வரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா? [பகுதி 04][Does history repeat itself? Do we follow the lessons of history?]
கொரோனா வைரஸ் /  Coronavirus2003, சார்ஸ் தொற்றுநோய் தொடக்கத்தில் அது பரவும் வீரியம்  R0 = 2.75 இருந்து, ஒன்று இரண்டு மாதத்தின் பின், அது ஒன்றுக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தது, காரணம் திறம்பட தனிமைப் படுத்துதல் ஆகும். எனவே இந்த முறையை நேரத்துடன் கையாண்டு இருந்தால், சுகாதார அமைப்பில் இன்று நிலவும் உச்ச தேவையை தடுத்து, நோய்த்தொற்று வீதத்தை ஒரு சமச்சீராக [ஒரு தட்டையாக] மாற்றி இருக்கலாம் [prevent peak demands on their health care systems and flatten the pandemic curve], அதாவது சடுதியாக மிக உயர்வாக அதிகரித்து பல இடைஞ்சல்களுக்கு முகம் கொடுக்காமல், ஒரு சீராக அதை கட்டுப்படுத்தி இருக்கலாம். உதாரணமாக, சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றான குவாங்சௌ அல்லது கன்ரன் (Guangzhou also known as Canton), உள்ளூர் நோய்த்தொற்று காணப்பட்டு ஒரு கிழைமைக்குள் கடும் தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் அங்கு இறுக்கமாக கையாளப் பட்டது, ஆனால் முதல் முதல் கோவிட் 19 ஆரம்பித்த ஊகான் (Wuhan] நகரத்தில் அதிகமாக ஆறு கிழமைக்கு பிறகே இவ்வாறான நடவடிக்கைகள் கையாளப்பட்டன. ஆரம்பத்திலேயே தலையீடு செய்யப்பட்ட [early intervention] குவாங்சௌவில் குறைந்த தொற்றுநோய் அளவுகளும் மற்றும் உச்சமும் [“lower epidemic sizes and peaks”], ஊகானை விட இருந்ததை ஆய்வாளர்கள் இன்று கண்டுள்ளார்கள். இவை எல்லாம் எடுத்து காட்டுவது தனிமை படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் இன்றியமையாதது என்பதே ஆகும். மேலும் கோவிட் 19, குறைந்த இறப்பு விகிதத்தை [lower fatality rate] கொண்டு இருந்தாலும், அது பரவும் ஆற்றல் கூடுதலாக இருப்பதாலும், தொற்றின் ஆரம்ப கட்டத்தில்  நோய்த் தொற்றுகள் பெரும்பாலும் லேசானவையாகவும், சிறு வரையறைக்குள்ளும் அல்லது அறிகுறிகள் இல்லாமலும் இருப்பதாலும் [often experience mild, limited or no symptoms and hence go unrecognized] பெரும் தொகையான மக்கள் இதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள், எனவே இறப்பின் தொகை, உதாரணமாக சார்ஸ் [Severe acute respiratory syndrome] மற்றும் மெர்ஸ் [Middle East respiratory syndrome], இவை இரண்டினதும் சேர்த்து இறப்பு வீதம் 34 % இருந்த போதிலும், அவ்வற்றை விட இது கூடுதலாக இருக்கிறது .

உலகம் தொற்றுநோயின் விளிம்பில் இருக்கும் பொழுது, அது கூடுதலாக முதலில் பாதிப்பது பலவீனமான சுகாதார கட்டமைப்பை கொண்ட ஏழ்மையான நாடுகளைத்தான் [the poorest countries with the weakest health systems]. உதாரணமாக, கோவிட் 19 பரவுதலை வெற்றிகரமாக குறைக்க அல்லது கட்டுப்படுத்த, மேற்கு ஆப்பிரிக்காவில் [West Africa] இருந்து எமது முன்னைய அனுபவங்கள் மூலம் நாம் எவை எவையை முதலில் பின்பற்ற வேண்டும் என அறிந்து கொண்டது:

1]  கை கழுவுதல், மற்றும் உங்கள்  கண்கள், மூக்குகள், மற்றும் வாய் தொடுவதை இயன்றவரை தவிர்த்தல். ஆனால் சுத்தமான நீர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு [clean water and antibacterial soap] முதலியன சராசரி மனிதனுக்கு அரிதாக கிடைக்கும் நாடுகளில், கை கழுவுதலை வைத்தியசாலை, பாடசாலை, மற்றும் பொது இடங்களில் நிர்வகிப்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயம். மேலும் பொது சுகாதார வசதியின் தரம் இப்படியான நாடுகளில் அதிகமாக ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக இருக்கும். இப்போதுள்ள மருத்துவ மனைகளில், வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்க,  திடீரென நோயாளிகளின் வருகையும் அதிகரித்து, கூட்டம் அதிகரிக்கலாம். போதிய அளவுக்கு முகக்கவச உறைகள், கையுறைகள், கவுன்கள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா என்பதும் ஒரு பிரச்சனையாக மாறலாம்.

2] சுகாதார ஊழியர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் சரியானதும் போதுமானதுமான வைரஸ் பற்றிய அறிவு இருக்கவேண்டும். குறைவான நிதியை கொண்டதும் மற்றும் பயனற்ற சுகாதார வழிமுறைகளும் [Underfunded and dysfunctional health systems] தொற்று நோயை கட்டுப்படுத்தாது. இது பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மலின்போது வெளியே வரும் நீர்த்துளிகளுடன், எதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களுக்கு தொற்றுகிறது. எனவே மற்றவர்களிடம் இருந்து சற்று தூரமாக இருப்பதை உறுதி செய்வதுடன், இயன்ற அளவு உங்களை தனிமைப்படுத்த வேண்டும். .

3] மருத்துவத்தில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. மனிதர்களுக்கு உணர்ச்சிகளும் கருத்துகளும் உண்டு. எனவே, ஒரு தொற்றுநோய் தாக்கும் பொழுது, நாம் அங்கு சமூக நம்பிக்கை [community trust] ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும். அப்பதான் பொது சுகாதார திட்டம் [public health program] ஒன்று அங்கு வெற்றி பெறும். அல்லாவிட்டால், தவறான தகவல் மற்றும் வதந்திகள் தாறுமாறாக உலாவும் [misinformation and rumours ran wild]. எனவே எமது நோக்கம், மக்களை நம்பவைப்பதாகவும் மற்றும் அவர்களுக்கான அவசர தேவைகளை அல்லது முக்கிய தேவைகளை வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அரசியலில் இருந்து சுயநலன்கள் வரை, இரகசியம் மற்றும் மறைத்தல் [secrecy and concealment]  போன்றவை மேலும் தொற்றுநோய் பரவலுக்கு வழிசமைத்ததை வரலாற்றில்  கண்டுள்ளோம். உதாரணமாக 1892 இல் ஜெர்மனியின் ஆம்பர்க் [Hamburg] துறைமுகத்தில் இருந்து, காலரா தொற்றை [cholera pandemic] மறைத்து வழக்கம் போல் வணிக கப்பல், ஆனால் நோயினால் பீடிக்கப்பட்ட குடிபெயர்ந்தவர்களுடன் [immigrants] அனுப்பப்பட்டது. இது நோயை மேலும் பரப்பவே வழியமைத்தது. 2003 இல் சீனா கிட்ட தட்ட ஆறு மாதம் சார்ஸ் நோயை மறைத்தது, ஆனால் அது  ஹாங்காங், டொராண்டோ மற்றும் பிற இடங்களை [Hong Kong, Toronto, and elsewhere] தாக்கிய பின்பே அது ஒத்துக்கொண்டு உண்மை கூறியது. அதேபோல, மீண்டும் இம்முறையும் கிட்ட தட்ட ஒரு மாதம் அது கோவிட் 19 தொற்று நோயை மறைத்துள்ளது. இவை எல்லாம் மேலும் கூடுதலான அழிவைத்தான் தந்துள்ளன. எனவே தொற்று நோய் விடயத்தில் சர்வதேசங்கள் எல்லாம் ஒத்துழைத்து வெளிப்படையாக உண்மையாக இயங்குவது கட்டாயமாகும்.

கலிபோர்னியா தொடக்கம் கொல்கத்தா வரை, பல்வேறு சமூகங்களை கொன்று குவித்த 1918 இன்ஃபுளுவென்சா பக்கம், மீண்டும் கவனம் செலுத்துவோம். இது ஒருசில மாதங்களே தாக்கி இருந்தாலும் 50 மில்லியன் மக்களுக்கு மேல் இதனால் இறந்துள்ளார்கள். அந்த கொடிய நோய் என்னவென்று எவருக்கும் அன்று தெரியவில்லை. சிலர் இது கிரகங்களின் தவறான நிலையால் [misalignment of the planets] ஏற்பட்டது என்றனர். கிரகத்தின் செல்வாக்கால் [“influence”] ஏற்பட்டதாக கருதியதால், இன்ஃபுளுவென்சா [influenza] என்ற பெயரும் அதற்கு வந்தது என்கின்றனர். இறுதியாக 1940  இல் தான் எலக்ட்ரான் நுண்ணோக்கியால் [electron microscope] , அந்த பொல்லாத கிருமியை படம் எடுத்து அதற்க்கு வைரஸ் என்ற பெயரும் சூட்டினர். என்றாலும் இன்று அறிவியல் முன்னோக்கி இருப்பதால், இதன் தொடக்கத்திலேயே வைரஸ் என சந்தேகித்து விட்டார்கள். அது மட்டும் அல்ல இதை காவி பரப்பியது  வெளவால் என்றும் ஊகித்துவிட்டார்கள்.

இன்ஃபுளுவென்சா முதல் பரவிய பொழுது, அதை எப்படி குணப்படுத்துவது என்று புரியவில்லை. இது  ஆண்டிபயாடிக் சகாப்தத்திற்கு முன்னைய காலம் [pre-antibiotic era]. பிரிட்டிஷ் இராணுவ மருத்துவர்கள் இதற்க்கு பண்டைய குருதி வடித்தல் [bloodletting] முறையையும் கையாண்டார்கள். என்றாலும் வெற்றி அளிக்கவில்லை. வெற்றிகரமாக அமைந்தது சுகாதாரத்தை, தனிமை படுத்தலை, சமூக இடைவெளியை பேணியதே ஆகும். ஆகவே இன்றும் ஒரு மாற்று மருந்து அல்லது சிகிச்சை முறை கண்டு கொள்ளாத இத்தருணத்தில் அவையே சிறந்தது என நானும் கருதுகிறேன்.

எப்படி இன்ஃபுளுவென்சா நோயின் காரணம் தெரியாமல், தம் மனம் போன போக்கில் ஊகித்தார்களோ, அதே போல இன்றும் கொரோனா வைரஸ் நோய்க்கு காரணமும் மருந்தும் பரிந்துரைத்து பொய் தகவல்களை பரப்புகிறார்கள். சிலவேளை சில ஊகங்கள் விசித்திரமாகவும், அதே நேரம் உண்மை சாயலும் இருக்கின்றன. உதாரணமாக, பற்சொத்தைக்கு ஒரு காரணத்தை கி மு 5000 / 4000 ஆண்டு சுமேரிய நூல் ஒன்றும், பண்டைக் கிரேக்க இதிகாசக் கவிஞர் ஹோமர் [Homer] என்பவரும், பல் புழுவே ["tooth worm"] காரணம் என்கிறார்கள். இந்த பல்புழுவின் உண்மை சாயல் தான் இன்றைய பாக்டீரியா ஆகும். இனி சுமேரிய நூலில் காணப்பட்ட பல் புழு பற்றிய புராண பாடலை பார்ப்போம்.

"சொர்க்கத்தை அனு [Anu:வான் கடவுள்] படைத்த பின்பு,
சொர்க்கம் பூமியை படைத்தது,
பூமி ஆற்றை  படைத்தது,
ஆறு சதுப்பு நிலத்தை படைத்தது,
சதுப்பு நிலம் புழுவை படைத்தது,
புழு அழுது கொண்டு ஷாமாஷ் [Shamash / சூரிய கடவுள்] முன் சென்றது, 
அதன் கண்ணீர் ஈஅ [Ea / கடல் கடவுள்] முன்னால் ஒழுகிக் கொண்டு இருந்தது
என்னத்தை எனக்கு உணவாய் தருவாய்? 
என்னத்தை எனக்கு சப்புவதற்கு [உறிஞ்சுவதற்கு] தருவாய்? 
நான் உனக்கு பழுத்த அத்திப் பழமும் சர்க்கரை பாதாமியும் [fig and the apricot] தருவேன்
அத்திப் பழமும் சர்க்கரை பாதாமியும் என்னத்திற்கு நல்லது? 
என்னை தூக்கி, பல்லுக்கும்  முரசுக்கும் [teeth and the gums] இடையில் எனக்கு இடம் ஒதுக்கு!
நான் பல்லின் இரத்தத்தை உறிஞ்சுவேன் 
அதன் வேரை முரசில் கொறிப்பேன் 
ஒ புழுவே, நீ இப்படி சொன்னதால்,
உன்னை "ஈஅ" பலமாக தனது வலிமைமிக்க கையால் அடிக்கட்டும்!"

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதற்கு இதுவரை மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்து குறித்தும் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. கொரோனா பரவும் வேகத்தை விட இவைகள் வேகமாக காணப்படுகிறது. உதாரணமாக, பூண்டு சாப்பிடுவது, க்ளோரின் டை ஆக்ஸைட் [chlorine dioxide] குடிப்பது, கொலாடியல் சில்வர் என்னும் வெள்ளித் திரவத்தை [Colloidal silver consists of tiny silver particles in a liquid] பயன்படுத்தல், 15 நிமிடத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பது வாய் வழியே உள்ளே செல்லும் வைரஸை தங்கவிடாமல் செய்யும் என்ற அறிவுரை, சிலர் வெப்பம் வைரஸைக் கொல்லும் என்றும் இதனால் வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்த கூறுவது, ... இப்படியான தகவல்கள் எல்லாம் உண்மையான மற்றும் உறுதிப்படுத்தப் பட்டவை  அல்ல , முழுக்க முழுக்க பொய் தகவல்களே !

✍[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

[முற்றும்] 
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் Theebam.com: வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா? [பகுதி 01]


1 comments:

  1. கொரோனாவின் தொடக்க நிலையை மிகவும் தெளிவாக அறியக் கூடியதாக உள்ளது. 1892 இல் யேர்மனின் கலாறா தொற்றின் பரவல், 2003 இல் சார்ஸ் நோயை சீனா மறைந்தது, 1918 இன் ஃபுளுவென்சா பற்றிய விவரங்கள தொடர்ந்து 1940 இன் ஆய்வுகள் இவ்வாறு தொடரும் இந்த கரூவுலப் பெட்டகம் 5000/4000 ஆண்டுகளுக்கு முன் சுமேரியரால் கண்டறியப்பட்டுள்ள பல் புழு பற்றி விளக்கம் பாடல் வியக்க வைக்கும் கட்டுரை, கொரோனாவிற்கும் அதனுடைய இந்த கட்டவிழ்க பட்ட உலகத்தின் பல விதமான சீர் அழிவிற்கும் காரணம் மனிதனின் கவனக் குறைவே ஆகும். அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் நன்றி.

    ReplyDelete