவோன்றும் சூப்பர் ப்ரோ...
    ஒரு நல்ல செயலை தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்,, கெட்ட செயலை கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரா. உமது தத்துவமே தனி

      Delete