தமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு?

தமிழில் பெரும் செலவிலோ அல்லது குறைந்த செலவிலோ சினிமாப் படம் எடுப்பவர்கள், கடந்த 60 வருடங்களாகப் பெரும்பாலும் ஒரே மாதிரிக்கு கதையையே, ஆளை மாற்றியும், பெயரை மாற்றியும் எடுத்துக்கொண்டு  வருகிறார்கள். அப்படி எடுத்தால்தான் இரசிகர்களும் விழுந்து, விழுந்து பார்க்கும் ரசனை நிலை தற்பொழுது நிலவுகிறது.

அதுவும், பெரிய நடிகர்கள் அதே கதையை வேறு பெயரில் எடுத்து, பெரும் ஆரவார விளம்பரங்கள் எல்லாம் செய்து வெளியிடமுன்னரே, மக்கள் இப்படத்தினை வானுயரத்துக்குப் புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். படம் வெளிவந்ததும், நடிகனுக்குப் பனை உயரக் 'கட்டவுட்' டுகள் கட்டி,  அவருக்கு குடம் குடமாகப் பாலாபிஷேகம் செய்து, கூடைக் கணக்கில் மலர் மழை தூவி ஆராதனை செய்து படத்தைத் தொடக்கி வைப்பார்கள்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்ததும், அந்தப் படைத்தைப் பற்றியோ அல்லது நடிகனைப் பற்றியோ மிகவும் உயர்த்திக் கதைக்கும் மனோபாவம் உடையவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஏதாவது அப்படி எதிர்மறையாகக் கதைத்தால் அது பெரும் தெய்வ நிந்தனை, ராஜ துரோகம் அல்லது கிரிமினல் குற்றம் என்று எண்ணும்  ஒரு மயக்க நிலையில் இருக்கின்றார்கள். வழக்கமான பழி வாங்கும் மசாலாப் படமாய் இருந்தாலும், எதோ ஒரு புதிய கதை ஒன்றை அறிந்ததுபோலவே உயர்வாகக் கதைத்துக் கொள்ளுவார்கள்.

தமிழ் மக்கள், ஐரோப்பியர்களை போல் இல்லாது தமிழ் ந டிகர்-நடிகைகளை எதோ தெய்வங்களை போல் பார்க்கின்றார்கள். அவர்களைப் பற்றி அல்லும், பகலும் பேசிக்கொள்கிறார்கள். அவர்களைக் காண்பதே ஒரு தெய்வ கைங்கரியம் என்று ஏங்குகின்றார்கள். அவர்கள் கோடி, கோடியாக இவர்கள் மூலம் பணம் சம்பாதித்ததாக கொண்டே போவார்கள். ஒரு சிலரைத்தவிர ஏனையோர் எந்த ஒரு பொது நற்காரியங்களுக்கு உதவி செய்ய மாடடார்கள். ஆனால், மக்கள் இவர்களை மிகவும் உயர்ந்த இடத்தில்தான் வைத்து, கடவுளுக்கும் மேலாக நோக்குவார்கள். 

ஒவ்வொரு முறை படத்தைப் பார்த்து வந்ததும், 'நல்ல சிறந்த கதை' என்று கூற தவற மாடடார்கள். 

கதை, ஏதோ பின்வரும் அம்சங்களில் சில, பலவற்றை மட்டும்தான் கடடாயம் கொண்டிருக்கக் காணலாம்:

*. கதாநாயகன் படிப்போ, வேலையோ இல்லாதவனாக, தொடர் சிகரட் ஊதி, தண்ணி அடித்து, அரட்டை அடிக்கும், பெற்றோரை மதிக்காத, அழகே இல்லாத பொறுக்கியாக இருப்பான்.  பல பெண்கள் அவன் காதலுக்காக அலைந்து திரிய, கடைசியில் அவன் குடும்பத்தின் பயங்கரமான பழைய எதிரியின் அழகான, படித்த, செல்வந்த மகளுக்கே அந்தப் பேறு கிடைக்கும். 
ஆங்காங்கு சில மாறுதல் செய்யலாம்; அவன் விரும்ப, அவள் முதலில் விரும்பாமல், வில்லன் அல்லது வில்லி, மகள் அல்லது தங்கை என்று போட்டு முற்றிலும் வேறு கதையாக மாற்றலாம்.

*. கதாநாயகியை முதலில் காட்டும்போது, கூந்தலால் முகத்தை மூடிவிட்டு, தலையை ஒரு சுழற்றுச் சுழற்றி, கூந்தலை விலத்தித் திருமுகத்தைக் காட்டவேண்டும். அவள் தமிழ் கஷ்டப்பட்டுக் கதைக்க வேண்டும். பெற்றோரை டாடி, மம்மி என்று கூப்பிடவேண்டும்.

*. கதாநாயகனை முதலில் காட்டும்போது, ஒரு பெரிய வீர சூரானாகக் காட்டவேண்டும். சுப்பர்மான், ஸ்பைடர்மான், ப்ரூஸ் லீ  தோற்க வேண்டும். பல கிரேன்களைப் பாவித்து பறவைகாவடிபோலச் சுழன்று, பறந்து தாக்கவேண்டும்.

- நாயகன் ஒரே பாடலில், பிச்சைக்காரனாய் இருந்து இந்தியாவின் நம்பர் 1 தொழில் அதிபராகவோ அல்லது பெரும் பணக்காராய் இருந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு வரலாம்.

*. நாயகன்- நாயகி இருவருக்கும், கனவிலும் நிஜத்திலும் ஒரு 4 - 6 குத்துப் பாடல்கள், பின்னணியில் ஒரு 50 - 100 பேருடன், பலவித நவீன உடைகளுடன் பேயாட்டம் ஆடவேண்டும். 
முக்கியமாக பெண்களின் வயிறு/ கழுத்து ஒரு 300 மி.மீ. வெற்றுடம்பு தெரிய வேண்டும். முதுகு ஒரு சின்ன நாடா போதும்.

*. அடியாட்கள் கருத்த, தடித்த, முடி வளர்த்த, தாடி உள்ள/அற்றவர்களாக ஆங்காங்கு நிற்க வேண்டும். கைகளில் இரண்டரை அடி நீள, நாலு இஞ்சி விட்டப் பிளாஸ்டிக் தடி அல்லது பிளாஸ்டிக் கத்தியுடன் திறந்த வண்டியில் நகர மத்தியில் கொக்கரித்தபடி திரிய வேண்டும். இடைக்கிடை இறங்கி ரவுடித்தனம் பண்ணிக்கொண்டே போகவேண்டும்.

*. ஒரு 5 - 6 x (5 -10) நிமிடச் சண்டை. வில்லனின் அடியாட்கள் 12 பேரும் எவ்விதம் தாக்கினாலோ, சுட்டாலோ ஒன்றுமே அவனில் படவே கூடாது. ஆனால், நாயகனின் ஒரே கைவீசல், 12 பேரையும் துளைத்து, வளைத்து, நொறுக்கி, முறித்து,  2 + 2 கிடைப்பக்க, நிலப்பக்க சுழற்சிகளோடு அலறிச் சுவரோடு/ காரோடு/மரத்தோடு  மோதி விழவேண்டும். இரத்தம் ஆறாகப் பாயவேண்டும். சண்டையின் போது, குறுக்கே நிற்கும் மரக்கறி வண்டிகள் (கட்டாயம்), பானைகள், தகரப் பீப்பாக்கள், ஓட்டோக்கள், கார்கள் எல்லாம் உடைந்து நொறுங்கவேண்டும். கார்கள், லாரிகள் மூலம் கலைத்துக் கலைத்தும் சண்டை பிடித்துக் கதையை அடியோடு மாற்றலாம்.

* சண்டை முடிவில் நாயகன் திரும்பிப் பாராமல் நடந்துகொண்டிருக்கும்போது, எதிரிகள் வந்து கொடூரமாகத் தாக்கி, விழுத்தி, அவன் இறந்துவிட்டான் என்று விட்டு விட்டுப் ஒரேயடியாய்த் திரும்பிப் பாராமல் போக, அவன் சீறிப்பாய்ந்து,'டேய்' என்று அவர்களை அழைத்து, திரும்பவும் அடிவாங்கியும், கடைசியில் அவர்கள் எல்லோரையும் கொல்லவேண்டும்.

*நாயகனைப்  பிடித்த வில்லனும், அடியாட்களும் அவனை ஒரே சூட்டில் கொல்லாமல், அவனைக் கொல்வதற்கான நியாயத்தினச் சொல்லி விளங்கப் படுத்த வேண்டும். அல்லது, ஏதாவது, சிக்கலான புதிய பொறிமுறை யுக்தியில் அவனைக் கொல்லச் சிக்க வைத்துவிட்டு, இனிச் செத்துவிடுவான் என்றுவிட்டுப் போகவேண்டும். ஆனால், அவன் சாகாது பிழைத்து வந்து அவர்களை ஒழிக்க வேண்டும்.

*. இவர்கள் எந்தவிதமாகவும், எந்தனை பேரையும் ஓட ஓட வெட்டலாம், கொல்லலாம். போலிஸ் விசாரணை ஒன்றும் இருக்காது. அவர்கள் வைத்ததே சட்டம் என்று இருத்தல் வேண்டும்.

*. அரசில்வாதி, மந்திரி என்றால் மறு பெயர் படு அயோக்கியன், யாவரும் பயப்படும் ஒரு பணக்காரனாகச் சித்தரிக்க வேண்டும்.  கள்ளக் கடத்தல், கொள்ளை அடித்தல், தீர்த்துக் கட்டுதல்,  லஞ்சம் வாங்குதல் என்று எல்லாம் இருக்க வேண்டும். வில்லனின் மகன் மகா, மகா அயோக்கியன். வில்லனின் மனைவி நல்லவள். குற்றச்செயல்கள் பற்றிக் கதைக்க ஒரு கைவிடப்பட்ட அல்லது கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கும் கட்டிடம் தேவை. 

*. வில்லன் ஒன்றுக்குப்  பின்னால் ஒன்றாய் ஒரு பத்து வெள்ளைக் கார்களிலோ அல்லது 4wd  களிலோ வந்து 1 , 2 , 3  சொல்லி ஒரே நேரத்தில் கதவுகள் திறக்கப்பட்டு இறங்கவேண்டும். அவர்கள் தமக்கு  எதிரானவர்களை வெட்டிக் கொல்லும்போது சகலரும் ஒரு பெரிய வட்டத்தில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டும்.

*. கதாநாயகனைப் பிடிக்க, வில்லன் கடத்துவதற்கு  ஒரு தங்கைச்சி / மனைவி/ காதலி/குழந்தை  இருந்தால் நல்லது. கடத்தினதும் அப்படியே விலாசத்தினை மோப்பம் பிடித்து அவ்விடத்தை கதாநாயகன் அடைய வேண்டும்.

*. வீட்டுப் பத்திரம் யார் கையில் இருக்கின்றதோ அவர்களுக்கே அந்த வீடு சொந்தம். அல்லது, சொத்துகளைப்  பலவந்தமாகக் கையெழுத்து வைக்கப் பண்ணியும்  சொந்தமாக்கலாம். (கள்ளக் கையெழுத்துப் போட அஞ்சும் வில்லன்). லோயர், கச்சேரி என்று ஒன்றுமே  தேவை இல்லை.

*.  துணைக்கு ஒரு கொமேடியன் நடிக்கலாம். கூட்டாளிகளும் ஒரு நாலைந்து பேர் இருக்கலாம். இந்த எண்ணிக்கையை மாற்றியும் கதையை அடியோடு முற்றாக மாற்றலாம்.

*இறுதியாக ,பழிவாங்க சென்ற காதலனைத் தேடி காதலி/தாய்  வருகின்றாள் என்றால் நிச்சயமாக வில்லனிடம் அவள் முட்டாள் போன்று அகப்பட்டுவிடுவாள். அவளையும் புத்திசாலியான நாயகனே வந்து மீட்கவேண்டும்.  

*இறுதிச் சண்டையில் காதலி/தாய் கன்னத்தில் விழும் ஒரு அடியுடன் அவள் விழுந்து மண்டையில் அடியுடன் மயங்கி சண்டை முடிந்தபின்னரே விழித்துக் கொள்வாள்.

* கதையின் கரு எப்படியும் ஏழை நாயகன், பணக்கார நாயகியைக் கடைசியில் மணம் செய்ய வேண்டும். அங்கும் இங்கும் ஒரு சில சிறு மாறுதல்களைச் செய்து விதம் விதமான பெயர்களுடன் புதுப்புதுப் படங்கள் எடுக்கலாம்.



*நல்ல நோக்குடன் கதாநாயகன் செய்யும் கொலைக்கு தண்டனையாக  25 வருடமாய் ஜெயலில் இருந்து கஷ்டப்பட்டு, அவன் கதவை விட்டு வெளியில்  வந்ததும் ஆகாயத்தை பார்க்க வேண்டும். (உள்ளே இவ்வளவு காலமும் மேகத்தை காடடவே இல்லையாம்!). பின்பு 25 வருடமாக உல்லாசமாகவே வாழ்ந்து முடித்துக் கொண்டு இருக்கும் வில்லனை, அவனின் கடைசி காலத்தில் பழிவாங்க வேன்டும்.

இந்தனை விடயங்களையும் அங்கும், இங்குமாகப் பொறுக்கிப், பின்னிக் கதை பண்ணிப் படம் எடுத்தால்தான் படம் ஓடும். இப்படிப்படட படங்களைத்தான் தயாரித்துக்கொண்டே இருப்பார்கள். மக்களும் பெரும் ரசனையுடன் பார்த்தது, கைதட்டிக்கொண்டே அந்த நடிகர்களுக்காகக் கொடி பிடிப்பார்கள்; சிலர் உயிரையும் கொடுக்கத்  தயங்கமாடடார்கள்.

இப்படியான கதைகளை விட்டுவிட்டு, லைனை மாற்றிச் சும்மா காகம், முடடை, அப்பா, சுப்பா என்று கதை பண்ணினால் யாருமே திரும்பிப் பார்க்க மாடடார்கள்.

என்ன வசியமோ ஒன்றும் புரியவில்லை! மக்கள் நடிகர் மோகத்தில் மயங்கிப்போய் ரசனை குன்றிக் கிடக்கின்றார்கள்!

எண்ணம் :செல்வத்துரை சந்திரகாசன் 

4 comments:

  1. கண்ணன்Sunday, August 14, 2016

    தற்போது வந்த கபாலி என்ற படமும் அப்படித்தானே! அதில் என்ன இருக்கின்றது என்று சனங்கள் பெரும் மனக் கிளர்ச்சியோடு கதைக்கின்றார்கள்; பார்க்கின்றார்கள்?
    தலைவா, தலைவா என்று ரஜனிகாந்தை அழைக்கிறார்களே, என்ன விடயத்தில் அவர் தலைவராம்?
    ஒன்றுமே புரியவில்லை!

    ReplyDelete
  2. அக்காலத்தில் உதாரணமாக ஒரு சிவாஜி கணேசன் திரைப்படத்தில் தனது தங்கையின் காதலன் குடிகாரன் என அறிந்து அது பெரும் குறைபாடாக கவலைகொண்டு தங்கைக்கும் தெரியாத அப்பழக்கம் கெடுதியானது என அக்காதலன் உணரும் வகையில் தான் ஒரு குடிகாரன் போல் நடித்து அதன் விளைவுகளை காட்டி காதலன் முத்து ராமனை திருத்தி திருமணம் செய்து வைக்கிறான்.ஆனால் இன்று படம் முழுக்க குடியும்,புகையும்,மனிதனை குத்தியும் வெட்டியும் குத்தறியும் வலு சாதாரணமாக முடிக்கிறார்கள்.இது தான் மக்கள் மத்தியிலும் இவை சாதாரணமாக நடந்து வருகிறது.

    ReplyDelete
  3. அக்காலத்தில் உதாரணமாக ஒரு சிவாஜி கணேசன் திரைப்படத்தில் தனது தங்கையின் காதலன் குடிகாரன் என அறிந்து அது பெரும் குறைபாடாக கவலைகொண்டு தங்கைக்கும் தெரியாத அப்பழக்கம் கெடுதியானது என அக்காதலன் உணரும் வகையில் தான் ஒரு குடிகாரன் போல் நடித்து அதன் விளைவுகளை காட்டி காதலன் முத்து ராமனை திருத்தி திருமணம் செய்து வைக்கிறான்.ஆனால் இன்று படம் முழுக்க குடியும்,புகையும்,மனிதனை குத்தியும் வெட்டியும் குத்தறியும் வலு சாதாரணமாக முடிக்கிறார்கள்.இது தான் மக்கள் மத்தியிலும் இவை சாதாரணமாக நடந்து வருகிறது.

    ReplyDelete
  4. சாந்தன்Wednesday, September 02, 2020

    அத்தோடு, கதாநாயகி வெளி மாநிலத்தைச் சேர்ந்த வெள்ள்ள்ளைப் பெண்ணாய் இருக்கவேண்டும். முதலில் காட்டும்போது, தலையை ஆட்டி, ஆட்டி, சிரித்து, சிரித்து பக்கத்தில் உள்ளவர்களுடனும், சிறு குழந்தைகளுடனும் கதைத்துக் கொண்டு வர, கதாநாயகன் ஏங்கிப்போய் நின்று பார்க்க வேண்டும்!

    ReplyDelete