உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 07



[The belief and science of the sleep]
பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை, தமிழரின் உறங்கும் முறையை கூறும் பொழுது, படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல் மேல் போர்த்தி உறங்குவது நல்ல நெறி என

"கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது
வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி."

என்று பாடல் 30 ஆல் கூறுகிறார். 'வராத வாழ்வு வந்தாலும் வடக்கே தலை வைக்ககூடாது' என்றும் 'விடக்கை ஆயினும் வடக்கு ஆகாது' என்றும் சில பழமொழிகளும் உண்டு. அதையே அவர்கள் பாரம்பரியமாக பின்பற்றுகிறார்கள் எனினும், மன அழுத்தம், பணிப்பளு, பரபரப்பான வாழ்க்கை முறை [இணையம், அலைபேசி,...], இரவு வேலை என, மிகுந்த நெருக்கடிக்கு இடையே பொழுதை கழிப்பதால், எல்லோரும் அப்படி இன்று ஒழுகுவதில்லை. சிலர் பகலில் உறங்குகின்றனர்.

"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்"

என ஒரு சித்தர் பாடல் கூறுகிறது. அதாவது வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல், இரவில் உறக்கம் இல்லாதவரை பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும் என்கிறது.

"வாழ்ந்தாலும் வடக்கே தலைவைக்காதே, கெட்டாலும், கிழக்கே தலைவைக்காதே", என்றும் "வடக்கே தலைவைத்தால் வாடை காத்து, தெக்கே தலைவைத்தால் தென்றல் காத்து" என்றும் சொல்லும் ஒரு வழக்கம் எம் மூதாதையர்களிடம் உண்டு. நம் உடலில் ஒரு காந்த ஆற்றல் இருப்பதாகவும், நமது தலைப்பகுதி  வடதுருவமாக செயல்படுகிறது என்றும், பூமியின் வடதுருவமும் நம் உடலில் உள்ள வடதுருவமும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பதால், நமக்கு நிம்மதியான உறக்கம் இருக்காது என்றும் நம்புகிறார்கள். சமீப கால ஆய்வு படுக்கும் திசை, ஆரோக்கியம், உறக்கத்தின் தரம் இவைகளுக்கு இடையில் ஒரு தொடர்பு இருப்பதை காட்டுகிறது [a significant correlation between the direction of sleep, health, and the quality of sleep].

மேலும் ஒரு புது ஆய்வு, சில பாலூட்டிகள் மேய்வதும் உறங்குவதும் வடக்கில் அல்லது தெற்கில் [some mammals graze and sleep facing north or south direction and the earth’s magnetic field is causing this.] என கண்டு பிடித்து உள்ளார்கள். இதற்கு காரணம் பூமியின் காந்தப்புலம் என்கின்றனர். அதை தொடர்ந்து இன்னும் ஒரு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கிழக்கு- மேற்கு நிலையில் மனிதன் உறங்கினால், அவன் வடக்கு- தெற்கு நிலையில் உறங்குபவரை விட ஒப்பீட்டு அளவில் குறைந்த குறுகிய விரைவு விழி இயக்க [விரைவான கண் இயக்கங்கள்] உறக்க சுழற்சிக்கு உள்ளாவ தாகவும் கண்டு பிடித்து உள்ளார்கள் [ it was found that the human sleeping in the East-west position has lesser shorter rapid eye movement (REM) sleep cycles when compared to people sleeping in the north-south direction].பொதுவாக எம் உறக்கம், முதலில் ஒருவித துயில் மயக்கம், பின் லேசான உறக்கம், அதை தொடர்ந்து மிதமானதில் தொடங்கி ஆழ்ந்த உறக்கம் வரை சென்று, பின் மிகவும் ஆழ்ந்த உறக்கம் கண்டு, இறுதியாக கனவு காணும் உறக்கத்தில் [drowsiness, light sleep, moderate to deep sleep, deepest sleep, and dreaming] முடிவடைகிறது. இதில் விரைவு விழி இயக்க உறக்கம் (REM), ஆழ்ந்த உறக்க சுழற்சியின் இறுதி கட்டம் ஆகும். இது முழு சுழற்சியில் அதிகமாக 20-25% த்தை எடுக்கிறது. விரைவு விழி இயக்கம் பற்றி, நரம்பியல் பாதை வளர்ச்சியில் இருந்து நினைவக ஒன்றுபடுத்துதல் அல்லது பலப்படுத்துதல் வரை [from neural pathway development to memory consolidation] பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. அத்துடன் இது ஒரு முக்கியமான செயல்பாடு [vital function] என்று அறிவியல் ஒப்புக்கொள்ளகிறது. எனவே, இந்த கட்டத்தை அதிகரிப்பது அதிக ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் [health and well being. ] மேம்படுத்த கட்டாயம் உதவும். அதனால் தான் எந்த திசையில் நீங்கள் படுக்கிறீர்கள் என்பதும் முக்கியமாகிறது, உதாரணமாக வடக்கு- தெற்கு நிலையில் படுப்பது உங்கள் விரைவு விழி இயக்கத்தை [REM] கூட்டவும் மற்றும் உங்கள் உடலின் ஆற்றல் ஓட்டத்தை கூட்டவும் துணை புரிகிறது எனலாம் [The position in which you sleep has some beneficial effect on your health like it increases REM and the energy flow of your body]. இன்னும் இந்த ஆய்வு நடைபெறுகிறது, இது வடக்கு தெற்கு, உறங்குவதற்கு ஒரு சிறந்த நிலையாக காட்டுகிறது. ஆனால் தலை வடக்கா, கிழக்கா என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை.

உறங்குவதற்கு தெற்கு திசை மிகச்சிறப்பான திசையாக, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது ஆய்வின் ஒரு பகுதியுடன் ஒத்து போகிறது, ஆனால் மற்றவை முரணாகின்றன, உதாரணமாக, ஆசாரக்கோவை கூறுவது போல, வாஸ்து சாஸ்திரமும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கூறுகிறது. ஒரு மொழியைப் பேசுவோரின் பண்டைய அல்லது பழம் பண் பாடு, வரலாறு, விஞ்ஞான அறிவு போன்றவற்றை அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் நன்றாகப் புலப்படுத்தும். இதன் அடிப்படையில் நாம் நோக்கினால், உதாரணமாக, தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் பழங்காலத்தில் அரணாக இருந்தது. எனவே, ஊடுருவல்கள் எல்லாம் அங்கு வடக்கிலிருந்தே ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும் நான்கு திசையில் இருந்தும் வீசும் காற்றுக் கும் தமிழில் வேறு வேறு பெயருண்டு. அவை பொதுவாக காரண பெயர்களாக இருக்கவே வாய்ப்பு உண்டு. வடக்கில் இருந்து வீசும் காற்றை வாடை என்கின்றனர். இது மக்களுக்கும் மற்றும் விலங்கு, பறவைகள் முதலிய வற்றுக்கும் ஒவ்வாத குளிர் காற்று ஆகும். எனவே ஊடுருவல்கள், வாடைக்காற்று இவை இரண்டின் காரணமாகத் தமிழ் மக்கள் வட திசையை வெறுத்து வந்தனர் எனலாம். பழங்காலத்தில் வாழ்ந்த சான்றோர் மேற் கொண்ட ஒரு வழக்கு வடக்கிருத்தல் எனப் படும்.

வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற் கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் ஆகும். எனவே துக்ககரமான நிகழ்விற்கு, தனக்கு பிடிக்காத வடக்கு திசை நோக்கி இருப்பதை காண்கிறோம். இவை எல்லாம் தமிழர் விரும்பாத திசை வடக்கு என்பதை காட்டுகிறது, இதை உறுதிப் படுத்துவது போல ‘வாழ்ந்தவன் வடக்குப் போகான்...' என்ற பழமொழியையும் காண்கிறோம், இவைகள், ஒரு வேளை வடக்கில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம். அதுவே வடக்கில் தலை வைத்து படுக்காததிற்கும் காரணமாக இருந்திருக்கலாம் என நம்புகிறேன். ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை தமக்கு விரும்பாத வடக்கு - தெற்கு நோக்கி வைப்பதும், அவர்களின் அந்த வடக்கு திசையின் வெறுப்பே ஆகும் போல் எனக்கு புரிகிறது. உதாரணமாக, தமிழரின் முன்னைய நாகரிகமான சிந்து வெளி நகரத்தில் அகழாய்வு செய்கையில் அங்கு இடுகாடு [burial site] மூன்று விதமாக உள்ளது கண்டு பிடிக்கப் பட்டது. அதில் முதலாவது வகையில் இறந்தவரின் உடல் மல்லார்ந்த படுக்கை நிலையில், சவக்குழிகள் வடக்கு தெற்காக வெட்டப் பட்டு, தலைகளை வடக்குப் பக்கமாகத் திருப்பி வைத்து, புதைத்துள்ளது தெரிய வந்தது. இது அவர்களின் வெறுப்பு குறைந்தது 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை மேலும் எடுத்து காட்டுகிறது. மேலும் ஒரு புது ஆய்வு, சில பாலூட்டிகள் மேய்வதும் உறங்குவதும் வடக்கில் அல்லது தெற்கில் [some mammals graze and sleep facing north or south direction and the earth’s magnetic field is causing this.] என கண்டு பிடித்து உள்ளார்கள்.

உறங்குவது என்பது நாம் கருவில் இருக்கும் பொழுதே ஆரம்பமாகிறது..பொதுவாக நாம் குறிப்பிட்ட ஐந்து நிலையில் உறங்கினாலும் , பலர் தலையணைகளின் நிலையிலும் மற்றும் சிலவற்றிலும் வேறுபடுகிறார்கள். உதாரணமாக, குப்புற படுத்து தலையை பக்கவாட்டில் வைத்த படி தங்கள் கைகளை ஒரு தலையணையை கட்டி பிடித்த படி தூங்குகிறார்கள், வேறுசிலர், குறிப்பாக பெண்கள், பக்கவாட்டில் படுக்கும் பொழுது, மார்பக தொய்வை தடுக்க, தலையணையை மார்புப் பகுதியில் அணைத்து வைத்துக் கொண்டு உறங்குகிறார்கள். அப்படியே, கருவில் இருக்கும் குழந்தை போல் தூங்கும் பொழுது இடுப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முழங்கால்களுக்கு இடையில் தலையணையை வைத்து உறங்குகிறார்கள். மற்றும் பலவழிகளில், தலையணையை வசதியான வகையில் வைத்து, உதாரணமாக, கால்களுக்கும் வைத்து உறங்குவது கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் தலையணை குறிப்பிடட கால இடைவெளியில் மாற்றிக் கொள்வது நல்லது. மற்றும்  தலையணை மிகவும் மிருதுவாகவும் இல்லாமல், கடினமாகவும் இல்லாமல், ஒரு நடு நிலையில், பஞ்சினால் செய்யப்படடவாறு இருப்பது நல்லது. 12ஆம் நூற்றாண்டு, ஔவையாரின், ஆத்திசூடி கூறிய 'இலவம் பஞ்சில் துயில்' ஞாபகம் வருகிறது. 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக ; Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01

0 comments:

Post a Comment